– தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், அடிக்கடி காணாமல் போவதால் ஏற்படும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் ‘மின்னணு இந்தியா’ என்ற பெயரில் அனைத்து மாநில தொழில்நுட்பத்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். மாநாட்டில், தமிழகத்தில் நடைபெற்று வரும், பல்வேறு டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகள் பற்றியும் பேசப்பட்டது. குறிப்பாக, ‘லாஸ்ட் மைல் கனெக்டிவிட்டி’ என்ற திட்டத்தின் கீழ், கிராமப் பகுதிகளுக்கும் இணைய சேவை வழங்க எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி பலரும் பேசினர்.
தமிழக அரசுத் துறைகளின் பல்வேறு வசதிகளை, அனைத்து மக்களுக்கும் ‘இ – சேவை’ வாயிலாக தரும் வகையில், சட்டசபை உள்ளிட்ட ஒவ்வொரு அலுவலகத்தையும், ‘இ – அலுவலகம்’ வாயிலாக இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த டிஜிட்டல் யுகத்தில், சாதாரண மக்களுக்கும் தொழில் நுட்பத்தின் பயன்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
தமிழகத்தில் மீனவர்கள் காணாமல் போவது, அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், மாநாட்டில் சில தொழில்நுட்பங்களைப் பார்க்க முடிந்தது. இவற்றை தமிழகத்தில் செயல்படுத்த, மீன்வளத்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகாதாரத் துறையிலும், நவீனத்தை புகுத்தக் கூடிய வகையில், பல கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. விவசாயத் துறைக்கு ‘ட்ரோன்’ மற்றும் தொழில்துறைக்கு ‘ரோபோடிக் சிஸ்டம்’ என நிறைய தொழில்நுட்பங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
இவற்றை ஆய்வு செய்து தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.