திரையில் மிகச் சில பாத்திரங்கள் மட்டுமே நடமாடுவதைக் காண்பதென்பது, எப்போதும் ஒரேவிதமான அனுபவத்தைத் தராது. சில நேரங்களில் அதுவே சோகமாகவும், சில நேரங்களில் சுகமாகவும் மாறும்.
ஒரு டஜனுக்கும் குறைவான பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும் ‘பிகினிங்’ படமும் அந்த வரிசையில் சேர்கிறது.
ஜெகன் விஜயா இயக்கியிருக்கும் இப்படம், ஆசியாவின் முதலாவது ‘ஸ்பிளிட் ஸ்க்ரீன்’ படம் என்ற பெருமையைப் பெறுகிறது. அதாவது, திரையில் இரு வேறு பிரேம்களில் ஒரே நேரத்தில் கதை விரியும்.
ஒரு பிரேமில் வசனம் பேசும்போது, இன்னொரு பிரேமில் வசனம் கிடையாது என்று திட்டமிட்ட வகையில் புதிய அனுபவமொன்றை வழங்குகிறார் இயக்குனர்.
ஒரு மெல்லிய கோடு!
ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான பாலசுப்பிரமணியம் (வினோத் கிஷன்), தன் தாயோடு (ரோகிணி) வசிக்கிறார். வேலைக்குச் செல்லும் போது பாலுவை வீட்டில் விட்டுவிட்டு, வெளியில் பூட்டிவிட்டுச் செல்வது அத்தாயின் வழக்கம்.
அவ்வாறே, ஒருநாள் காலையில் பாலுவுக்குத் தேவையான உணவு, மருந்து எல்லாம் எடுத்து வைத்துவிட்டு கிளம்புகிறார்.
சாப்பிடுவது, டிவி பார்ப்பது, மருந்து சாப்பிட்டு தூங்குவது ஆகியன தான் பாலு செய்ய வேண்டிய பணிகள். ஆனால், அன்றைய தினம் பாலுவின் வாழ்வே தலைகீழாக மாறுகிறது.
அவரது மொபைலுக்கு ஒரு அழைப்பு வருகிறது. எதிர்முனையில் பேசும் பெண் ஒரு ஆபத்தில் சிக்கியிருக்கிறார். அவரது பெயர் நித்யா (கவுரி கிஷன்).
ஐடி நிறுவனமொன்றில் பணியாற்றிவிட்டு வெளியே வரும் நித்யாவை, முகமூடி அணிந்த மூன்று நபர்கள் கடத்திவிடுகின்றனர். ஒரு அறையில் பூட்டி வைக்கின்றனர்.
வெளியே செல்ல வழி இல்லாத நிலையில், தன்னை யார் கடத்தியது என்று தெரியாத நிலையில், ஒரு மொபைல் மட்டும் அவருக்குக் கிடைக்கிறது.
டயல் செய்யும் பட்டன் வேலை செய்யாத நிலையில், அந்த மொபைலில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரே ஒரு எண்ணுக்கு ‘கால்’ செய்கிறார் நித்யா. அதுவே பாலுவின் மொபைலுக்கு வருகிறது.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பாலுவால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. அவரிடம் தன்னைக் காப்பாற்றச் சொல்லி உதவி கேட்கும் கட்டாயத்தில் இருக்கிறார் நித்யா.
பாலுவிடம் பேசப் பேச, நித்யாவின் வாழ்வில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்வதில்லை; அதற்கு நடுவே, தன்னைக் கடத்தியவர்கள் காட்டும் கொடூர முகத்தையும் அவர் எதிர்கொள்ள வேண்டும்.
அவரது மனம் அந்த சூழலைக் கையாள்வதற்குத் தயாராகிறது. இடையிடையே பல தடைகள் இருவரையும் பேசவிடாமல் தடுக்கின்றன.
அனைத்தையும் மீறி நித்யாவைக் காப்பாற்றத் துடிக்கிறார் பாலு. அவரால் அதனைச் செய்ய முடிந்ததா இல்லையா என்பதைச் சொல்கிறது ‘பிகினிங்’.
சாத்தியமில்லாததைச் சாத்தியப்படுத்தும் வழக்கமான ஹீரோயிச கதைதான். ஆனால், அதனை அசாதாரணமான பாதிப்பைக் கொண்டிருக்கும் ஒரு நாயகன் சாதிப்பதாகக் காட்டியதில் வித்தியாசப்படுகிறது.
ஒரு மெல்லிய கோடு போன்ற கதையை இரு வேறு பிரேம்கள் வழியே சொல்ல முடியும் என்று யோசித்த வகையில், நல்ல தொடக்கம் கண்டிருக்கிறார் இயக்குனர் ஜெகன் விஜயா.
அசத்தும் வினோத் கிஷன்!
ஆட்டிசம் பாதிப்புக்குள்ளான ஒருவரின் மழலைப் பேச்சும் அடம்பிடிக்கும் சுபாவமும், மிகச்சில நிமிடங்களிலேயே அப்பாத்திரத்தை எரிச்சல் ஊட்டுவதாக மாற்றிவிடும். அப்படியொரு எண்ணம் எழாமல் பார்வையாளர்களைத் தடுப்பது வினோத் கிஷனின் நடிப்பு.
இதேபோன்ற பாத்திரங்களைத் தமிழில் பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஆனால், கதைக்கும் காட்சிக்கும் மட்டும் பொருத்தமானதாக இல்லாமல் பார்வையாளர்களும் ரசிக்கும்படி நடிக்கும் வித்தை அவருக்கு வாய்த்திருக்கிறது.
96 படத்தில் வந்த கவுரிக்கு இதில் கொஞ்சம் பக்குவமான வேடம். முதல் பத்து நிமிடங்களில் நம்பிக்கையே இல்லாமல் நடித்தாலும், போகப் போக மீட்டரைப் பிடித்துவிடுகிறார்.
வினோத், கவுரி தவிர இப்படத்தில் பெயர் சொல்லும்படியாக நடித்திருக்கும் இன்னொருவர், கவுரியைக் கடத்துபவராக நடித்த சச்சின்.
குரூரத்தை வெளிப்படுத்தும்போதும் புன்னகைத்தவாறே இருக்கும் வகையில் அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவர் அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் தமிழ், தெலுங்கில் பிஸியான வில்லனாக சச்சினைப் பார்க்க முடியும்.
இரண்டொரு காட்சிகளில் வந்தாலும், திரையரங்கம் வரும் ரசிகர்களை அமரவைக்க ரோகிணி இருப்பே காரணம். லகுபரன் வரும் பகுதிகள் ஓகே ரகம்.
கிளைமேக்ஸில் வரும் கேபிஒய் பாலாவும் லேசாகச் சிரிக்க வைத்திருக்கிறார். அவர் வரும் பகுதிகளை இன்னும் நன்றாகவே படம்பிடித்திருக்கலாம்.
சச்சினின் நண்பர்களாக வரும் சுர்லி, மகேந்திரன் ஆங்காங்கே ரசிக்க வைக்கின்றனர். எண்பதுகளில் வரும் வில்லன்கள் போல அவர்கள் காட்டும் பாவனைகள் மட்டும் முகம் சுளிக்க வைக்கின்றன.
மிகச்சிறிய இடம். மிகச்சில பாத்திரங்கள். இருந்தாலும், காட்சிகளில் நிரம்பியிருக்கும் பரபரப்பைக் கடத்தியிருக்கிறது வீரகுமாரின் ஒளிப்பதிவு. படத்தொகுப்பைக் கையாண்டிருக்கும் சி.எஸ்.பிரேம்குமார் சில இடங்களில் ‘கட்’ கொடுக்க மறந்திருக்கிறார்.
கலை இயக்குனர் முருகமணிக்குப் பெரிதாக வேலையில்லை. ஸ்டோர் ரூம், ஹால் செட்டப்பில் மட்டுமே கதை நிகழ்வதற்கேற்ப அவரது குழுவினரின் உழைப்பு அமைந்திருக்கிறது.
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை முதலில் தனித்து தெரிகிறது; அப்புறம் நம் காதுகளில் மறைந்து போகிறது.
சிசிடிவி கேமிரா கண்காணிப்பில் ஈடுபடும் ஒருவர் பல பிரேம்களை பார்ப்பதுபோல, இப்படியொரு கதையை தந்திருக்கும் ஜெகன் விஜயா பாராட்டுக்குரியவர்.
ஆனால், அது நல்ல முயற்சி என்றளவிலேயே முடிந்து விடுவதுதான் வருத்தம்.
பொறுமையின் எல்லை!
இரண்டு பிரேம்களில் கதை சொல்ல முயற்சித்த வகையில் திரும்பிப் பார்க்க வைத்த ஜெகன் விஜயா, அடிப்படைக் கதை ‘ப்ரெஷ்’ ஆகத் தெரிய மெனக்கெடவில்லை. இதுவொரு வழக்கமான படமாக தயாரிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் கேலிக்குரியதாகி இருக்கும்.
கவுரி பேசுவதும், வினோத் பதில் சொல்வதுமாய் நகர்வது, ஒருகட்டத்தில் நம் பொறுமையின் எல்லையை ரொம்பவே சோதிக்கிறது.
கதையில் அடுத்தடுத்த திருப்பங்கள் இடம்பெற்றிருந்தால், ‘இரண்டு பிரேம்’கள் நுட்பம் இன்னும் சுவை கூட்டியிருக்கும். ஒருவேளை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால், இயக்குனர் அப்படிப்பட்ட அனுபவத்தைத் தந்திருக்கக் கூடும்.
ஸ்பாய்லர் என்றாலும், இதைச் சொல்லத்தான் வேண்டும்.
யாரோ ஒருவரால் அல்லது சிலரால் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகும் பெண் தன் உடலையோ மனதையோ சிதைத்துக்கொள்வதில் எந்த அர்த்தமுமில்லை.
இதைப் பற்றிய உரையாடல் ‘பிகினிங்’கில் வருகிறது. அந்த காட்சியே இப்படத்தை ஒருவர் ஏன் பார்க்க வேண்டுமென்பதற்கான பதிலாக உள்ளது.
ஒரு நல்ல ஐடியாவை குறும்படமாகத்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை; திரைப்படமாகவும் எடுக்கலாம் என்று சாதித்த வகையில் ‘பிகினிங்’ ஒரு நல்ல தொடக்கம்.
அதேநேரத்தில், பரவலான வரவேற்பைப் பெறும் வகையில் இன்னும் செழுமையான காட்சியனுபவத்தைத் அது தந்திருந்தால் இன்னும் பல ‘பிகினிங்’குகளுக்கு வழி பிறந்திருக்கும்!
– உதய் பாடகலிங்கம்