அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இருந்த போதும் கொலையாளிகள் குறித்த விபரம் தெரியவில்லை.
இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டது.
இந்த விசாரணையில் தமிழகம் முழுவதும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன் உள்ளிட்ட 12 பேரையும் சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.