ஜெயமோகனின் தனிமொழிகள்!

டைரியைப் புரட்டும்போது சிலசமயம் உதிரிவரிகள் தென்படுகின்றன. கவிதையாக மாற முடியாதபடி சிறியவை, கதையில் உறுப்பாக மாற முடியாத அளவுக்கு தனியானவை. இவற்றை ஆங்கிலத்தில் அஃபோரிசம் (aphorism) என்கிறார்கள்.

இது எப்போதுமே ஒரு வரிதான். கவித்துவம், ஒருவகை விவேகம் அல்லது நகைச்சுவை வெளிப்படுவதற்குரியது இவ்வடிவம்.

இவை பெரும் பாலும் எழுதி சில நாட்கள் கழிந்ததுமே ஒளி இழந்துவிடுகின்றன. சில வரிகள் நமக்கு மட்டுமே பொருள்படுகின்றவையாக உள்ளன.

ஒருபோதும் பிறவற்றுடன் சேராதிருத்தல் இவற்றின் அடிப்படை இயல்பென்பதால் குவித்து வைத்து படிக்கும்போது ஒன்று மற்றொன்றை மறைக்கின்றன.

ஆயினும் இவை மனம் செயல்படுவதன் தடயங்கள். போடப்படாத அல்லது அழிந்துவிட்ட கோலங்களின் புள்ளிகள்.

சமீபகால டைரியிலிருந்து திரட்டிய வரிகள் இவை.

* தொட்டாற்சிணுங்கியின் பூக்களை மெல்லக் கொய்து திரட்டு கையில் யானையின் எஞ்சிய வல்லமை என்னவாக இருக்கிறது?

*எதிர்காற்றில் நடந்துவரும் சுடிதார்ப் பெண்போல என் மொழியில் என் சுயம் வெளிப்பட வேண்டும், தெரியக்கூடாது.

*பரதநாட்டிய உடையில் சந்தைக்கு போகமுடியாதென யாராவது நம் கவிஞர்களுக்குச் சொல்லக்கூடாதா?

*மென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல்தான் அதற்கு எத்தனை பாரம்!

*உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச் செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.

* முழுத் தனிமையில் நான் உணரும் பார்வைகளில் உயிரோடிருப்பவர்கள் எத்தனை பேர்?

*அப்படியல்ல, யோசித்துப் பாருங்கள்: காமம் சாராத பகற்கனவுகள்தான் மேலும் ஆபாசமானவை.

*ஒட்டுமொத்த மானுடவாழ்வே ஒரு பிரம்மாண்டமான வேதியியல் நிகழ்வுதான் என தோன்றும் கணங்கள் கொடுமையானவை.

*சங்கப்பாடல்களில் ஆத்மா காதலிக்கப்படவில்லை, உடல் தாராளமாகவே கிடைத்தது.

*சிந்தனையாளர்களை ஒற்றை மேற்கோளாக மாற்றிவிடுகிறோம். மரத்தை பின்னோக்கித் தள்ளி விதையாக்குவது போல.

*பாறைகளைப்போல யானைகள் பரிணாமம் கொண்டன என்று நம்புதல் அறிவியல்; யானைகளுக்காகவே பாறைகள் வந்து காத்திருந்தன என்று நம்புதல் ஆன்மீகம். பின்னதன்பால் நிற்கும் போதே கவிதைக்குச் சிறகு கிடைக்கிறது.

*கடவுள் ஒரு நாடகத்தையே உத்தேசித்திருக்கிறார், கதாபாத்திரங்களை ஆக்கி முடிக்கவில்லை.

*குழந்தைகள் கற்பிக்கின்றன, எதைக் கற்பிக்க முடியாதென.

*யானை குனிந்துகொள்ளுமென நம்பி மரக்கிளையில் மண்டை இடித்துக் கொண்ட ஒரு பாகனை நான் அறிவேன்.

*புல்விதையில் ஓர் விளம்பர வாசகம்!  “பூமியையே மூடிவிடும், எச்சரிக்கை!” (முற்றிலும் சாதகமான சூழலில்)

* அழகான பெண்கள் அதை நமக்கு நினைவூட்ட ஒர் அசைவை வைத்திருக்கிறார்கள்.

* வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் வாய்தவறிச் சொலாதிருத்தல்.

*ஊர்வனவற்றுக்கெல்லாம் அசைவில்லாமல் இருக்கும் கலை தெரியும். பூமியிடமிருந்து கற்றுக் கொண்டது போலும்.

*கண்ணில்லாதவர் முறித்து தாண்டும் சாலையில் ஓடிக்கொண்டிருப்பவை, ஒலிகள்.

*பழைய புகைப்படங்களின் ஒளியில் கண் உறைந்த முகங்களை நோக்கி அடுத்த நூற்றாண்டு சொல்லிக் கொண்டிருக்கிறது ‘ஸ்மைல் ப்ளீஸ்.’

*ஊட்டியில் மட்டும்தான் வானம் நோக்கி திறக்கும் சன்னல்கள், வாசல் எங்குமில்லை.

*வரலாற்றை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து மொழியில் புதைத்து விடுகிறோம்.

*சொல்லுக சொல்லில் பணமுள, சொல்லற்க சொல்லில் பணமிலாச் சொல்,

*பெரிய நாவல் நம்மைக் குலைத்து விடுகிறது, திரும்ப அடுக்கும்போதுதான் அந்நாவலை புரிந்துகொள்கிறோம்.

*சூரிய காந்தி வயலில் பல்லாயிரம் பூக்கள் எனக்கு முகம் திருப்பியிருந்தன.

*நானும் என் வானில் பறக்கும் பறவையும் வானம் என்பது ஒன்றுதான் என்பதை உணர்ந்தால்தான் அது வானம்.

*நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்பவர்கள், பொருத்திக் கொள்பவர்கள் என மனிதர்கள் இரு வகை.

*ரயில் முழக்கம் ஒரு காதசைவுக்கு மட்டுமே என நினைக்கும் சேற்றெருமையின் உலகில்தான் எத்தனை நிம்மதி.

*அமரப்படாத நாற்காலியைப்போல அமரப்படாத குதிரை முழுமையின்மை கொண்டிருக்கவில்லையே, ஏன்?

*கரையை மென்மையாக முத்தமிட்டுக் கொண்டிருக்கும் படகுக்கு அடியில் கடல் அலையடித்துக் கொண்டிருக்கிறது.

*சலிப்பின் கசப்பிலிருந்து மீட்டு கசப்பில்லாத சலிப்புக்கு இட்டுச் செல்பவையே பேரிலக்கியங்கள்.

*அம்மாவை அசடாக எண்ணிக் கொள்வதற்கு அவள் பாசம் தான் காரணமா?

*தலையின் தலைமையில் பாம்பின் உடல் வியூகம் கொள்வதைக் கண்டதுண்டா?

* பகிரப்படுகையில் உண்மையில் பொய்யின் விகிதம் ஏறுவதுதான் இலக்கியத்தின் பிரச்சினை.

*விரியத் திறந்த வீட்டுக்குள்ளும் சுரங்கம் போட்டு நுழைபவனை இலக்கிய விமரிசகன் என்கிறோம்.

*விளிம்பை மட்டும் சிறுக்கிவிட்டு குழந்தை அடம்பிடித்ததனால் கடவுள் படைத்துக் கொடுத்தார், மலைகளை.

*மேய்ந்துகொண்டிருந்தபோது தன்னைத்தாண்டி பாய்ந்தோடிய காலத்தை படுத்துக் கொண்டு அசைபோடுகிறது மாடு.

*மலைத்தொடருக்கு முன்னால் நின்று முணுமுணுத்துக் கொண்டேன் நான் நான் என்று.

*வெட்டுக்கிளி கைகளை உரசிக்கொள்வதை கேட்டேன், கண்ணால்.

*இங்கிருந்து பார்க்கையில் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அந்த முதியவர் மிக நிம்மதியாகத்தான் தென்படுகிறார்.

*சூரியன்களைச் சுமந்த கருவெளிபோல பனித்துளிகளுடன் அந்த கம்பளிப்பூச்சி.

*தமிழ் பட்ட வகுப்புகளில் இலக்கியப் படைப்புகளை சில்லறைக் கருத்துக்களாக மாற்றுகிறார்கள். முனைவர் பட்ட ஆய்வில் அதற்கு இலக்கியப் படைப்புகள் தேவையில்லாமலாகிறது.

*இனிய இசை ஏன் சின்னஞ்சிறு விஷயங்களாக நினைவில் கிளர்த்துகிறது?

*மண்ணுக்குள் எத்தனை காடுகள் நீர் காத்து இருக்கக்கூடும்!

*நம்பமுடியாத சுயசரிதைக்குப் பின்னால் ஒரு வாசகக் குறிப்பைக் கண்டேன்: இதை கதையாக எழுதியிருந்தால் நம்பலாம்.

*ஓடும் பேருந்தின் ஓரத்து வீடுகளிலெல்லாம் ஒரு கணம் வாழ்ந்து வாழ்ந்து சென்றேன்.

*அந்தியில் கடைசியில் கூடு திரும்பும் பறவை வெற்றி பெற்றதா தோல்வி அடைந்ததா?

*மூன்று வயதில் பேருந்தில் தூக்கி மடியில் வைத்துக் கொண்ட பெண்ணின் கன்னவாசனையை நாற்பது வருடங்களாக நினைவில்
வைத்திருப்பது எந்தப் புலன்?

*கதைக்கரு என்பது புனைவின் ஓட்டத்தில் மிதக்கும் படகு: ஓட்டைகள் வழியாக உள்ளே வருவதே இலக்கியமாகிறது.

*பாலிய கால நண்பனிடம் நாம் உணரும் தூரம் எதனால் ஆனது?

*படகில் ஏறிய யானையை அரை அடி உயரம் என்றும் அளந்து மதிப்பிடலாம்.

*முற்போக்கு இலக்கியத்துக்கும் அரசாங்கப் பிரச்சாரத்துக்கும் இடையேயான வேறுபாடு என்னவென்றால் முன்னதற்கு அரசாங்கம் இல்லை.

*சிறிய நூல்கள் வலியுறுத்துகின்றன. பெரிய நூல்கள் தங்களை மெல்ல ரத்து செய்துகொள்கின்றன.

*பெரும் கோபுரங்களின் அடித்தளத்தில் கருங்கல் தளர்ந்து வளைந்திருப்பதை கண்டிருக்கிறேன்.

*விடியற்காலையிலன்றி எப்போது கேட்டாலும் சேவலின் குரல் கொடூரமாகத்தான் இருக்கிறது.

***

நன்றி: தீராநதி ஜூலை 2003, வாழ்விலே ஒரு முறை என்ற நூலிலிருந்து ஒரு பகுதி

You might also like