பரந்தூரில் ஏன் புதிய விமான நிலையம் தேவை?

பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தால் விவசாய நிலங்களும், வீடுகளும் பாதிக்கப்படுவதாக அந்தப் பகுதி கிராமத்து மக்கள், தொடர்ந்து கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் தொழில், பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சி அடையவேண்டுமானால், சாலைகள், விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன.

எதிர்கால கண்ணோட்டத்தில் புதிய விமான நிலையம் ஏன் தேவைப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

சென்னை விமான நிலையம் தற்போது 22 மில்லியன் பயணிகளை கையாண்டு வருகிறது.

தற்போது நடைபெற்றும் வரும் விரிவாக்கப் பணிகளுக்குப் பிறகும், தற்போதைய வளர்ச்சி விகிதத்தின்படி, 2028 ஆம் ஆண்டில் அதன் அதிகபட்ச அளவான ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகள் என்ற எண்ணிக்கையை எட்டும்.

சென்னை நகர வாகன நெரிசல் காரணமாக தற்போதைய விமான நிலையத்தில் குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட நேரத்தில் (இரவு 11 மணியிலிருந்து விடியற்காலை 5 மணி வரை) மட்டுமே சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் விமான நிலையத்திற்கு அனுமதிக்கப்படுகிறது.

இதனால், சரக்குகள் கையாளுவதில் காலதாமதம் ஏற்பட்டு விமான சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

எனவே அதிக பயணிகள் மற்றும் சரக்குகளைக் கையாள்வதற்குத் தேவையான அதி நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய புதிய விமான நிலையம் மாநிலத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

2028-க்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படவில்லை எனில், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியின் தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சி தேக்கமடையும்.

மேலும், விமானப் போக்குவரத்து மற்றும் அதன் தொடர்புடைய பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பலன்களையும் தமிழ்நாடு இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

அடுத்த 35 ஆண்டுகளுக்கான எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியுள்ளது.

புதிய விமான நிலையம் அமைக்க குறைந்தபட்சம் எட்டு ஆண்டுகளாகும். எனவே, மாநிலயத்தின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை கருத்திற்கொண்டு புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளை இப்பொழுதே தொடங்குவது அவசியமாகும்.

புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும், வருவாய் பெருகும்.

தற்போதைய சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் சுற்றுப்புறப் பகுதிகளில் மக்கள் வசிக்கும் நிறைய குடியிருப்புகளும், கட்டடங்களும் நிறைந்திருப்பதாலும்,

நிலத்தின் மதிப்பு மிக அதிக அளவில் இருப்பதாலும், விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்துவது மிகவும் கடினமாகும்.

மணலூர், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர், மாமண்டூர் அருகில் செய்யார், மப்பேடு, செய்யூர், மதுரமங்கலம், தேதுரை அருகில் வந்தவாசி, படாளம், திருப்போரூர், பன்னூர் ஆகிய ஊர்களை ஆய்வு செய்து பிரசீலித்த பிறகே எல்லா வகையிலும் பொருத்தம் உள்ள பகுதியாக அரசால் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான விமானங்கள் நிறுத்துவதற்கும், விமான நிலைய முனையம் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்கும் சுமார் 4700 ஏக்கர் நிலங்கள் தேவைப்படுகின்றன.

பல்வேறு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தொடர்ச்சியான நிலங்கள், பரப்பு, நில அமைப்பு மற்றும் நில மதிப்பு ஆகிய காரணிகளை கருத்தில்கொண்டு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.

புதிய விமான நிலைய திட்டப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியின் நீர்நிலைகள், விவசாய நிலங்களின் நீர்ப்பாசன தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இணைக்கப்படும்.

நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள நீர்நிலைகள் தேவைப்படும் இடங்களில் ஆழப்படுத்தப்படும்.

தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு உடன்படும் நில உரிமையாளர்களுக்கு சந்தை மதிப்பில் 3.46 மடங்கு இழப்பீடு வழங்கப்படும்.

முத்திரைத் தீர்வு மற்றும் பதிவு கட்டணம் அரசே ஏற்றுக்கொள்ளும்.

குடும்பத்தில் ஒருவருக்கு குறைந்தபட்ச ஊதிய விகிதத்திற்கு குறையாமல் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

அதேபோல கல்வித்தகுதி அடிப்படையில் வேலைக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும்.

வீடு உரிமையாளர்கள் அனைவருக்கும் 5 சென்ட் வீட்டுமனை வழங்கப்படும். 5 சென்ட்டிற்கு மேல் வீட்டுமனை உள்ளவர்களுக்கு அதே பரப்பில் வீட்டு மனை வழங்கப்படும்.

வீடு கட்டி தரப்படும் அல்லது வீடு கட்டுமான செலவு வழங்கப்படும். மறு குடியமர்வு பகுதியில் அடிப்படை கட்டமைப்புகளான குடிநீர், மின்சாரம், நியாயவிலைக் கடைகள், தபால் அலுவலகம், போக்குவரத்து வசதிகள் உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

குடும்பத்தில் ஒருவருக்கு குறைந்தபட்ச ஊதிய விகிதத்திற்கு குறையாமல் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

அதேபோல, கல்வித்தகுதி அடிப்படையில் வேலைக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும்.

புதிய விமான நிலையம் அமைப்பதன் மூலம் பரந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவது மட்டுமன்றி, விமான நிலையம் மூலம் உருவாகும் அனைத்துப் பொருளாதாரப் பலன்களையும் அவர்கள் கிடைக்கப்பெறுவர் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பா. மகிழ்மதி

You might also like