- பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் நெகிழ்ச்சி
ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கல்வெட்டு ஓலைச்சுவடிகள் பயிலரங்கில் பயிற்சி பெற்றோர்க்கு சான்றிதழ் வழங்கச் சென்றிருந்தபோது சந்தித்த பள்ளி மாணவிகள் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதியுள்ளார்.
அந்தப் பதிவில், “அப்போது எம்.கே. மாகதி என்ற ஏழு வயது பள்ளிமாணவி சான்றிதழ் பெற வந்தார்.
எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் லட்சுமி நாராயணபுரத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி இவர்.
தமிழ் இலக்கியத்தில் ஆர்வம், பழைய பொருட்களை தேடிச் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவராம் இந்த மாணவி. தமிழி எழுத்துக்கள் அனைத்தும் எழுதும் திறன்; தமிழ்ப் பெயர்களை தமிழி (தமிழ் பிராமி) எழுத்தில் எழுதும் திறன் கொண்டவர் என்றார்கள்.
ஆர்.வி.குழல் யாழினி ஸ்ரத்தா பள்ளியில் (Shraddha Children’s Academy) 9ஆம் வகுப்பு படிக்கிறார். சிறுகதை எழுதும் திறனும் பேச்சாற்றலும் கொண்டவராம். வட்டெழுத்து, ஓலைச்சுவடிகள் வாசிப்பில் பயிற்சி பெற்றுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் பொன்வித்யாஷ்ரமத்தில் 8 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவி பி.வி கார்த்திகா. பரதநாட்டியம், சிலம்பாட்டம் பயிற்சி பெற்ற இவரது நோக்கம் இராணுவத்தில் மருத்துவராவதாம்.
தமிழ் மண்ணின் வரலாற்றை அறிவதில் ஆர்வமுடையவராம். கல்வெட்டு ஓலைச்சுவடிகள் எழுத்து பயிற்சி பெற்று அதற்காக சான்றிதழ் பெற்றார்.
இந்த மூன்று மாணவிகளும் கல்வெட்டு ஓலைச்சுவடிகள் வாசிப்பில் பயிற்சி பெற வந்திருக்கிறார்கள் என்பதையே ஒரு கணம் என்னால் நம்ப முடியவில்லை.
அதுமட்டுமின்றி இத்தகைய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட ஊக்கப்படுத்தும் இந்தக் குழந்தைகளின் பெற்றோர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.
இப்போதெல்லாம் இலக்கியம், வரலாறு, மானிடவியல், சமூகவியல் போன்ற துறைகளில் சேர்ந்து படிப்பது வெகுவாக குறைந்துவருகிறது. இத்தகைய கல்வி வாழ்க்கைக்கு கட்டுபடியாகாது என்று பரவலாக நம்புகிறார்கள்.
ஆனால் என்னவோ தெரியவில்லை இந்த மூன்று மாணவிகளைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அழைத்து அருகில் நின்று புகைப்படம் படம் எடுத்துக்கொண்டேன்.
“தமிழ் மாணவன்” என்ற ஒற்றை அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு வளர்ந்துவந்தவன் நான். இந்தக் குழந்தைகள் எனக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
இவர்கள் படித்து பெரியவர்களாகி எந்தப் பணியிலும் சேரட்டும். ஆனால் இத்தகைய இளந்தளிர்களின் கரங்களில் தமிழ் பாதுகாப்பாக இருக்கிறது; இருக்கும் என்று தோன்றியது.
தோற்றத் தொன்மையும் தொடரும் இளமையுமாய் தமிழ் மொழி தொடர்ந்து இயங்குவது இதனால் தான். ஒவ்வொரு தலைமுறையும் தமிழைத் தன் நெஞ்சில் வைத்து நடக்கிறது. ஏட்டுச்சுவடிகளிலிருந்து அச்சேறிய தமிழ் இன்று இணையத்திலும் செழிக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓர் எழுத்து வடிவத்தில் பயிற்சி பெறும் 21ஆம் நூற்றாண்டின் இளஞ்சிறார்கள். ஒருங்குறியில் (Unicode) தமிழி.
Journey of a Civilization: Indus to Vaigai நூலின் தமிழ் வடிவம் “ஒரு பண்பாட்டின் பயணம் : சிந்து முதல் வைகை வரை” என்ற நூலாக வெளிவரவிருக்கிறது. இறுதிக்கட்டப் பணிகளில் மூழ்கி இருக்கிறோம்.
சென்னையில் நடைபெறவிருக்கும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள இந்த மூன்று மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மேடையில் அழைப்பு விடுத்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.