பொதுச்சொத்துக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

பேராசிரியர் டாக்டர். க.பழனித்துரை எழுதும் ‘நம்பிக்கை பஞ்சாயத்து’! 

தொடர்- 3

பஞ்சாயத்து நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் பற்றிய முழு விபரத்தையும் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து பெற்று மக்களுக்கு எடுத்துக் கூறியது ஒரு மகத்தான பணி.

இதுவரை இப்படிப் பொதுச் சொத்துக்கள் இந்த கிராமப் பஞ்சாயத்துக்கு உள்ளன. அவைகள் மக்களின் சொத்து.

அவைகளை மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற புரிதலை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. அந்த வகையில் இது ஒரு முக்கியப் பணி.

கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து இந்தத் தகவலைப் பெறுவது என்பதே ஒரு மிகப்பெரிய போராட்டச் செயல்.

இதற்கான புரிதலுடன் நம் தலைவர்கள் செயல்படவில்லை என்றால் அவர் ஒரு குட்டி ராஜ்யம் அந்த ஊரில் நடத்திக் கொண்டிருப்பார்.

பேரிடர் மேலாண்மையில் பங்காற்றிய பஞ்சாயத்து

அடுத்து பெரும் தொற்று காலத்தில் மக்களைப் பாதுகாத்தது, மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஆதிவாசி மருத்துவமனையுடன் இணைந்து செய்தது மக்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவரின்மேல் பஞ்சாயத்தின் மேல் பெரும் நம்பிக்கை கொள்ள வைத்தது.

அத்துடன் 100% தடுப்பூசி செலுத்தி சாதனை செய்தது இந்தப் பஞ்சாயத்து. பெருந்தொற்றில் ஒருவர்கூட இறப்பில்லாமல் இந்தக் கிராமம் பாதுகாக்கப்பட்டது.

100 நாள் வேலையைப் பயன்படுத்தி வாய்க்கால்களைத் தூர்வாரி எங்கும் தண்ணீர் ஓட வைத்தது அதனைத் தொடர்ந்து தடுப்பணை கட்டி விவசாயத்திற்கு உதவி செய்தது, விவசாயிகளிடம் ஒரு மாற்றுச் சிந்தனையை உருவாக்கியது.

பஞ்சாயத்துப் பணிகளை மேற்பார்வையிட அனைத்து வார்டு உறுப்பினர்களையும் தயார் செய்தது அடுத்த மிக முக்கியமான பணியாகும்.

லஞ்ச உலகில் லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் பஞ்சாயத்துக்கான திட்டங்களைப் பெற்றது என்பதுதான் அடுத்த மிகப்பெரும் சாதனை.

அதற்கான உழைப்பு அதாவது அலுவலர்களையும், அதிகாரிகளையும் நாங்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் ஏழைகள் என்பதை அவர்களிடம் நிரூபணம் செய்ய எடுத்த நேரம் என்பது ஒரு கடினமான பணி.

பழங்குடி மக்களுக்கு ஆதார் அட்டை பெற்று தருவதிலிருந்து தனிக்குடும்பங்களுக்குத் தரும் அரசுத் திட்டங்களைப் பெறுவதற்கு மக்களை திரட்டி லஞ்சம் இல்லாது செய்து கொடுத்தது என்பது ஒரு மன நிறைவு தரும் செயல்.

இந்த பணிகள் அனைத்தும் மிக எளிதாகச் செய்த பணிகள் அல்ல. அத்தனை பணிகளுக்கும் இதுவரை அதிகாரத்தை சுவைத்தவர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பதவி சுகம் மட்டுமல்ல, பணம் பெற்று வாழ்ந்தவர்கள் கொடுத்த பிரச்சினைகள் கொஞ்சமல்ல.

அவைகள் அனைத்தும் சவால்களாக எங்கள் முன் நின்றது. எங்களுக்கு உறுதுணையாக சோஃபா (SOFA) என்ற நிறுவனம் மலைபோல் நின்றது.

“எங்கள் பஞ்சாயத்து உறுப்பினர்களின் தன்னம்பிக்கை புரிதல் ஒற்றுமையாகப் பஞ்சாயத்தில் செயல்பட்டு பணிகள் நடக்க ஆரம்பித்தவுடன் மக்களின் மன ஓட்டம் பஞ்சாயத்தின் பக்கம் திரும்பியதும்,

சூரிய ஒளிபட்டு பனிப்படலம் கரைவதுபோல் அனைத்து எதிர்ப்புக்களும் குறைய ஆரம்பித்தது.

எங்கள் பஞ்சாயத்தில் மதுக்கடை இல்லாமல் இன்றுவரை பார்த்து வருகின்றோம்.

காட்டுப் பகுதியில் மின்சாரக் கம்பங்கள் அடிக்கடி காற்றில் சாய்வதைத் தவிர்க்க கேபிள் புதைத்து மின்சாரம் கொண்டுவர இரண்டு கோடி ரூபாயில் திட்டம் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாச் செயல்பாடுகளுக்கும் எங்களுக்குப்பின் நிற்க ஒரு நிறுவனம் இருக்கிறது. அந்த நிறுவனம் மக்களுடன் மக்கள் சேவையில் கடந்த முப்பது ஆண்டுகளைத் தாண்டி பணி செய்து வருகிறது.

உள்ளாட்சியில் பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீடு, பழங்குடி பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று கூறுவது எளிது.

அப்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் சாதாரண குடும்பப் பெண்கள் குறிப்பாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பதவியைப் பிடித்தாலும் செயல்படும் சூழல் உள்ளதா என்பதுதான் கேள்வி.

இல்லை என்று ஆணித்தரமாகப் பதில் கூறி விடலாம். ஒன்று அவர்களுடைய பொருளாதாரச் சூழல் அவர்களைப் பணி செய்ய விடாது. அடுத்து இன்றைய ஆளுகை நிர்வாகம் என்பது சிக்கல் நிறைந்தது.

அதைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானது. ஆக்கையால்தான் பஞ்சாயத்து எழுத்தர்கள் தலைவர்களைக் கட்டுப்படுத்துகின்றனர்.

இந்தச் சூழலைத் தாண்டுவதற்கு நமக்கு ஆதரவுச் சூழல் வேண்டும். அதை ஓர் நிறுவனம்தான் செய்ய முடியும்” என்ற ஓர் பெரிய உரையை நிகழ்த்தினார் அந்த பஞ்சாயத்துத் தலைவி.

அந்த நேரத்தில் பஞ்சாயத்துத் தலைவரைச் சந்தித்து ஏதோ ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாண வந்தவரை அமர வைத்து பஞ்சாயத்தைப் பற்றி விவாதித்தோம்.

திருவள்ளுவர் போல் முத்தாய்ப்பாக ஒரு சில கருத்துக்களைப் பதிவு செய்தார்.

“கடந்த காலங்களில் ஊழலில் ஊறிய பஞ்சாயத்தை இன்று அவை முற்றிலும் தவிர்க்கப்பட்டுச் செயல்படுகிறது என்பதால் மக்கள் இந்த அமைப்பின் மேல நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

அது மட்டுமல்ல எல்லா இடங்களிலும் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வாகப் பல செயல்பாடுகள் நடைபெறுகின்றன, அதை மக்கள் பார்க்கின்றார்கள்.

அதனால் கிராமசபையைக் கூட்டியவுடன் மக்கள் அங்கு வருகின்றார்கள். பேசுகின்றார்கள். குறைகளை தெரிவிக்கின்றார்கள். கிராமசபையில் பேசிய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்து விடுகிறது.

எனவே மீண்டும் மக்களைக் கிராமசபைக்கு வர வைக்கிறது பஞ்சாயத்துத் தலைவரின் செயல்பாடு. இவருக்கு முன் இருந்த பஞ்சாயத்துத் தலைவர் தன் கணவனிடம் அனைத்து பணிகளையும் விட்டு விட்டு வீட்டுக்குள்ளேயே இருந்தார்.

அவரின் கணவர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் பெங்களூரில் ஏதோ பணி செய்கின்றார். அவருக்கு அங்கும் குடும்பம் உண்டு.

அவர் அங்கிருந்தபடியே பஞ்சாயத்து கிளார்க் மூலம் பஞ்சாயத்தை ஆட்சி செய்தார். பஞ்சாயத்து உறுப்பினர்களை மதுவில் திளைக்க வைத்தார்.

பஞ்சாயத்து கிளார்க் ஒரு குறுநில மன்னர்போல் மக்களிடம் வசூலிப்பார், மக்கள் குறைகளுக்கு அவரிடம் எந்த தீர்வையும் எதிர்பார்க்க முடியாது.

கிளார்க் கையெழுத்து போடச் செல்லுகின்ற இடத்தில் பஞ்சாயத்துத் தலைவர் கையெழுத்துப் போடுவார்.

அவருக்கும் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவரும் ஒரு ஆதிவாசிப் பெண்தான்.

அவரை பஞ்சாயத்தை பிடிப்பதற்காகவே பெங்களூரிலிருந்து வந்து திருமணம் செய்து கொண்டு அவர் மூலம் பஞ்சாயத்தை பிடித்து குட்டி ராஜ்யம் நடத்தி மக்களைச் சீரழித்தனர்.

இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வித்தியாசமாகப் பணி செய்வதை மக்கள் அனைவரும் பார்க்கின்றனர்.

இவரின் கணவர் பஞ்சாயத்து வேலைகளைச் செய்வதில்லை. அவர் ஒரு நிறுவனத்தில் பணி செய்கின்றார். பஞ்சாயத்துத் தலைவருக்கு ஒரு புரிதல் இருப்பதால் இந்தச் செயல்பாடுகள் எளிதாக நடைபெறுகின்றது” என்றார் அந்த மனிதர்.

பஞ்சாயத்து அலுவலகத்துக்கு மக்கள் ஏன் வருகிறார்கள் என்றால் அங்கு மக்கள் குறைகளைக் கேட்க ஆள் இருக்கிறது என்ற நம்பிக்கை.

அடுத்து அந்தக் குறைகளை நிவர்த்திக்கப் பஞ்சாயத்து எப்படியும் செயல்படும் என்ற திடமான எண்ணம்.

அப்படி தங்கள் பிரச்சினைகள் தீர்வதைக் காணும்போது மக்களுக்குப் பஞ்சாயத்திடம் அதிகாரம் இருக்கிறது என்று நம்புகின்றனர்.

அது மட்டுமல்ல பஞ்சாயத்துத் தலைவர் முழு நேரமாக பஞ்சாயத்து பணியில் ஈடுபட்டுக் காவல் நிலையம், நீதிமன்றம் என துணிவுடன் அலைந்து மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதைப் பார்த்த மக்களுக்குப் பஞ்சாயத்துத் தலைவரின் மேல் மரியாதை பிறக்கிறது.

பஞ்சாயத்து என்பது தலைவர் கையில் மட்டும் இல்லை, அவருடன் ஒரு குழு செயல்படுகிறது என்று உணர்ந்தவுடன் மக்கள் பயமற்று செயல்படுகின்றனர். பிரச்சினைகளை விவாதிக்கின்றனர்.

பல்லாண்டுகளாகத் தீராத பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது மக்களுக்கு இந்த அமைப்பின் மீதும், அதனை நடத்துகின்றவர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் நிற்பது பஞ்சாயத்தை வேகமாகச் செயல்பட வைக்கத் தூண்டுகிறது” எனக் கூறிவிட்டு எனக்குப் பணி இருக்கிறது வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் 14 மாவட்டங்களில் ஓர் ஆய்வினை மேற்கொண்டேன் நான். காந்திகிராம பல்கலைக் கழகத்தில் பணி செய்தபோது.

எந்தெந்தத பொதுச் சேவைகள் அரசாங்கம் செய்யத் தவறினால் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை அரசாங்கத்துக்கு வெளிப்படையாகக் காண்பித்து அரசை நிர்பந்தப்படுத்துவார்கள் என்று பொதுமக்களிடம் ஓர் ஆய்வினை மேற்கொண்டேன். நம் மக்கள் கூறிய பதில் சற்று வித்தியாசமானது.

உங்கள் பள்ளி இயங்கவில்லை என்றால் நீங்கள் எதாவது நடவடிக்கை எடுப்பீர்களா? உங்கள் சுகாதார நிலையம் முறையாகச் செயல்படவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பார்களா?

இந்தக் கேள்விகளுக்கு இல்லை என்று பதிலளித்தனர்.

எவற்றுக்கெல்லாம் நீங்கள் வெகுண்டெழுந்து அரசை நிர்பந்தப்படுத்துவீர்கள் என்று கேட்டபோது “எங்களுக்கு குடி தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், பொது வினியோகக் கடையில் எங்கள் ரேஷன் கிடைக்கவில்லை என்றால்,

எங்கள் வசிப்பிடத்திற்கு மின் வசதி கிடைக்கவில்லை என்றால், எங்கள் ஊருக்கு பேருந்து வரவில்லை என்றால், எங்கள் சாலைகள் முறையாகப் போடவில்லை என்றால் நாங்கள் வீதிக்கு வந்து போடுவோம்” என்றனர்.

இது தமிழகம் முழுவதும் மக்களிடம் இருக்கும் ஓர் உணர்வு மற்றும் பார்வை. ஆகையால்தான் இந்தப் பஞ்சாயத்திலும் பொதுமக்களிடம் பஞ்சாயத்து மக்கள் பணியில் இருக்கிறது என்பதைக் காட்டும் விதமாக எங்கெல்லாம் சாலை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன;

எங்குப் பாலங்கள் கட்டப்படுகின்றன எங்கெல்லாம் மின் விளக்குப் பொருத்தப்படுகின்றன, எங்கெல்லாம் புரியக் குடிதண்ணீர் வசதிகள் உருவாக்கப்படுகின்றன என்பதை மக்களுக்குத் தெரிவித்த வண்ணம் பஞ்சாயத்து செயல்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

பஞ்சாயத்து அலுவலகத்தில் கிடக்கும் பிட் நோட்டீஸ் மூலம். பஞ்சாயத்து அலுவலகத்தில் இண்டெர்நெட் வசதி ஏற்படுத்தியதன் விளைவு அந்த சேவையைப் பயன்படுத்திடத் தினந்தோறும் மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

அந்த வசதியை பயன்படுத்த வரும் மக்கள் வசதியைப் பெறுவதுடன் பஞ்சாயத்து என்னென்ன பணிகளிலெல்லாம் ஈடுபட்டு செயல்பட்டு வருகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு செல்கின்றனர்.

பஞ்சாயத்து மக்களின் தேவையில் செயல்படுவதால், பஞ்சாயத்துப் பொதுமக்களை அழைக்கும் போது உடன் வந்து சேர்கின்றனர் கிராம சபைக் கூட்டத்திற்கு.

இந்த பெருந்தொறறு காலத்தில் பள்ளிக் குழந்தைகள் வகுப்பறைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே ஒளிக்காட்சியில் இணைந்து பள்ளி வகுப்புக்களைச் சென்றடைய முடிந்தது மாணவர்களுக்கு.

தங்கள் செய்கின்ற பணிகளை எல்லாம் அச்சிட்டு மக்களுக்கு வினியோகம் செய்தது அந்தப் பஞ்சாயத்து.

அது மட்டுமல்ல கிராமப் பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கையும் அச்சிட்டு மக்களுக்கு வழங்கி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது சிட்லிங் கிராமப் பஞ்சாயத்து.

இந்த முன் மாதிரி வெளிப்படையான நிர்வாகச் செயல்பாடுகள் பஞ்சாயத்தின் மேல் மக்கள் வைத்திருந்த அதிருப்தி மாறி, மக்கள் பஞ்சாயத்தின் மேல் நம்பிக்கை வைத்து கிராமசபைக் கூட்டத்திற்கு அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வருகின்றார்கள்.

இந்த மக்கள் செயல்பாடு பஞ்சாயத்தை வலுப்பெறச் செய்துள்ளது.

இவற்றுக்கு மேலாக அந்த பஞ்சாயத்துப் பகுதியில் இயங்கும் பொது நிறுவனங்களான பள்ளிக்கூடம், பொது வினியோகக் கடை, சுகாதார மையம், சத்துணவுக்கூடம், சமுதாயக் கூடம், நூலகம்,

பஞ்சாயத்து அலுவலகம், உயர் அழுத்த நீர்த் தொட்டி அனைத்தையும் பாதுகாத்துப் பராமரிக்க எடுக்கப்படம் நடவடிக்கைகள் மக்களைப் பஞ்சாயத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

முறைப்படுத்தப்பட்ட பொது நிறுவனங்கள் துடிப்புடன் செயல்பட ஆரம்பித்தபின் அந்த நிறுவனங்களின் செயல்பாடும் மாற ஆரம்பித்தன.

80% ஆதிவாசி மக்கள் வசிக்கும் பஞ்சாயத்தில் மக்களாட்சியைப் பலப்படுத்துவதற்கும், நிர்வாகத்தைச் சீர் செய்வதற்கும் எடுத்த பெரும் முயற்சிகளில் பின்புலமாகச் செயல்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தைப் புறம் தள்ள முடியாது.

அந்த நிறுவனத்தின் பணி என்பது தேர்தலில் செலவில்லாமல் மக்கள் ஆதரவுடன் இந்தப் பஞ்சாயத்துத் தலைவரை வெற்றி பெற வைத்தது மிகப் பெரும் சாதனை.

வெற்றி பெற்ற பிறகுத் தன் திறனை வளர்த்துக் கொள்ளப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு பெருமுயற்சி செய்து பணியாற்றுவது பஞ்சாயத்துத் தலைவரின் சிறப்பு.

100 நாள் வேலையைப் பயனுள்ளதாக மாற்றும்போது பொதுச் சொத்துக்கள் உருவாவது மட்டுமல்ல. நாம் எதிர்பாராத பல மாற்றங்கள் குடும்பங்களில் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தொண்டு நிறுவனம் சமூகத்தோடு இரண்டறக் கலந்து பணி செய்கின்றபோது ஒட்டு மொத்தக் கிராமம் செயல்பாட்டில் தோய்ந்துள்ளதைப் பார்க்க முடிந்தது.

விவசாயிகளின் உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்பு முறை என்பது விவசாயிகளை உற்சாகப்படுத்தி,

அவர்களின் பொருள்களை மதிப்புக்கூட்டி, சந்தைப் பொருளாக விற்று ஒட்டுமொத்த விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும் வகையில் செயல்படுவது விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தியது என்பதை இந்த பஞ்சாயத்தில் பார்க்க முடிகிறது.

தங்களுக்குத் தேவையான உடைகளைத் தயாரித்துக் கொள்ளப் பெண்களை குழுக்களாக்கி, திறன் கூட்டிச் செயல்பட வைத்துள்ளதும் இந்தப் பஞ்சாயத்தில் மக்கள் சோம்பித் திரியாமல் பொருளாதார மேம்பாட்டுக்காக பணியாற்றுவது தெரிகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக ஊழலில் சிக்கித் தவித்த மக்களுக்கு ஊழலில்லாமல், கையூட்டுக் கொடுக்காமல் எல்லாப் பணியும் மக்களுக்குக் கிடைப்பது என்பதுதான் அந்தப் பஞ்சாயத்தின் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கைக்குக் காரணமாக விளங்குகின்றது.

ஒரு பஞ்சாயத்துத் தலைவி ஆரோக்கியம் பற்றிய புரிதலுடன் செயல்படும் போது, அந்தப் பஞ்சாயத்து அடிப்படை மாறுதலுக்கான பணிகள் செய்வதைப் பார்க்க முடிகிறது.

தூய்மையான குடி தண்ணீர், தூய்மையான சாலை மற்றும் வசிப்பிடம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு,

சத்துள்ள உணவு, வாழ்வாதாரம், கல்வி, திறன் வளர்ப்பு, விவசாயம் போன்ற பணிகள் ஒருங்கிணைந்து முனைந்து அரசுடன் இணைந்து செயல்படும்போது மாற்றங்கள் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதானே.

ஒரு தொண்டு நிறுவனம் பஞ்சாயத்துடன் கைகோர்த்தால் எவ்வளவு மாற்றத்தைப் பஞ்சாயத்துக்களில் கொண்டுவர முடியும் என்பதற்கு இந்தப் பஞ்சாயத்து இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இதற்கு முதலில் நாம் பாராட்ட வேண்டியது அந்த தொண்டு நிறுவனத்தைத்தான்.

க.பழனித்துரை

காரணம், பஞ்சாயத்தில் நடந்த முறைகேடுகளைக் கண்டும் காணாமல் இருக்காமல் துணிவுடன் களத்தில் ஒரு நல்ல,

அறிமுகமான பெண்மணியை இறக்கி அவருக்குத் துணிவு கொடுத்துப் போட்டியிட வைத்து,

அவருக்குப் பக்கபலமாகச் செயல்பட்டு அவரை வெற்றி பெற வைத்தது என்பது சாதாரணப் பணி அல்ல.

வெற்றி பெற்ற பெண்மணி பஞ்சாயத்தில் வெற்றி பெறலாம், ஆனால் தன் சொந்த வாழ்க்கையில் மாதச் சம்பளத்தை இழந்து விட்டார்.

எதோ ஒரு சமூகப் பார்வை, அவரை இந்தப் பணிக்கு வந்திட ஊக்குவித்திருக்கிறது. இவருக்கான புரிதலையும் அந்த தொண்டு நிறுவனம் தான் வழங்கியிருக்கிறது.

You might also like