பேச்சாளர்களைக் காப்பாத்துங்கப்பா…!

நூல் அறிமுக விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் வேண்டுகோள்

மாலை வானத்தின் ஈசானிமூலையில் கருந்திரளாக மேகம் திரண்டிருந்தது. மழை மெல்லிய தூறலாக தொடங்கியிருந்தது. டிஸ்கவரி புக் பேலஸ் ‘பிரபஞ்சன் அரங்கில்’ நண்பர் ஏக்நாத் எழுதிய அவயம் நாவலின் அறிமுகக் கூட்டம். கவிதாபாரதி, வேடியப்பன் இருவரின் பேரன்பால் அது விழைந்திருந்தது.

சிறப்பு விருந்தினர்களில் இருவருக்கு நூல் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் சிறு குழப்பம். வாழ்த்துரைக்காக வந்த கவிஞர் யுகபாரதி, ஒரே நாளில் நாவலை படித்துவிட்டு மிகச் சுவையாகப் பேசினார்.

சமகாலத்தில் வெளியான நாவல்களில் அவயம் முதலிடத்தைப் பிடிக்கும் என்று உறுதியாகச் சொன்னார். படிக்கத் தொடங்கியது முதல் கீழே வைக்க முடியவில்லை என்றும் பாராட்டினார் யுகபாரதி.

இடையிடையே கவிதாபாதியின் இணைப்புரை சுவாரசியம். கம்யூனிஸ்ட் இயக்கத்தில் முழுநேரத் தொண்டராக இருந்த நாட்களின் நினைவுகளைப் பகிர்ந்தார்.

பெருந்துறை சட்டமன்ற தொகுதி அவருக்காக காத்திருந்தபோது, அவரோ சினிமா உலகம் நோக்கி வந்துவிட்டார். பெரிய சம்பளமில்லாமல் மற்றவர்களின் ஊதிய உயர்வு பற்றி எழுதிய பத்திரிகை எழுத்து அனுபவங்களையும் அவர் எள்ளல் சுவையுடன் பேச மறக்கவில்லை.

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், ஒரு கதையோ, இதிகாசமோ கவிதையோ எந்த நோக்கத்திற்காக எழுதப்படுகின்றன என்பது பற்றி இலக்கிய மேற்கொள்களுடன் நயம்பட உரைத்தார்.

வேறு நாவல் கொடுக்கப்பட்டதால், அவரால் அவயத்தை முழுமையாக படிக்க முடியவில்லை. திருப்பூரில் ஒரு கூட்டம் வைத்து அங்கே விரிவாகப் பேசுவார் என்றார் கவிதாபாரதி.

இயக்குநர் கரு.பழனியப்பன் பேச்சில் வழக்கம்போல சரவெடிகள்.

“வாழ்க்கையில் சம்பாதிக்கத் தெரியாமல் தத்தளித்த ஓர் இடதுசாரி பேச்சாளரின் வீழ்ச்சியைத்தான் எழுதியிருக்கிறார் ஏக்நாத். நாவல் முழுவதும் பல்வேறு வாசனைகளை அவர் சொல்லிக்கொண்டே வருகிறார்.

படமாக எடுத்தால் வாசனைகளை எப்படிச் சொல்லமுடியும் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இங்கே எழுத்தாளர்களை மதித்தால்தானே பேச்சாளர்களை மதிப்பார்கள். இன்னைக்கா பேச வராங்க. முப்பது வருசமாக படிச்சு சேர்த்த அறிவில் பேச வராங்க. பேச்சாளர்களை மதிங்கப்பா” என்றார்.

இந்து மதத்திற்கு எதிராகப் பேசுகிறவர்கள் சென்னையில் வீடு வாங்கி செட்டிலாகி விட்டார்கள் என்ற எழுத்தாளர் ஜெயமோகன் கருத்தை கடுமையாக மறுத்தார்.

அவர்கள் யாரென்று பெயர்களைச் சொல்லவேண்டியதுதானே? என்றும் கேட்டார் பழனியப்பன். மிகச்சிறு நிமிடங்களில் ஏற்புரை ஏக்நாத்.

சரியாக எட்டு மணிக்கு விழா முடிந்திருந்தது. பல யூடியூப் சேனல்கள் படம்பிடிக்க வந்திருந்தார்கள். பார்வையாளர்களில் பலரும் பிரபலங்கள். மனம் நிறைந்த நூல் அறிமுகம்.

பிறகு கிரீன் ஜூஸ் பாரில் சபை கூடியது. கதாசிரியர் விஜி, இயக்குநர் எம்.ஆர். பாரதி, வேடியப்பன், இயக்குநர் கரு பழனியப்பன், கவிதாபாரதி, யுகபாரதி, பாஸ்கர் சக்தி, ஏக்நாத், முத்துராமலிங்கன், துரை, இயக்குநர் மூர்த்தி மற்றும் நான் (சுந்தரபுத்தன்).

பத்திரிகை அலுவலக அனுபவங்கள் பகிரப்பட்டன. நடக்கும்போது கசப்பாகவும், நினைக்கும்போது சிரிப்பாகவும் மாறிய சம்பவங்கள் அவை. வீடு திரும்பும்போது மழை தொடங்கியிருந்தது.

புகைப்படங்கள்: பொன்ஸீ
நன்றி: சுந்தரபுத்தன்

You might also like