சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் ஆடியோ நாடகமான ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ எனும் தொடரின் மூன்றாம் பாகத்தில் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
கிராபிக் நாவல்களையும் ஆடியோ நாடகங்களையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டிசி நிறுவனம், பிரத்யேகமாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிடும் நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கின்றன.
குறிப்பாக ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில் ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ எனும் ஆடியோ நாடகத்தின் மூன்றாம் பாகத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், வேர்ல்ட்ஸ் எண்ட் இன்னில் வீட்டு பணிப்பெண்ணாக நடித்திருக்கிறார்.
நடிகை ஸ்ருதிஹாசன் பேசும்போது, ”இசைக்கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்டநாள் கனவு.
அது தற்போது நனவாகியுள்ளது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான்.
ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என் பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் தயாரிப்பாளர்கள் இந்த தொடரை வெவ்வேறு தளங்களில் பிரபலப்படுத்தி இருக்கிறார்கள். ” என்றார்.
இதற்கு முன்னதாக ‘ட்ரெட் ஸ்டோன்’ மற்றும் ‘ஃப்ரோசன் 2’ ஆகிய ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஹாலிவுட்டில் தயாராகும் ஆடியோ நாடக படைப்பில் இணைந்திருக்கிறார்.
ஹாலிவுட் பிரபலங்களான ஜேம்ஸ் மெக்அவோய், கேட் இன்னிங்ஸ், மிரியம் மார்க்கோய்ல்ஸ் மற்றும் ஜஸ்டின் விவியன் பாண்ட் ஆகியோரும் இந்த தொடரில் நடித்துள்ளனர்.