களைகட்டும் கல்யாண விருந்து!

கல்யாணத்தில் மகிழ்ச்சியையும், நிறைவையும் தருவது விருந்து ஒன்று தான். கல்யாணத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் விருந்து சரியாக அமைந்துவிட்டால் மற்ற குறைகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாமலேயே போய்விடும்.

ஆனால் அந்த விருந்தில் குறை வந்துவிட்டால் எவ்வளவு பிரம்மாண்டமாய் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தாலும் அவை எடுபடாமல் போய்விடும். மனசு வாழ்த்தவில்லையேன்றாலும் வயிறு வாழ்த்திட்டு போகணும் என்று சொல்வார்கள்.

அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கல்யாண சாப்பாட்டை தயாரிப்பதில் நான்கு தலைமுறை அனுபவம் வாய்ந்த மாம்பலத்தில் உள்ள கேட்டரிங் நிறுவனத்தை நடத்தும் அனந்தகிருஷ்ணன் தன்னுடைய அனுபவத்தின் முதிர்ந்த அலோசனைகளை சொல்கிறார்.

உங்கள் விருப்பத்தையும், பட்ஜெட்டையும் கேட்டரரிடம் தெரிவியுங்கள், அவர்கள் தரும் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு திருமண மெனுவைத் தேர்ந்தெடுங்கள்.

கல்யாணத்துல பந்தி போட்டு சகல உபசரிப்போடு உணவு பரிமாறுவது தான் சிறப்பாக இருக்கும்.

ஆனால் அவர்கள் விருப்பத்திற்கு தக்கபடி சாப்பாட்டை அவர்களே தேர்வு செய்யும் பபே சிஸ்டம் தான் இப்போதைய டிரெண்ட். என்னைப் பொருத்தவரைல் ஒரு திருமணத்தில் இவை இரண்டுமே இருந்தால் சிறப்பானதாய் இருக்கும்.

இப்போதெல்லாம் திருமணத்தைக் காட்டிலும் ரிசப்ஷன் தான் ரொம்பவும் கிராண்டாக நடக்கிறது. ரிசப்ஷனுக்கான மெனுவில் அதிகம் வெரைட்டிகளை சேர்த்துக் கொண்டு விருந்தினர்களை அசத்தலாம்.

மூன்று, நான்கு மணி நேரம் ரிசப்ஷன் நடக்கும். ரொம்பவும் கூட்டம் வரும், அந்த சமயத்தில விருந்தினர்களை சரிவர கவனிப்பதென்பது சவாலானதொரு விஷயம்.

அந்த சமயத்திலும் விருந்தினர்களுக்கு எந்த குறையும் வைக்காமல் கவனித்து, சகல உபசரிப்புடன் உணவு பரிமாறும் போதுதான் கல்யாண விருந்தில் விருந்தினர்களுக்கு ஒரு நிறைவு ஏற்பட்டு மனசும், வயிறும் நிறைந்து, வாழ்த்தும்.

ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த இடத்தில் திடீரென்று ஆயிரத்து நூறு பேர் வந்துவிடும் சூழ்நிலைகளும் உருவாகலாம்.

அந்த மாதிரி சமயங்களிலும் சாப்பாட்டில் குறை வைக்காமல் விருந்தினரை மனநிறைவோடு அனுப்ப வேண்டும். அதற்கான முன் எச்சரிக்கை நடிவடிக்கைகளை ஏற்பாடு செய்து வைத்திருப்பது அவசியம்.

ஒரு சாப்பாட்டை நிறைவாக தருவது என்பது சமையலுக்கு உபயோகப்படுத்துகிற பொருட்களை தரம் பார்த்து தேடிப்பிடித்து வாங்குவதில் இருந்தே தொடங்குகிறது என்பதை கவனத்தில் கொண்டு, அதை கேட்டரிடமும் வலியுறுத்த வேண்டும்.

நேரம் தவறி வருகிறவர்களுக்கு வந்ததும் வெல்கம் டிரிங் கொடுக்கலாம். பாப் கார்ன், ஐஸ் கிரீம், பானி பூரி சாண்ட்விச் போன்ற ஸ்டால்களும் திருமணங்களில் போடலாம்.

திருமணத்தில் குறை வந்துவிட்டால் அதை சரி செய்து முடியாது. திருமணங்களில் மட்டும் அடுத்த முறை சரிசெய்து கொள்ளலாம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. எனவே நம்ம வீட்டு கல்யாணமாக நினைத்து செய்கிற கேட்டரரை தேர்வு செய்வது மிக முக்கியம்.

கல்யாண விருந்து சுவையும், தரமும் நிறைந்ததாய் இருக்க வேண்டும். சுவையையும், தரத்தையும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காத கேட்டரரை மட்டுமே அணுகி ஆர்டரை கொடுக்க வேண்டும் – தெளிவாய் பேசி முடிக்கிறார் அனந்தகிருஷ்ணன்.

கல்யாணம். தொகுப்பு

You might also like