தன்பாலின திருமண வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வுக்கு உத்தரவு!

– உச்சநீதிமன்றம் அதிரடி

ஆங்கிலேயே ஆட்சியின் போது இயற்றப்பட்ட 377-வது சட்டப்பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாக கருதப்பட்டது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக “தன்பாலின உறவு” குற்றமல்ல என்று கடந்த 2018-ல் உச்சநீதிமன்றம் தீர்பளித்தது.

இதைத் தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த ஜனவரி 6-ம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு விசாரணையில் இருந்தது.

இந்த வழக்கில் ஒன்றிய அரசு மிக முக்கியமான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது.

அதில், ”ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் அல்லது சட்டப்பூர்வமான அனுமதி வழங்குதல் என்பது சமூகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். சட்டம், சமூக ரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இத்தகைய சலுகைகள், அங்கீகாரங்களை நீதிமன்றங்களும் முடிவு செய்ய முடியாது” என்றுக் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது இவ்வழக்கு விசாரணைகள் அனைத்தும் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதோடு ஏப்ரல் 18ம் தேதி முதல் இவ்வழக்கு விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

You might also like