குளக்கரையில் நினைவலைகளில் மூழ்கிய மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ளார்.

சென்னையில் இருந்து நேற்று விமானத்தில் திருச்சிக்குச் சென்ற முதலமைச்சர், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் வழியாக திருவாரூர் சென்றுள்ளார்.

இன்று மன்னார்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு இல்லத் திருமணத்தை தலைமை வகித்து நடத்தி வைக்கிறார்.

இதனிடையே, திருவாரூரில் குளம் ஒன்றில் அமர்ந்து பழைய நினைவுகளை அசைபோட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் தோற்றமளிக்கும் ஆனாலும் அது குளம்தான் என்றும் அதன் நடுவண் கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் கலைஞர் என்றும்,

இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறுவயது நினைவுகள் அலைமோதியது என்றும் நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர் இருப்பார் என்றும் நெகிழ்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

முன்னதாக திருவாரூர் கமலாலயக் குளத்தின் வடக்குக் கரையிலிருந்து படகின் மூலம் குளத்தின் நடுவில் உள்ள நடுக்குள நாகநாத சுவாமி கோயிலுக்குச் சென்று திரும்பினார்.

அப்போது சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன், மக்களவை திமுக உறுப்பினர் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர்

You might also like