கோபத்திலும் வாழ்த்தும் குணம் எல்லோருக்கும் வாய்க்காது!

டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்ட கே.ஏ.தங்கவேலு 1950-ன் தொடக்கத்தில் தமிழ்த்திரையில் அறிமுகமானவர்.

1970 வரை தமிழ் திரையில் தனக்கென்று ஒரு பாணியில் மிக எதார்த்தமான பேச்சு நடையில் தனது நகைச்சுவையால் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்
பிடித்தவர்.

இவரது நகைச்சுவை பாத்திரங்கள் கல்யாண பரிசு, பார்த்தால் பசி தீரும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், எங்க வீட்டுப்பிள்ளை, நம்நாடு, தில்லானா மோகனாம்பாள் போன்ற இன்னும் பல படங்களில் இன்றும் மின்னிக் கொண்டிருக்கின்றன.

எக்காரணம் கொண்டும் கொடிய சொல்லால் யாரையும் புண்படுத்தக்கூடாது என்ற கொள்கையோடு வாழ்ந்தவர்.

கடுமையாக யாரையாவது கடிந்து கொள்ள இவர் “போப்பா.. நல்லா இரு“ என்றே சொல்வாராம்.

இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை எம்.சரோஜாவை 1958-ல் காதல்
திருமணம் செய்து கொண்டார்.

எம்.ஜி.ஆர் நடித்த நம்நாடு படத்தில் மூன்று வில்லன்களில் நகைச்சுவையான ஒரு வில்லன் பாத்திரத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.

நம்நாடு படத்தில் இவர் அடிக்கடி சொல்லும் “ஆஹா.. ஓஹோ..பேஷ் பேஷ்” என்கிற வசனம் இன்றளவும் நகைச்சுவையா பேசப்படுகிற புகழ்பெற்ற
வசனம். பாடகர் எஸ்.சி.கிருஷ்ணனின் குரல் இவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். 

ஒவ்வொரு தீபாவளி அன்றும் லுங்கியும் தொப்பியும் அணிந்து வந்த தங்கவேலுவிடம் பத்திரிகையாளர் ஒருவர், “எதற்காக நீங்கள் தீபாவளி பண்டிகை நாளில் லுங்கியும் தொப்பியும் போடுகிறீர்கள்” என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த தங்கவேலு, “தீபாவளி அன்று ஒரு நாடகம் போட்டேன். அப்போது துணி வாங்க என்னிடத்தில் காசு எதுவும் இல்லை.

அந்த நேரம் லுங்கி வியாபாரம் செய்யும் ஒரு பாய் எனக்கும் என்னுடைய நாடக கம்பெனியில் வேலை செய்கிறவர்களுக்கும் லுங்கியை அன்பளிப்பாக கொடுத்தார்.

நானும் என்னுடைய நாடகக் குழு அனைவரும் அன்று அவர் தந்த லுங்கியை அணிந்தோம்.

அவர் கொடுத்து உதவியை நினைவு கொள்ளும் ஞாபகமாக எனக்கு எவ்வளவு தான் வசதி வந்த போதும் தீபாவளி அன்று இந்த லுங்கியும் தொப்பியும் அணிந்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியுள்ளார்.
நன்றி மறவாத நல்ல மனமுடைய தங்கவேலுவின் புகழ் மேலும் வளர்க!

– நன்றி: முகநூல் பதிவு

You might also like