கருத்துச் செறிவுமிக்க ஒரு திரைப்படைப்பைத் தரும்போது, சிலநேரங்களில் அவை ரசிகர்களைச் சென்றடையாமல் போகலாம்.
அதேநேரத்தில், சாதாரண கமர்ஷியல் படத்தில் மிகச்சாதாரணமாகச் சொல்லப்படும் ஒரு கருத்து மக்களிடம் அபார வரவேற்பைப் பெறலாம்.
இவ்விரண்டையும் உணர்ந்து, மிக நுணுக்கமாகத் தான் சொல்ல வந்த கருத்துகளை ஒரு கமர்ஷியல் வடிவத்திற்குள் அடக்கிக் கொடுக்கும் வித்தை சிலருக்குக் கைவரும்.
அப்படியொரு முயற்சியாக அமைந்திருக்கிறது செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி, முனீஸ்காந்த், கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ திரைப்படம்.
குஸ்தி போடுவோமா?
அறுபதுகளுக்கு முன்னர், தமிழ்நாட்டின் பல நகரங்களில் குத்துச்சண்டை, மல்யுத்தப் போட்டிகள் பெருமளவில் நடந்திருக்கின்றன.
அப்போது, நம் முன்னோர்களுக்கு அறிமுகமான ஒரு சொல் ‘குஸ்தி’. இன்றோ, அந்த வார்த்தையே புழக்கத்தில் இல்லை.
இப்படியொரு சூழலில், மண் பரப்பில் ஆடப்படும் குஸ்தி ஆட்டத்தை மையப்படுத்தி வெளியாகியிருக்கிறது ‘கட்டா குஸ்தி’.
அதற்காக, விளையாட்டை மையப்படுத்திய படம் என்று நினைத்துவிட வேண்டாம். குடும்பத்தோடு குலுங்கி குலுங்கி சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவை சித்திரம் இது.
கேரளாவின் பாலக்காட்டில் வாழ்ந்து வரும் கீர்த்தி (ஐஸ்வர்யா லெட்சுமி) ஒரு குஸ்தி சாம்பியன். அவரது விளையாட்டு ஆர்வத்தைப் புரிந்துகொள்ளாமல் கல்யாணம் செய்ய கட்டாயப்படுத்துகின்றனர் பெற்றோர்.
பெண் பார்க்க வருபவர்களும் கூட, கீர்த்தி ஒரு குஸ்தி வீராங்கனை என்று தெரிந்ததும் விலகியோடுகின்றனர்.
இன்னொரு புறம், பொள்ளாச்சியில் தனக்கான வரன் தேடிக் கொண்டிருக்கிறார் வீரா (விஷ்ணு விஷால்). அதிகம் படிக்காத காரணத்தால், தனக்கு வரப்போகும் பெண் குறைவாகப் படித்தவராகவும், தலைமுடி அதிகமுள்ளவராகவும் இருக்க வேண்டுமென்பது அவரது நிபந்தனை.
உலகம் தெரியாத பெண்ணாக இருந்தால் மட்டுமே கணவனுக்கு அடங்கியிருப்பார் என்பது வீராவின் எதிர்பார்ப்பு.
விதிவசத்தால், கீர்த்தியும் வீராவும் கணவன் மனைவி ஆகின்றனர். தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொல்லாமல், வீராவின் மனதுக்குப் பிடித்தவாறு வாழ்ந்து வருகிறார் கீர்த்தி.
இந்த நிலையில், ஒரு சாய ஆலையை இழுத்து மூடிய விவகாரத்தில் அதன் உரிமையாளருக்கும் (அஜய்) வீராவுக்கும் மோதல் ஏற்படுகிறது.
அதனால், அந்த நபர் அடியாட்களுடன் வீராவைக் கொல்ல வருகிறார். அவர்கள் அத்தனை பேரையும் புரட்டியெடுக்கிறார் கீர்த்தி. இந்த இடத்தில் இடைவேளை வருகிறது.
இதற்கு மேல் வீராவுக்கும் கீர்த்திக்கும் இடையே எப்படிப்பட்ட குஸ்தி நடக்கும் என்பதை அறிய வேண்டுமானால் திரையரங்குக்குச் செல்க!
பெண்ணடிமைத்தனத்தில் ஊறிப்போன ஒரு வழமையான ஆண், எப்படி சமத்துவம் பேசும் பெண்ணை மனதார ஏற்றுக்கொள்கிறான் என்பதே ‘கட்டா குஸ்தி’யின் அடிப்படைக் கதை. அதனால், இதில் குஸ்தி என்பது விருந்தில் பரிமாறப்படும் ஊறுகாய் தான்.
வயிறு குலுங்க சிரிங்க..!
‘கட்டா குஸ்தி’ ட்ரெய்லர் பார்த்தவுடனேயே பாதிக்கதை தெரிந்துவிடும். அப்படித்தான் முதல் பாதி நகர்கிறது. ஆனாலும், வயிறு குலுங்கச் சிரிக்க முடிகிறது; காரணம், இதில் இடம்பெற்றுள்ள நடிப்புக் கலைஞர்கள்.
படம் முழுக்க சீரியசாக ‘ஆணாதிக்கம்’ பேசுகிறார் கருணாஸ். அவர் பேசுமிடமெல்லாம் வெடிச்சிரிப்பு.
கருணாஸின் மனைவியாக வருபவரை ‘குளோசப்’பில் காட்டவில்லையே என்று யோசித்தால், பின்பாதியில் அதற்கெல்லாம் சேர்த்துவைத்து இரண்டு காட்சிகளைத் தந்திருக்கிறார் இயக்குனர்.
காளி வெங்கட் சாதாரணமாகப் பேசுவது நகைச்சுவையாக மாறும். இதிலும் அப்படியே. ஐஸ்வர்யா லெட்சுமியைப் பெண் பார்க்க வருமுன் முனீஸ்காந்த் பேசும் வசனங்கள் ‘அக்மார்க்’ வெடிச்சிரிப்புக்கு உத்தரவாதம்.
முன்பாதியில் கொஞ்சம், பின்பாதியில் நிறைய என்று கணக்கு வைத்து சிரிப்பூட்டுகிறார் ரெடின் கிங்ஸ்லி.
ஐஸ்வர்யாவின் பெற்றோராக வரும் கஜராஜ் – ஸ்ரீஜா ரவி இருவரும் சென்டிமெண்ட் காட்சிகளை குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர். பாட்டியாக வருபவர்தான் ‘ஓவர்’ அபிநயம் பிடித்து நம்மை வெறுப்பேற்றுகிறார்.
வில்லன்களாக வரும் தெலுங்கு நடிகர்கள் அஜய், சத்ரு இருவருமே அட்டகாசமாக திரையில் தோன்றியிருக்கின்றனர். விஷ்ணு விஷாலோடு சண்டை போட மாட்டேன் என்று அடம்பிடிக்கும் காட்சியில் வயிறு வலிக்கச் செய்கிறது அஜய்யின் நடிப்பு.
கொஞ்சம் அடக்கி வாசிக்கும் பாத்திரம் என்றாலும், கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பைத் தர முயன்றிருக்கிறார் விஷ்ணு விஷால். கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் அவர் காட்டும் ஆக்ரோஷம் ‘ஆஹா’ என்றிருக்கிறது.
நாயகனுக்கு இணையாக ஒரு நாயகி பாத்திரம் வந்து எவ்வளவு நாளாயிற்று. ஐஸ்வர்யா லெட்சுமி அதனை உணர்ந்து நடித்திருக்கிறார். ‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி ஹிட்டான சூட்டோடு இந்த கீர்த்தியும் மனதோடு ஒட்டிக்கொள்கிறார்.
இவர்கள் தவிர்த்து விஷ்ணு விஷாலின் நண்பர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள் என்று ஒரு கூட்டமே ஆங்காங்கு தலைகாட்டுகிறது.
ஒரு கலர்ஃபுல் தெலுங்குப் படம் பார்த்த உணர்வைத் தருகிறது ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு. பிரசன்னா ஜிகேவின் படத்தொகுப்பு சண்டைக்காட்சிகளில் நம்மை சில்லிட வைக்கிறது.
போலவே, அன்பறிவ் சகோதரர்களின் சண்டை வடிவமைப்பு முன்பாதியில் செயற்கைத்தன்மையோடும் பின்பாதியில் இயல்போடும் அமைந்திருப்பது அழகு.
இந்தப் படம் மூலமாக, தமிழில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்திருக்கிறார் தெலுங்கு நட்சத்திரமான ரவி தேஜா. நிச்சயமாக, இது தமிழ் திரையுலகில் பல மாற்றங்களுக்கு அடி கோலும்.
இசையில் நகைச்சுவை!
சண்டைக்காட்சிகளை, நகைச்சுவைக் காட்சிகளை ரசிக்க வைப்பதில் பின்னணி இசைக்கு முக்கிய இடம் உண்டு. அதனை உணர்ந்து, முன்பாதியில் ஜஸ்டின் பிரபாகரன் ஆடியிருக்கும் ஆட்டம் ‘அபாரம்’.
அதேநேரத்தில், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் ‘சீரியஸ் மூடு’ ஊட்டியிருப்பதும் அருமை. இதற்காகவே, அடுத்தடுத்து பல கமர்ஷியல் வாய்ப்புகள் அவரைத் தேடி வரும்.
பாடல்கள் ‘ஓஹோ’ என்றில்லாவிட்டாலும், திரையரங்கை விட்டு வெளியேறாத அளவுக்கு அமைந்திருக்கின்றன.
யூடியூப்பில் ஊரே நாயகியின் பராக்கிரமங்களை அறிந்தபோதும், நாயகனுக்கோ, அவரைச் சார்ந்தவர்களுக்கு தெரியாமல் இருப்பது எப்படி என்று கேட்கத் தொடங்கினால் பல ‘லாஜிக்’ கேள்விகள் முளைக்கும்.
அதனைத் தவிர்த்து பார்த்தால், ஒரு நல்ல கமர்ஷியல் திரைப்படத்திற்கான திரைக்கதையைத் தந்திருக்கிறார் செல்லா அய்யாவு.
முழுக்க நகைச்சுவை என்ற பெயரில் எல்லா இடங்களிலும் சிரிக்க வைத்து அடிப்படைக் கதையை அனர்த்தம் ஆக்கிவிடாமல், கொஞ்சமாக கண் கலங்க வைத்திருப்பது அருமையான உத்தி.
கருணாஸின் மனைவி பாத்திரம் இப்படி அறிவுரைகளை அள்ளி வீசுகிறதே என்று நம் மூளை யோசிக்கத் தொடங்கும் நேரத்தில் சட்டென்று அக்காட்சியை காமெடி ஆக்கியிருப்பது புத்திசாலித்தனம்.
கிராமமானாலும் நகரமானாலும், பெண்களைச் சமமாக கருதாத ஆண்கள் இன்றும் நிறையவே இருக்கின்றனர். விஷ்ணு விஷால் தொடங்கி அஜய், சத்ரு, கருணாஸ் ஏற்றிருக்கும் பாத்திரம் உட்பட பலவிதமாகச் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தை காட்டியிருக்கிறார் இயக்குனர்.
ஒரு கமர்ஷியல் கதையில், ஆணுக்குப் பெண் சமம் என்பதைச் சொன்னவகையில் நம் மனம் கவர்கிறார் இயக்குனர் செல்லா அய்யாவு.
‘லகானுக்கு அடங்கிய குதிரையாக’ கட்டா குஸ்தி திரைக்கதை அமைந்திருப்பதால், அடுத்த படத்தில் தமிழ், தெலுங்கைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களோடு இயக்குனர் செல்லா அய்யாவு இணைய வாய்ப்புகள் அதிகம். அதற்கும் சேர்த்து, இப்போதே அவருக்கு வாழ்த்து சொல்லலாம்!
-உதய் பாடகலிங்கம்