உடல்நலம்போல் மனநலத்திலும் அக்கறை தேவை!

அக்டோபர் 10: உலக மனநல தினம்

மனநிலை சார்ந்த பிரச்சனை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது.

முதன் முதலாக 1992-ம் ஆண்டில் உலக மனநல மையத்தில் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மன அழுத்தம், மனநோய் ஏன் ஏற்படுகிறது?

மன அழுத்தம் போன்ற நோய்கள் வர பல விதமான காரணங்கள் இருக்கலாம். மனநிலை என்பது உணர்ச்சி, உளவியல், சமுதாயம் இவைகளை உள்ளடக்கியதாகும்.

ஒரு விதமான பதற்றம், எந்த ஒரு வேலையிலும் கவனமின்மை, சோர்வு, அதிக உற்சாகம், கோபம், திடீரென மனநிலை மாற்றம் இவற்றையே மனப்பிளவு என்று கூறப்படுகிறோம்.

அதிகப்படியான வேலைப்பளு, தூக்கமின்மை, சோகம், அல்லது காரணமே இல்லாமலும் மன நோய் ஏற்படலாம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

வயதுக்கு மீரிய குழந்தை தனம், அதீத புகழ்ச்சி, கர்வம், எரிந்து விழுவது, நான் அப்படித்தான், நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்று கட்டளையிடுவது மனநோய் என்கின்றனர்.

இயல்பை மீறிய நடை, உடை, பேச்சு, இதுவும் மனநோயின் அறிகுறியே என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

இந்தக் கால சூழ்நிலையில் அதிக வேலைப்பளு, சமூக வலைதளங்களின் தாக்கம், மது அருந்துவது, அதனால் ஏற்படும் மனச்சோர்வு, ஓய்வின்மை, அதிக நேரம் போன்,

ஒரே வீட்டில் இருந்தாலும் யாரிடமும் அதிகம் பேசாமல் தனித்தனி அறைகளில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு யாரிடமும் தனக்கான பிரச்சனையை பகிர்ந்து கொள்ளாமல், போன் மற்றும் சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பது போன்றவற்றால் அழுத்தம் அதிகமாகி நோயாக மாறுகிறது.

கொரோனா காலகட்டத்தில் பலபேரின் மனநிலையில் நிறைய மாற்றம் ஏற்பட்டதை உலக சுகாதார மையம் சுட்டிக் காட்டியது.

வீட்டில் முடங்கி இருந்தது மன அழுத்தத்தை அதிகப்படுத்தி விட்டதாக ஆய்வு ஒன்று கூறியது நினைவிருக்கும்.

இயல்பு நிலையில் இருந்து வாழ்க்கைச் சூழல், சமூகச் சூழல் மாறும் போது மனநிலையில் மாற்றம் ஏற்படுவது இயல்பானது என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே மனதில் ஏதேனும் மாற்றம் ஏற்படுவது தெரிந்தால் மனநல மருத்துவரை நாடலாம்.

இது பிரச்சனையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும். இதுவும் உடம்புக்கு வரும் காய்ச்சல் போன்றுதான் மருத்துவரின் ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் மூலம் சரி செய்ய முடியும்.

மனநிலை சரியாக இருந்தால் மட்டுமே, குடும்பம், வேலை, உறவு எல்லாம் சமநிலையில் வைத்துக் கொள்ள முடியும்.

மனநிலை சீராக வைத்துக் கொள்வது எப்படி?

1] பிரச்சனை என்றால் அந்த சூழ்நிலையில் இருந்து விலகி, உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள் தனிமையில் இருக்காதீர்கள் யாரிடமாவது பகிர்ந்து கொள்ளுங்கள்.

2] ஓய்வெடுங்கள் நன்றாக தூங்குங்கள், சில நேரம் தனிமை நல்லது தான் கோபத்தை தவிர்க்க உதவும். அதிக நேரம் தனிமையை விரும்பாதீர்கள். மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு கொடுக்காதீர்கள்.

3] உடல் பயிற்சி உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். காலை நேர உடற்பயிற்சி மனதுக்கு நல்ல உற்சாகத்தை கொடுக்கும். உங்களுக்கு பிடித்த பாடல்கள் அழுத்தத்தில் இருந்து மீட்டெடுக்க உதவும்.

4] மன அழுத்தம் அதிகமானால் வீட்டில் இருப்பவர்கள் அவர்களை புரிந்து கொண்டு மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.

குறை கூறாதீர்கள், தனிமைப்படுத்தாதீர்கள், அன்பு, மருத்துவ ஆலோசனை மற்றும் புரிதல் மட்டுமே பாதிக்கப்பட்டவரை மீட்டெடுக்கும் என்பதை புரிந்து கொண்டால் மன நோய், மன அழுத்தம் அதனால் ஏற்படும் தற்கொலைகளை தவிர்க்க முடியும்.

உலக மனநல நாளில் மனநல ஆரோக்கியத்திற்கும் மன நலத்தில் அக்கறை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் தீம்கள் உருவாக்கப்பட்டு கொண்டாடப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தீம் “சமமற்ற உலகில் மனநலம்’’ என்ற தலைப்பில் மனநலத்திற்கான உலக கூட்டமைப்பால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நிலையில் எப்படி அக்கறை எடுத்துக் கொள்கிறோமோ அப்படியே மனநிலையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

– யாழினி சோமு

You might also like