– நீதிபதி பி.வி.சாண்டில்யன்
திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சர்வதேச உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு வளரிளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி பி.வி.சாண்டில்யன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் பேசிய அவர், “பெண் குழந்தைகளுக்கு கல்விதான் முக்கியம் என்பதை உணர்ந்து உயர்கல்வி வரையில் பெற்றோர்கள் படிக்க வைக்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு தீய தொடுதல், நல்ல தொடுதல் குறித்து எடுத்துரைக்கவும். சட்டம்குறித்த விழிப்புணர்வும் அவசியம். பணியிடங்களில் பாலின பேதமும் பாலியல் சீண்டலும் இன்னமும் தொடர்வது வேதனையானது.
தற்போதைய நிலையில் அனைத்து இடங்களிலுமே ஆண்களுக்கான வாய்ப்பு, பெண்களை ஒப்பிடும்போது சற்று அதிகமாகவே உள்ளது. ஆனாலும் அவர்கள் செய்யும் பணிக்கு போதிய அங்கீகாரமோ ஆதரவோ கிடைப்பதில்லை.
எனவே பாலின சமத்துவத்தை சமுதாயத்தில் விதைக்கும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதேபோல், பாலின சமத்துவத்தை நோக்கி மகளிர் தொடர்ந்து முன்னேறுவதை உறுதிசெய்ய நல்ல பணிச்சூழலையும் குழந்தை திருமணம் இல்லாத சமுதாயமாக உருவாக்க வேண்டும்” எனக் கூறினார்.