அதிர்ச்சியில் உச்சநீதிமன்றம்
கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66A அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட இந்த சட்டப்பிரிவின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு காவல்துறையினர் தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருவதாகவும் எனவே காவல்துறையினருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் இந்த சட்டத்தின் கீழ் பதியப்பட்ட அத்தனை வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கூறி உச்சநீதிமன்றத்தில் PUCL என்ற பொதுநல அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் நரிமன் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டதற்குப் பிறகு இந்த சட்டப்பிரிவின் கீழ் நாடுமுழுவதும் 1307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் இன்னமும் வழக்குகள் பதிவு செய்வது வேடிக்கையாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் இருப்பதாக கூறி தங்களது அதிருப்திகளை வெளிப்படுத்தினர்.
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட இந்த சட்டப்பிரிவின் கீழ் நாட்டில் எங்கும் எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்றும் இதனை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் உள்துறைச் செயலாளர்களுக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த சட்டப்பிரிவின் கீழ் யார் மீதாவது வழக்கு பதிவு செய்திருந்தால் அந்த பிரிவு உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.