ஜவுளி வடிவமைப்பாளர் பிரிஜிட் சிங், நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தாஜ்மஹாலைக் கட்டிய பேரரசர் ஷாஜகானுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு துணியை எடுத்து மடிக்கிறார்.
42 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்குச் சென்று ஒரு மகாராஜாவின் குடும்பத்தை மணந்த அவருக்கு இந்த நேர்த்தியான துணி எப்போதும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது.
பிரிஜிட் சிங்குக்கு வயது 67. ஆனால், அவர் 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் அரசாண்ட மொகலாய மன்னர்களின் பாரம்பரியமான பிளாக் பிரிண்டிங் கலையை உயிர்ப்புடன் வைத்திருக்க பாடுபடுகிறார்.
ராஜஸ்தானில் உள்ள தனது பாரம்பரிய அச்சுப் பட்டறையில் நேரத்தைச் செலவிடும் பிரிஜிட், “இந்த வகையான மொகலாய டெக்ஸ்டைல் வடிவமைப்பிற்கு மறுமலர்ச்சியை வழங்கிய முதல் நபர் நான்தான்” என்கிறார்.
பாரிஸில் அலங்காரக் கலைகள் பற்றிப் படித்த பிரிஜிட் சிங், தன் 25 வயதில் அதாவது 1980 ஆம் ஆண்டில் மேற்கு இந்தியாவின் ஜெய்ப்பூருக்கு வந்தடைந்தார்.
இது பொருட்களில் வடிவங்களை அச்சிட மரத்தின் செதுக்கப்பட்ட பகுதிகளைப் பயன்படுத்தும் நுட்பத்தின் கடைசி இடமாகும்.
“நான் இஸ்ஃபஹானில் மினியேச்சர் ஆர்ட் பயிற்சி பெறவேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால், அயதுல்லாக்கள் ஈரானுக்கு வந்துவிட்டார்கள்.
1979 இல் இஸ்லாமியப் புரட்சி நடந்த காலகட்டம். சோவியத் ரஷ்யா படையினர் ஆப்கானிஸ்தானுக்கு அப்போதுதான் வந்திருந்தனர்” என்று அவர் நினைவுகூர்ந்தார். பிறகு அவர் ஜெய்ப்பூரில் மினியேச்சர் கலையை கற்றுமுடித்தார்.
சில மாதங்களுக்குப் பிறகு, ராஜஸ்தான் மகாராஜாவுடன் தொடர்புடைய உள்ளூர் பிரபுக்களின் குடும்பத்தினருக்கு பிரிஜிட் அறிமுகப்படுத்தப்பட்டார்.
முதலில், மினியேச்சர் ஓவியத்தில் தன் திறனைக் காட்ட அவர் முயற்சி செய்தார். பாரம்பரிய காகித வேலைக்காக நகரத்தைச் சுற்றிப்பார்த்த பிறகு, பிளாக் பிரிண்டிங்கைப் பயன்படுத்தும் பட்டறைகளைப் பார்த்தார்.
ஒரு சில தாவணிகளைத் தயாரிப்பதன் மூலம் பாரம்பரிய மொகலாய கலையை மீட்டுருவாக்கம் செய்யத் தொடங்கினார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் லண்டன் வழியாகச் சென்றபோது, இந்திய துணிகளை ஆராதிக்கும் நண்பர்களுக்குப் பரிசாக வழங்கினார்.
கடந்த இருபது ஆண்டுகளாக இரண்டு ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற கோட்டையிலிருந்து ஒரு மைல் தூரத்தில் தன் சொந்த கலைக்கூடத்தைக் கட்டினார்.
அதற்கு முன்பு, அவர் நகரத்தில் உள்ள அழகிய வேலைப்பாடுகளைத் துணிகளில் உருவாக்கும் கலைஞர்களின் குடும்பத்துடன் பணியாற்றினார்.
ராஜஸ்தான் மினியேச்சர்களின் முக்கிய சேகரிப்பாளரான பிரிஜிட் சிங்கின்
மாமனார், ஷாஜஹானுடன் இணைக்கப்பட்ட முகலாய கால பாப்பி துணியை அவருக்கு வழங்கினார்.
அதன் மறு உருவாக்கம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
பாரம்பரிய மொகலாய டெக்ஸ்டைல் வடிவத்தை மீட்டுருவாக்கம் செய்வது அவ்வளவு எளிதானதல்ல.
“வேலை மெதுவாகவும் சிக்கலானதாகவும் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் 40 மீட்டருக்கு மேல் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது” என்கிறார் பிரிஜிட் சிங்.
பா. மகிழ்மதி