அற்புதமாயிருக்கிறது அந்த வீடுகளுக்குள் நுழையும்போது. நுழைந்ததும் கோயில் மாதிரியான அலங்கார வளைவுகள்; பிரமிப்பை ஏற்படுத்தும் நுணுக்கங்கள் நிரம்பின கதவுகள்; பளிங்கிலான மேற்கூரைகள்; தரையில் இத்தாலிய ‘மார்பிள்’; விரிந்த முற்றம்; தாழ்வாரம் என்று எத்தனை விசாலம்? சட்டென்று ‘ஐந்து வருடங்களில் பணம் சேர்ந்து கட்டிய வீடுகள் அல்ல இவை. ‘செட்டிநாடு – கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நகரத்தார் சமூகத்தாரில் பலரும் ஒரே சமயத்தில் கனவு கண்டு வீடுகள் கட்டிய மாதிரி எவ்வளவு கனவுகளுடனான வீடுகள் அல்லது கட்டிட வடிவம் பெற்ற கனவுகள்?
செட்டிநாட்டில் பிரசித்தமான காரைக்குடியில் அந்த வீடு பிரபல்யம். ‘ஆயிரம் ஜன்னல் வீடு’ என்று சொல்கிறார்கள்.
முக்கால் நூற்றாண்டைக் கண்ட வீட்டில் அங்கங்கே பழமையின் சாயல்கள் தெரிந்தாலும் விசாலமான முற்றம், ‘டைனிங் ஹால், வரிசையான ஜன்னல்கள் என்று நுழைந்ததும் ஆச்சர்யம் நம்மைத் தொற்றுகிறது.
மூன்றாவது தலைமுறை இப்போது கூட்டுக் குடும்பமாக இதில் வசிக்கிறது. “எங்கள் வீட்டுத் திருமணங்களை இதில்தான் நடத்துகிறோம்” – இத்தாலியன் மார்பிள் விரவிக்கிடக்கிற வீட்டிலிருந்தபடி சொல்கிறார் நாராயணன்.
செட்டிநாடு வீடுகளில் நல்ல வசதியான ரகம், சுமாரான ரகம் என்று இரண்டு ரகமான வீடுகள் இருந்தாலும் இரண்டும் தற்காலப் பார்வைப்படி பிரமாண்டம்தான்.
குளிர்ச்சியான திண்ணை, கல்யாணத்திற்கென்றே இருக்கும் கல்யாணக் கொட்டகை, இரண்டு புறமும் போஜன சாலை என்கிற நீண்ட ஹால்கள், நடுவில் விசாலமான முற்றங்கள், பெண்களுக்கென்று பின்பகுதியில் தனிப் போர்ஷன்கள்.
அந்த மூன்று நாட்களில் ஒதுங்கக் கூடத் தனி அறை – இவை பல வீடுகளில் பொதுவான அம்சம்.
காரைக்குடியில் சற்று ஒதுங்கியிருக்கும் அழகப்பச் செட்டியார் வீடு நல்ல உயரத்துடன் ஏதோ மியூசியத்தில் நுழைகிற உணர்வை ஏற்படுத்துகிறது. 1908-இல் கட்டப்பட்ட வீடு. கல்விக்காக ஏகப்பட்ட பணத்தையும்.
நிலத்தையும் தானம் செய்த அழகப்பச் செட்டியாரின் வீட்டினுள் அந்தக்கால பூ வேலைப்பாடமைந்த ‘டைல்ஸ்’. தொழில்நுட்பம் காட்டும் தேக்குக் கதவுகள்; வளர்ந்த யானைத் தந்தங்களுக்கிடையே ‘காந்தி’ படம்.
கூரையில் சரம்சரமான விளக்குகள். வீட்டின் உரிமையாளர்கள் கோலாலம்பூரில் இருக்க, அமைதியாகக் கிடக்கும் திண்ணையில் அமர்ந்த படி காவல் காக்கிறார்கள் கணக்குப் பிள்ளைகள்.
வீட்டைத் திறக்க ஏழத்தாழ அரைக்கிலோ கனத்திலிருக்கும் சாவியுடன் அவர்கள் கதவுடன் மன்றாட வேண்டியதிருக்கிறது.
பிரமாண்டத்திற்குப் பெயர் போன இன்னொரு கிராமம் – கானாடுகாத் தான். செட்டி நாட்டரசர் என்றழைக்கப்படும் அண்ணாமலைச் செட்டியாரின் வீடு இன்றும் நல்ல பராமரிப்புடன் இருக்கிறது.
நுழைந்ததும் பார்வையை அகலப்படுத்திவிடுகிற அரண்மனையில் வியப்பதற்கு பல சமாச்சாரங்கள்.
உள்ளே போகப் போக விரிந்து கொண்டிருக்கும் அரண்மனை. உள்ளே இருக்கிற சாப்பாடு அறையின் நீளம் ஒரு ஆச்சர்யம். கறுப்பும் வெள்ளையுமாகக் கட்டம் போட்ட வெளிநாட்டு பளிங்குக் கற்கள் பதித்த திண்ணைகள்.
ஒரு ஹாலில் அண்ணாமலைச் செட்டியார், முத்தையா செட்டியாரின் உருவப்படங்கள். கட்டி நூறு வருஷங்களுக்கு மேலாகிவிட்ட இந்த அரண்மனையில் ‘ராஜகுமாரன்’ படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
ஒரு தெருவிலிருந்து அடுத்த தெருவுக்கு நீள்கிற கட்டிடங்கள் இருக்கிற கானாடு காத்தானில். நாற்பது வருஷங்களுக்கு முன்பே விமானம் வந்திறங்க ஓடுதளம் இருந்திருக்கிறது ஜே.ஆர்.டி. டாட்டாவுக்கு முன்பே சொந்தமாக விமானதளம்
வைத்திருந்து ஓட்டியவர் யார் என்கிறீர்கள்? கானாடுகாத்தானைச் சேர்ந்த அ.அ. அண்ணாமலைச் செட்டியார்.
குமுதம் ஆசிரியராக இருந்த எஸ்.ஏ.பி. யின் சித்தப்பா இவர். காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூரைச் சுற்றிலும் உள்ள ஏறத்தாழ எண்பது கிராமங்களில் பரவியிருக்கும் இந்த நகரத்தாரின் வீடுகள் உருவானது எப்படி?
பர்மா, மலேயா, இலங்கை, இந்தோனேஷியா நாடுகளில் அரிசி வியாபாரத்திலும், பேங்கிங்கிலும் உச்சத்திலிருந்த நகரத்தார் என்கிற நாட்டுக் கோட்டைச் செட்டியார் சமூகத்தாருக்கு இரண்டாம் உலகப் போர் மூண்டதும் கடும் நெருக்கடி.
அங்கு இவர்களுக்கு இருந்த நிலங்கள், கட்டிடங்களுக்கெல்லாம் உரிய பணம் கிடைக்காத நிலையில் கையிலிருந்த பணத்துடன் தமிழகம் திரும்பினார்கள்.
1930க்கு முன்பு நகரத்தார் சென்னையில் முதலீடு செய்திருந்தது இரண்டு மில்லியன் ரூபாய். பர்மாவில் பிரச்சினை உருவானபிறகு 1940களில் அவர்களது முதலீடு 225 மில்லியன்.
அந்தச் சமயத்தில்தான் செட்டிநாடான தங்களது சொந்தக் கிராமங்களுக்கு வந்து வீடுகளைக் கட்ட ஆரம்பித்தார்கள்.
அதற்கு முன்பே பல கட்டிடங்கள் இருந்தன என்றாலும் இந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் அதிகம்.
ஆங்கிலேய இந்திய பாணிக்கலவையிலான நாட்டுக்கோட்டை வீடுகள் உருவாக ஆரம்பித்தன. பர்மா தேக்குகளைக் கொண்டு வந்து பல நிலைக்கதவுகள், ஜன்னல்கள் உருவாகின. இத்தாலியிலிருந்து வந்த மார்பிள்கள் தரையில் பதிக்கப்பட்டன.
காற்றோட்ட வசதியுடன் விசாலமானபடி இப்படிப் பல வீடுகள்.
“தெற்காசிய நாடுகளில் பிரிட்டிஷாருடன் வணிகத் தொடர்பு இருந்ததால் இவர்களது கட்டிடங்களிலும் அதன் சாயல்கள்.
நகரத்தாரின் வீடுகளின் நிலைக்கதவுகளுக்கு மேலிருக்கிற ‘சூரியப்பலகை’ விசேஷமானது. பல வீடுகளின் நிலைக்கதவுகள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இருக்கும்.
இந்த வீடுகளைக் கட்டுவதற்காகவே கட்டிடக்கலையில் தேர்ந்த ஆசாரிகளும் ஸ்தபதிகளும் எழுவங்கோட்டை என்கிற கிராமத்திலிருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்.
இந்தக் கட்டிடங்களுக்குத் தேவையான செங்கல்லை அனுப்ப ராஜ பாளையத்தில் தனியாகக் கொத்தனார் தெருவே இருந்திருக்கிறது.
பர்மாவில் நகரத்தார் நல்ல நிலையில் இருந்தபோது கட்டின கட்டிடங்கள் ஒரு விதமாகவும், அவர்கள் திரும்பின பிறகு கட்டின கட்டிடங்கள் வேறு விதமாகவும் இருந்திருக்கின்றன.
இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து ‘பொருசு’ என்கிற மரமும், பர்மாவிலிருந்து தேக்கு, ரோஸ்வுட், அது தவிர இலுப்பை மரங்களும் தருவிக்கப்பட்டு கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இங்குள்ள வீடுகளின் சுவர்கள் இன்னும் வழுவழுவென்று இருக்கக் காரணம் சுண்ணாம்புச் சாந்துடன், முட்டை, கருப்பட்டி. கடுக்காய் கலவையைப் பயன்படுத்தியிருப்பது தான்.
வீடுகளை அமைத்தவுடன் நல்ல கரைகளுடன் கூடிய ஊரணிகளை அமைத்து கொண்டார்கள். இவை இன்னமும் நல்ல நிலையில் குடிநீராகப் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நகரத்தாருக்கு அப்போது வீடு என்பது தங்களது அந்தஸ்தின் அடையாளம். கல்யாணம், சடங்கு சம்பிரதாயங்களில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததும் நகரத்தாரின் வீடுகள் பெரிய அளவில் அமைந்ததற்கு ஒரு காரணம்” என்கிறார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து வரும் மாணவரான கண்ணன்.
வீடுகளில் மட்டுமல்ல, சமூகத்தில் அந்தஸ்திலும் நகரத்தாரில் எத்தனை பேர் முன்னிலையில் இருக்கிறார்கள்.
இடையில் ஒரு சின்ன ‘லிஸ்ட்’, இந்தியாவிலேயே முதலில் தனித்துப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், ‘கல்வி வள்ளல்’ என்று அழைக்கப்படும் இராம. அழகப்பச் செட்டியார், கருமுத்து தியாகராய செட்டியார், சினிமாவில் தனித்துவம் பெற்ற ஏ.வி.எம்.மெய்யப்பச் செட்டியார், சென்னை மாநகராட்சிக்கு முதல் மேயரான ராஜா முத்தையா செட்டியார், சா.கணேசன், காந்தி பற்றி அந்தக் காலத்திலேயே துணிந்து படம் எடுத்தவரான ஏ.கே.செட்டியார், சிறுகூடல் பட்டியில் பிறந்து காரைக் குடிக்கு அந்தக் கால ‘வளர்ப்பு மகனாக வந்த கண்ணதாசன், தமிழ்வாணன், சோமலே, எஸ்.ஏ.பி.அண்ணாமலை, ப.சிதம்பரம் என்று நகரத்தாரிலே நீண்ட லிஸ்ட் இருந்தாலும் இன்றைக்கிருக்கிற நிலை?
அந்தஸ்தின் அடையாளங்களாக ஒரு காலத்தில் திகழ்ந்த நகரத்தாரின் வீடுகளில் இன்று அநேக மாற்றங்கள்.
வட்டிக்குப் பணம் கொடுக்கும் ‘வரவு செலவுத் தொழிலில்’ முன்பு மாதிரி இவர்கள் நீடிக்க முடியவில்லை.
நகரத்தாரில் கணிசமானவர்கள் சினிமா விநியோகத்திலும், மருந்துத் தொழிலிலும் இருந்தாலும்கூட முப்பதுகளில் இருந்த நிலை இன்றில்லை.
‘நாட்டுக்கோட்டை’ வீடுகள் பலவற்றைப் பிந்தி வந்த தலைமுறை சரிவரப் பராமரிக்க முடியவில்லை.
நுணுக்கமான வேலைப் பாடமைந்த நிலைக்கதவுகள், தேக்குச் சாமான்கள், கட்டில்கள், ஜன்னல்கள்கூட விலை பேசப்பட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன.
சில வீடுகளில் தேக்குக் கதவுகள் பெயர்க்கப்பட்டு ‘கிரில்’ கதவுகள் வந்திருக்கின்றன.
சில வீடுகள் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த பத்து வருஷங்களில் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு காரைக்குடி, திருப்பத்தூர், ஆத்தங்குடி பகுதிகளில் புராதன நிலைகளை, பழைய பொருட்களைவிற்கும் கடைகள் உருவாகிவிட்டன.
பழைய வீடுகளில் நிலைக்கதவுக்கு மேலிருக்கிற வேலைப்பாடமைந்த சூரியப்பலகையின் விலை இருபத்தையாயிரம் ரூபாய்.
– மணா