1,80,000 ரூபாயும் 10 ரூபாய் நாணயங்களாக…!

ஓசூரில் பத்து ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து புதிய இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜிவ். தனியார் மருத்துவமனையில் நிர்வாக மேலதிகாரியாக வேலை பார்த்து வரும் இவர், கடந்த மூன்று ஆண்டுகளாக 10 ரூபாய் நாணயங்களை சேமித்து வருகிறார்.

இந்நிலையில், புது இருசக்கர வாகனத்தை வாங்க தான் சேகரித்து வைத்திருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களை பைக் ஷோரூமில் கொடுத்து புதிய அப்பாச்சி பைக்கை வாங்கியுள்ளார்.

8 மூட்டைகளில் கட்டி எடுத்து வந்த 10 ரூபாய் நாணயங்களை எண்ணுவதற்கு இரண்டு மணி நேரம் ஆனதாகக் கூறப்படுகிறது.

பேருந்துகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை மக்கள் வாங்குவதற்கு தயங்கும் நிலையில்,

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என்பதை வலியுறுத்தி ராஜீவும் அவரது நண்பர்களும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

You might also like