தமிழகத்தில் அமைதியை உருவாக்குவோம்!

ஊர்சுற்றிக் குறிப்புகள்

தமிழகத்தில் அண்மையில் நடந்து வரும் பல்வேறு சம்பவங்களால் மத சகிப்புத் தன்மை குறைந்து வருகிறதோ என்கின்ற உணர்வு ஏற்படுத்துகிறது.

அதிலும் அண்மையில் கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே வாகனங்கள் தீ வைக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை அடையாள அணிவகுப்பை அங்கு நடத்தியிருக்கிறது.

தொடர்ந்து அதிகபட்சமான காவல்துறை பாதுகாப்பு அங்கு போடப்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் பதற்றம் தணிந்த பாடாக இல்லை.

கோயம்புத்தூர் பெரிய ஒரு தொழில் நகரமாக இருந்தாலும்கூட அதில் பல்வேறு மதம் சார்ந்தவர்கள் இணைந்து வாழும் ஒரு பெரு நகரமாகவே இருந்திருக்கிறது. ஆனால், அதே சமயத்தில் அங்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் மதப் பதற்றங்கள் உருவாகக்கூடிய நகரமாகவும் அது இருந்திருக்கின்றது.

இதை என்னுடைய நேரடி அனுபவத்தில் பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன். 80-களில் துவங்கி கோவையில் நடந்தேறிய பல்வேறு கலவரங்களையொட்டி அங்கு நேரடியாக சென்று அதைப் பற்றி பலமுறை எழுதியவன் என்கிற முறையில் சில விஷயங்களை சொல்ல வேண்டியிருக்கிறது.

முதலில் 1980-களுக்குப் பிறகு இந்து முன்னணித் தலைவரான ராமகோபாலன் தாக்கப்பட்ட பிறகு கோவையில் பெரும் பதற்றம் உருவானது. கோவை ரயில் பிரயாணத்தின்போது தாக்கப்பட்ட அவர், பிறகு மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது ஒரு வார இதழின் சார்பாக நான் அவரை பேட்டி காணச் சென்றிருந்தேன். அவ்வளவு கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அந்த நேரத்திலும் கூட அவர் பேசிய பேச்சுகளை நான் அப்பொழுது பதிவு செய்திருந்தேன்.

அதற்கு பிறகும் பல தடவைகள் கோயம்புத்தூரில் கலவரங்கள் நடந்திருக்கின்றன. பலர் அடுத்தடுத்து பழிவாங்கும் நோக்கில் கொல்லப்படுவது என்பதும் நடந்திருக்கிறது.

கோயம்புத்தூரில் நடந்த குண்டு வெடிப்புகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அதையொட்டி கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள்.

அப்போது அந்த குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்திப் பேசப்பட்ட பாட்ஷாவை சிறையில் சந்தித்து எடுத்த பேட்டி அப்போது ஒரு வார இதழில் வெளிவந்து, பெரிதும் கவனிக்கப்பட்டது.

ஆனால் கோயம்புத்தூரில் இரு மதம் சார்ந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால், இருபக்கமும் மதக்கலவரங்களுக்கான தூண்டுதல்கள் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன.

தற்போது சமீபகாலமாக கோவையில் அப்படிப்பட்ட கலவரங்கள் நடக்காத நிலையில், அண்மையில் அங்கு நடந்திருக்கிற நிகழ்வுகள் கவலையை ஏற்படுத்துகின்றன.

இந்த நிலையில் மதம் சம்பந்தப்பட்டப் பேரணிகளுக்கு அனுமதி கொடுப்பதும் நடந்திருக்கிறது.

இப்படி ஒரு சூழலில் மதம் சம்பந்தப்பட்ட பதற்றங்கள் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், மதம் தொடர்பான பேரணிகள் நடத்த அனுமதிப்பது மேலும் எந்தவிதமான பதற்றத்திற்கும் வழிவகுத்து விடக்கூடாது.

அண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் அலுவலகங்கள் சோதனையிடப்பட்டிருக்கின்றன. அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதைப் போன்ற சம்பவங்களால் சிறுபான்மையினர் இடத்தில் ஒரு அச்ச உணர்வு உருவாகியிருக்கிறது. இந்த அச்ச உணர்வைக் குறைத்து, அங்கு நிகழ்கின்ற எந்தவிதமான மத நோக்கத்தினாலான தாக்குதல்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது.

சிறுபொறி மாதிரி தற்போது உருவாகி இருக்கின்ற இந்தப் பிரச்சினையை சரியாக கையாளத் தவறிவிட்டால் இது மேற்கொண்டு பல விதங்களில் பரவி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக உருமாறவும் வாய்ப்பு இருக்கிறது.

அது தற்போது இருக்கும் திமுக அரசுக்கே ஒரு சவாலான பிரச்சனையாக மாறி விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கும் தாக்குதல்களும், கைதுகளும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்து விட்டது என்று குற்றம் சாட்டுவதற்கு காரணமாகி விடக்கூடாது. ஒன்றிய அரசு வேறு சில முடிகளை எடுப்பதற்கு வருவதற்கு தீணியும் போட்டுவிடக் கூடாது.

எந்த மதமும் அமைதியையும் பிறரை நேசிப்பதையுமே தன்னுடைய மத நூல் மூலமாக வலியுறுத்தி இருக்கிறது. இது எந்த மதத்திற்கும் பொருந்தும்.

இப்படிப்பட்ட மதங்கள் வலியுறுத்துகிற அமைதியை சீர்குலைக்கும் விதத்தில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் செயல்படுவது தமிழகத்திற்கு நல்லதல்ல.

ஒருவேளை இந்த விதமான பதற்றங்கள் நீடிப்பது தொழில் நகரமாக இருக்கின்ற கோவையினுடைய பல்வேறு தொழிலை பெரிதும் பாதிக்கும்.

பல வியாபாரிகளும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். இதனால் அங்கு ஒரு சுமூகமான இயல்பான வாழ்க்கையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. எப்படியாவது கோவையில் அமைதியான ஒரு சூழலை ஏற்படுத்துங்கள்

– மணா

You might also like