ஒரேயொரு திரைப்படம் வெளியாவதற்குள் பல அக்கப்போர்கள் சமூக வலைதளங்களில் நிறைந்து வழியும் காலமிது.
ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை விட்டுவிட்டு, அது எத்தனை கோடி வசூல் ஈட்டும் என்ற கணக்கீடு இன்று பொங்கி வழிகிறது.
இவற்றுக்கு மத்தியில், ஒரு பண்டிகை காலத்தில் பல படங்கள் ஒன்றாக வெளியாகி அனைத்துமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதென்பது இன்றைய தலைமுறை நம்ப முடியாத ஒரு அதிசயம்தான்!
1987 தீபாவளி ரிலீஸ்!
1987ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதியன்று தீபாவளி வெளியீடுகளாக மனிதன், நாயகன், உழவன் மகன், சட்டம் ஒரு விளையாட்டு, இவர்கள் வருங்காலத் தூண்கள் ஆகிய படங்கள் வெளியாகின.
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, ‘மனதில் உறுதி வேண்டும்’ வெளியானதாக சொல்லப்படுகிறது. இவை ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தவை.
கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்’, நாயகியை முன்னிலைப்படுத்திய கதையைக் கொண்டது. அவரே இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அரங்கேற்றம்’ சாயலில் அமைந்தது.
சுஹாசினி நடித்த இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரமேஷ் அரவிந்த் இருவரும் முதன்முறையாக திரைக்கு முன்னால் அறிமுகமாகினர்.
இளையராஜா இசையில் ‘சங்கத்தமிழ் கவியே’, ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘கண்ணின் மணியே’, ‘கண்ணா வருவாயா’ பாடல்கள் ஹிட் ஆகியிருந்தாலும் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் கவுரவ வேடத்தில் தோன்றிய ‘வங்காளக் கடலே’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
டி.ராஜேந்தர் இசையில், வெங்கட் இயக்கத்தில் பிரபு நடித்த 50வது படமாக அமைந்தது ‘இவர்கள் வருங்காலத் தூண்கள்’. டி.ஆரின் பாடல்கள் அந்த நேரத்தில் துள்ளாட்டத்தை உண்டாக்கினாலும் இப்படம் நெடிய வரவேற்பைப் பெறவில்லை.
எஸ்.ஏ.சந்திரசேகர் – விஜயகாந்த் காம்பினேஷனில் ‘சட்டம்’ சார்ந்து வெளியான படங்களில் ‘சட்டம் ஒரு விளையாட்டு’ம் ஒன்று. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இப்படமும் எஸ்.ஏ.சி.யின் வழக்கமான ‘பழிக்குப் பழி’ பார்முலாவை தழுவியிருந்தது.
இம்மூன்று படங்களுமே நிச்சயம் தோல்விப்படங்களாக இருந்திருக்காது என்று நம்பலாம். ஏனென்றால், ஒரு பண்டிகைக் காலத்தில் திரையரங்குகளுக்கு படையெடுப்பதும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியே என்று ரசிகர்கள் திறம்பட நம்பிய காலமது!
மிரள வைத்த ஆபாவாணன் – அரவிந்தராஜ்!
ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு நடுவே விஜயகாந்த் படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெறுவது அக்காலகட்டத்தில் சாதாரண விஷயம். கதை மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்து ரசிகர்கள் வழங்கும் வெற்றியின் அளவும் அமையும். அதனை நன்குணர்ந்து தயாரிக்கப்பட்டது ‘உழவன் மகன்’.
சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என்றாலே விருது பெறும் நோக்கில் நின்று நிதானித்துப் படமெடுப்பவர்கள் என்ற எண்ணம் திரையுலகில் இருந்த காலத்தில், ‘ஊமை விழிகள்’ தந்து அசத்தியது ஆபாவாணன் – அரவிந்தராஜ் கூட்டணி.
அதன் தொடர்ச்சியாக, ஒரு சாதாரண கதையில் பிரமாண்டத்தைக் கலந்து தந்தது. ‘சொல்லித்தரவா’, ‘செம்மறி ஆடே’ பாடல்கள் திரையரங்குகளில் ரசிகர்களை ஆட்டம் போட வைக்க, ‘உன்னைத் தினம் தேடும் தலைவன்’ அவர்களது உத்வேகத்தைக் கூட்டியது.
நாயகனும் மனிதனும்!
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரூபிணி, ரகுவரன் நடிப்பில் வெளியான ஏவிஎம்மின் ‘மனிதன்’, இப்பட்டியலில் வசூலில் முதலிடம் பிடித்தது.
‘காளை காளை’, ‘மனிதன் மனிதன்’, ’வானத்தைப் பார்த்தேன்’, ‘ஏதோ நடக்கிறது’ என்று சந்திரபோஸின் இசையில் பாடல்கள் ரசிகர்களை மயக்கின. ஒரு பண்டிகை கால கொண்டாட்டத்திற்கு ஏற்ற படமாக அமைந்து, ரஜினியின் வெற்றிப் படங்களில் ஒன்றாகச் சேர்ந்தது.
மணிரத்னம் இயக்கத்தில் முக்தா சீனிவாசன் மற்றும் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் வெளியான ‘நாயகன்’, இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக விளங்குகிறது.
திரையரங்குகளில் வெளியாகி 175 நாட்கள் ஓடியபோதும், வசூலைப் பொறுத்தவரை மனிதனுக்குப் பிறகான இடத்தையே பிடித்தது. ஆனால், இன்றுவரை சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ளது.
‘தென்பாண்டி சீமையிலே’ பாடல் அதனுள் அடங்கிய சோகத்தையும் மீறி நம் மனதில் என்றென்றைக்குமாக ஒட்டிக் கொண்டிருக்கிறது.
‘நாயகன்’ தயாரான காலத்தில், அப்படமே பெரும் வெற்றியைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. அதனால் ‘மனிதன்’ பின்வாங்க வேண்டியிருக்குமோ என்று ரஜினி தரப்பில் யோசனை எழுந்தது.
அந்த நேரத்தில் பிரத்யேகமாக ‘நாயகன்’ படம் பார்க்கும் வாய்ப்பும் ரஜினிக்கு கிட்டியது. படம் பார்த்து முடித்ததும், ஏவிஎம் சரவணனிடம் ‘நாயகன் கிளாஸ், மனிதன் மாஸ்.
ஜெயிப்பது மனிதன் தான்’ என்றாராம் ரஜினி. ஒரு படத்தின் கமர்ஷியல் வெற்றி எவ்வாறிருக்கும் என்ற அவரது தீர்க்கமான கணிப்பையே அந்நிகழ்வு வெளிக்காட்டுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த படவிழாவொன்றில் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் பேசியிருந்தார் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்.
மேற்சொன்ன படங்களை வாங்கி கேரளாவில் வெளியிட்ட விநியோகஸ்தர் என்ற முறையில் நாயகனை விட மனிதன் படமே விநியோகஸ்தர்களுக்கு லாபம் தந்ததாகக் கூறினார்.
ஆனால் ஒரு படம் காலம் கடந்து நம்மை வசியப்படுத்த வெறும் வர்த்தக வெற்றி மட்டுமே போதாது. அதனாலேயே வெற்றி, வசூல் தாண்டி இன்றும் ‘நாயகன்’ மட்டுமே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
அதற்கு அதன் உள்ளடக்கத்தையும் மீறி அதில் கொட்டப்பட்ட பேருழைப்பும் ஒரு காரணம். மணிரத்னத்தை மாபெரும் இயக்குனராக ரசிகர்கள் ஏற்கவும், இன்று அவர் பெற்றிருக்கும் ‘பொ.செ. 1’ பெருவெற்றிக்கும் அதுவே அடித்தளம்.
அதற்காக நாயகனோடு வெளியான மற்ற படங்களையும் நாம் சாதாரணமாக கருதிவிட முடியாது.
ஏனென்றால், 1987 தீபாவளி தினத்தன்று அடித்துப் பிடித்து விஜயகாந்த், பிரபு, கமல், ரஜினி படங்களைத் திரையரங்குகளில் பார்த்த ரசிகர்களுக்கு இன்றும் அந்த நினைவுகள் பசுமையாக நெஞ்சில் நிற்கும்.
அந்த நினைவுகள் மட்டுமே அப்படங்களோடு தொடர்புடைய அனைத்து கலைஞர்களுக்குமான உண்மையான மரியாதை.
ஒரு பண்டிகைக்கு நட்சத்திர நடிகர்களில் எவரேனும் ஒருவரின் படம் வந்தாலே போதும் என்ற நிலைப்பாட்டிற்கு இன்று தமிழ் திரையுலகம் வந்திருக்கிறது.
நிச்சயம் அது தரும் தோற்றம் போலியானதுதான் என்பதற்கு உதாரணம்தான் ஒரே நேரத்தில் ரஜினி கமல் விஜய்காந்த் தங்களது ரசிகர்களுக்குத் தந்த இந்த தீபாவளிப் பரிசுகள்!
-உதய் பாடகலிங்கம்