மாணவ உளவியல் பின்பற்றப்பட வேண்டாமா?

சமகாலக் கல்விச் சிந்தனைகள் : 13

ஒரு மருத்துவமனையில் சேரும் நோயாளிகளை அவரவரது உடல்நிலைக்கேற்ப சிகிச்சை அளிப்பது எப்படி முக்கியமோ அதுபோல் பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளை அவரவரது உளநிலைக்குத் தக்கவாறு பேணிக் கல்வியளித்தல் அவசியம் என உலகிற்கு உணர்த்தியவர் பிரான்ஸ் நாட்டின் உளவியல் அறிஞர் ரெனெய் ஸாஸோ.

இதை உலகக் கல்வியாளர்கள் என்ற நூலில் ஆயிஷா நடராஜன் குறிப்பிடுகிறார்.

இதை இன்றைய கல்விச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்தோமானால், உண்மை நிலவரம் குறித்து அறிந்துகொள்ளலாம். இன்று குழந்தைகள் உளவியல் குறித்து பரவலாகப் பேசப்படுகிறது.

பள்ளிகளில் மாணவர் உளவியல் (Student Psychology) குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக உரத்த குரல்களின் சத்தம் அவ்வப்போது கேட்கின்றன.

ஆனால், உண்மையில் பள்ளிகளில் மாணவர் உளவியலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா?

மாணவர் உளவியல் என்பதை கல்வி உளவியல் (Educational Psychology) துறையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறோமோ என்பதெல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவை.

கல்வியின் உளவியல் என்ற துறையானது ஏராளமான உட்கூறுகளை உள்ளடக்கியவை.

கற்பவர், கற்பிப்பவர், பாடப் பொருள், கற்பிக்கும் முறை, கற்பவரது குடும்பச்சூழல், கற்பவரது உளவியல் சூழல், பெற்றோர்கள், அதே போல கற்றுக் கொடுக்கும் நபர்களையுடைய சூழல், அவர்களது உளவியல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவற்றை அனைத்தையும் புறம்தள்ளி குறிப்பிட்ட பாடப்பொருளை புரிகிறதோ, இல்லையோ குறிப்பிட்ட நாட்களுக்குள் கற்பித்து முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்துடன் மட்டுமே நமது வகுப்பறைகள் கட்டமைக்கப்படுகின்றன. இதுதான் குழந்தைகளின் சாபக் கேடாக இருக்கிறது.

மரபார்ந்த கற்பித்தல் முறைகளை தங்கள் கையில் வைத்திருக்கும் பள்ளி முறைகள் மாணவர் உளவியல் என்ற கற்றலின் அடிப்படைத் தத்துவத்தைப் புறம் தள்ளுவதுடன், அதற்கான எந்த ஆய்வுகளையும் கைக்கொள்வதில்லை என்பதும் கசப்பான உண்மை.

தனியாள் வேறுபாடுகள் (Individual Difference)தான் கற்றலின் வேகத்தை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணி.

ஆனால், எந்த அளவிற்கு இதைக் கணக்கில் எடுத்துக் கொண்ட கல்விமுறை நம்மிடையே பின்பற்றப்படுகிறது என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.

படித்த பட்டதாரிப் பெற்றோரின் குழந்தைகள், மிக உயரிய பதவியில் செழிப்பான பொருளாதாரச் சூழலில் வளரும் குழந்தைகளின் திறன்கள் ஒருபுறம்.

பெற்றோரே இல்லாத குழந்தைகள், அடிப்படைக் கல்வியறிவுகூட பெற்றிராத பெற்றோர்களின் குழந்தைகள், வறுமையில் உழலும் குழந்தைகள், தெருவோரக் குழந்தைகள் என அனைத்து வகையான குழந்தைகளையும் மறுபுறம் வைத்துக் கொள்ளலாம்.

இந்த இரு பிரிவினைத் தாண்டியும் பழங்குடியின குழந்தைகள், ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவிலிருந்து வரும் குழந்தைகள் இன்னொரு புறம். எல்லாப் பிரிவினரிலும் பெண்கள் என்ற ஒடுக்கப்பட்டப் பிரிவினரையும் சேர்த்து கவனம் தருதல் அவசியமாகிறது.

இவர்களோடு சேர்த்து கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் என்ற தனிப் பிரிவினர் குறிப்பிட்ட சதவீத எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

இத்தனைப் பாகுபாடு உள்ள அனைத்துக் குழந்தைகளையும் கற்றலில் ஈடுபடுத்த மாணவர் உளவியல் என்ற பிரிவு மிகவும் அவசியமாகிறது.

தாரே ஜமீன்பர் திரைப்படத்தில் ஆசிரியராக வரும் அமீர்கான் என்ற பாத்திரத்தை நம்மால் மறக்கமுடியாது. ஒரு மாணவனை பள்ளி ஆசிரியர்களும் பெற்றோரும் வெறுத்து ஒதுக்கும் எதார்த்தத்தைத் தான் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

இஷான், அவன் படித்துக் கொண்டிருந்த பள்ளியிலிருந்து வேறொரு பள்ளிக்கு அனுப்பப்படும் போது, ஒரு மாணவர் உளவியல் அறிந்த ஆசிரியரால் கவனிக்கப்படுகிறான். அவர், அவனிடம் இருந்த கற்றல் குறைபாட்டை அடையாளம் காண்கிறார்.

டிஸ்லெக்சியா (Dislexia) என்ற எழுத்துகளை அறிந்துகொள்வதில் உள்ள இஷானின் கற்றல் குறைபாட்டை இனம் கண்டறிந்ததுடன் அவனது ஓவியத் திறமையையும் வெளிக் கொணர்ந்து மிகப் பெரிய அளவில் வெற்றிபெற வைக்கிறார்.

இது திரைப்படம், ஆனால் இதிலிருந்து நாம் பெறும் அனுபவம் இஷானுக்கு நடந்த வெற்றி எல்லா நிலையில் வாழும் கற்றல் குறைபாடுள்ள மாணவருக்கும் நடந்து விடுகிறதா?

இந்தத் திரைப்படம் வந்த பிறகுதான் ஆசிரியர்கள் மத்தியில் கற்றல் குறைபாடு குறித்த ஒரு உரையாடல் மிகச் சிறிய அளவிலாவது உருவானது.

இன்றைய 21 ஆம் நூற்றாண்டு நடைமுறைக் கல்வி அமைப்பில் மாணவர் உளவியல் எத்தகைய கவனம் பெற்றுள்ளது? குறிப்பாக தமிழ்நாட்டில், பள்ளிகளும் அரசும் கல்வித் துறையும் மாணவர் உளவியலுக்கு எத்தகைய முக்கியத்துவத்தை நிஜமாகக் கொடுக்கின்றனர் என்ற கேள்விகளை நாம் முன் வைக்க வேண்டும்.

இன்றாவது மாணவர் உளவியல் என்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பள்ளிகளில் இடைநிற்றல் நிகழ்வதில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமாக கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள்தான்.

எழுத்துகளைப் புரிந்துகொள்வதில் சிக்கல், தடுமாற்றம், வேகக் குறைபாடு, அதனால் பின்தங்கிக் கற்றல் என அவர்களது பிரச்சனையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்தான் பள்ளிக்கல்வித்துறை அறியாமை இருளில் இயங்கிக் கொண்டிருந்துள்ளது.

35 மதிப்பெண்கள் வாங்கவில்லை என்றால் (Fail) தேர்ச்சி பெறவில்லை என்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே வைத்த கல்வி முறையில் மாணவர் உளவியல் எங்கிருந்தது?

மாவட்ட அளவில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கற்றலில் குறைபாடுள்ள பள்ளிக் குழந்தைகள் குறித்த ஆய்வறிக்கை இருந்ததா?

பள்ளிகளிலேயே ஆசிரியர்களிடம் இது மாதிரியான ஆய்வறிக்கைகள் இருந்ததா அல்லது நிகழ்காலத்திலாவது கோப்புகள் தயாரித்த மாணவர் குறித்த ஆய்வு (Case Study) இருக்கிறதா என்பதெல்லாம் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவை.

ஆகவே, கல்வி முறையில் மாற்றங்கள் வருவதை நாம் ஆதரிக்கவேண்டுமெனில் மாணவர் உளவியல் குறித்து கவனம் தருவதை முதன்மைப்படுத்த வேண்டும்.

சு.உமா மகேஸ்வரி

You might also like