‘விதைத்தது அறுவடையாகும்’ என்ற வார்த்தைகளைச் சுற்றியே இந்த உலகில் அறம் பாவிக் கொண்டிருக்கிறது. அதனாலேயே ’ஒருவர் செய்த பாவம் அவரது அடுத்தடுத்த தலைமுறையையும் தொற்றும்’ என்ற பயம் அக்காலத்தில் இருந்தது.
விவசாயத்தைப் பற்றி துளியும் அக்கறை இல்லாத இன்றைய தலைமுறையினர்க்கு விதையில் மட்டுமல்ல அறுவடையிலும் கூட அக்கறையில்லை.
இந்த சூழலில், அறம் குறித்த கோட்பாடுகளை ஒரு முக்கோணத்துக்குள் அடக்கியது 2019இல் வெளியான ‘ஜீவி’ திரைப்படம். தற்போது அதன் இரண்டாம் பாகம் ஆஹா தளத்தில் வெளியாகியிருக்கிறது.
முதல் பாகத்தின் கதை வசனத்தை எழுதிய பாபு தமிழ், இதில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். வெற்றி, அஸ்வினி, ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் உட்படப் பலர் நடித்திருக்கும் ‘ஜீவி 2’வை எழுதி இயக்கியிருக்கிறார் விஜே கோபிநாத்.
மீண்டும் முக்கோணவியல் விதி!
தான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் இருந்து நகைகளைத் திருடும் சரவணன் (வெற்றி), அங்கிருப்பவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் போன்றே தன் குடும்பத்திலும் நிகழத் தொடங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.
இந்த புதிருக்கான பதிலைத் தேடும்போது முக்கோணவியல் விதி ஒன்று குறித்து ஒரு புத்தகத்தில் தெரிந்துகொள்கிறார்.
அது தரும் தீர்வுகளைத் தேடி ஓடத் தொடங்குபவர், ஒரு கட்டத்தில் தான் திருடிய நகைகள் ஒருகாலத்தில் தனது குடும்பத்தினருக்குச் சொந்தமானவை என்பதை அறிகிறார்.
சூழ்ந்திருக்கும் துன்பங்களில் இருந்து தப்பிக்க பணம் தீர்வல்ல என்று உணரும் சரவணன், கண் பார்வைத் திறனற்று இருக்கும் வீட்டு உரிமையாளரின் மகள் கவிதாவைத் திருமணம் செய்துகொள்கிறார்.
அந்த நகைகளை எடுத்துக்கொண்டு ஓடும் சரவணனின் நண்பன் மணி, பேருந்தில் பயணிக்கும்போது அவற்றைத் தொலைக்கிறார்.
முகம் தெரியாத ஒரு குடும்பம் அந்நகைகளைத் தங்களுடையதாக ஆக்கிக் கொள்கிறது. இரண்டாம் பாகம் சரியாக இதிலிருந்தே தொடங்குகிறது.
திருட்டு சம்பவம் நடந்து பத்து மாதங்கள் கழித்து மணியைச் (கருணாகரன்) சந்திக்கிறார் சரவணன் (வெற்றி). ஷேர் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு புதிதாக கார் வாங்கப் போவதாகச் சொல்கிறார்.
கார் ஓட்டுவது லாபகரமாகச் செல்லும் நிலையில், கவிதாவுக்கு (அஸ்வினி) கண் அறுவைச்சிகிச்சை செய்ய முடிவெடுக்கிறார். அதனால், அவருக்குப் பார்வை கிடைக்கும் என்ற கனவில் மிதக்கிறார்.
இந்தச் சூழலில் கவிதாவின் தாய்மாமா கதிர் (மைம் கோபி) அவர்கள் குடியிருக்கும் வீட்டை வேறொருவரிடம் அடமானம் வைத்திருப்பதாகவும், உடனடியாக அதனைக் காலி செய்ய வேண்டுமெனவும் சொல்கிறார்.
உடல்நலமில்லாமல் இருக்கும் கவிதாவின் தந்தை மரணமடைகிறார். கவிதாவைப் போலவே, சரவணனின் சகோதரி மகளுக்கு திடீரென்று ஒருநாள் கண் பார்வைத்திறன் குறைகிறது. இது போதாதென்று சரவணன் ஓட்டும் காரும் பழுதாகிறது
சட்டென்று வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, வாகனப் பழுது என்று தலையைச் சுற்றி செலவுகள் மொய்க்க, என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் எங்கேயாவது திருட வேண்டுமென்ற முடிவுக்கு வருகிறார் சரவணன்.
மணி கடைக்கு டீ குடிக்க வரும் ஒரு பணக்கார இளைஞரின் (முபாஷிர்) வீட்டில் திருட முனைகிறார். சரவணன் அந்த இளைஞனின் வீட்டில் இருக்கும் நகைகளைத் திருட, அடுத்தநாள் காலையில் அந்த வாலிபர் கொலையாகிக் கிடப்பதைக் கண்டறிகிறது போலீஸ்.
அந்த வாலிபரைக் கொலை செய்தது யார்? நகைகளைத் திருடிய சரவணன், மணி மீது அந்த கொலைப்பழி விழுந்ததா? யார் உண்மையான குற்றவாளிகள் என்று போலீஸ் கண்டறிந்ததா என்று நீள்கிறது ‘ஜீவி2’வின் மீதிப்பாதி.
முதல் பாகத்தில் சொன்ன ‘முக்கோணவியல் விதி’யை ஆளாளுக்கு இதிலும் உச்சரிக்கின்றனர்.
ஆனால், எந்த பாத்திரமும் அதனைத் தற்போதைய நிகழ்வுடன் பொருத்தி விளக்கமளிக்கவில்லை.
போலவே, இரண்டாம் பாகம் என்பதற்காகவே சில திருப்பங்கள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது போன்றும் தோன்றுகிறது. கூடவே, மூன்றாம் பாகத்திற்கான விதைகளும் கூட இதில் தூவப்பட்டிருக்கிறது.
வெற்றி வசப்பட்டதா?
அடர்ந்து வளர்ந்த தாடி, கண்களில் பணம் சம்பாதிக்கும் வெறி என்று சரவணன் எனும் கதாபாத்திரத்தை மீண்டும் நம் முன்னே உலவவிட்டிருக்கிறார் நாயகன் வெற்றி. பதற்றத்தையும் பயத்தையும் மிக எளிதாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகி அஸ்வினிக்கு கணவனுடன் கொஞ்சுவதும் கெஞ்சுவதுமே வேலையாக இருக்கிறது. நாயகனின் நண்பராக வரும் கருணாகரன், ஆங்காங்கே மொக்கை ஜோக்குகள் அடித்து தானும் பயந்து நம்மையும் பயமுறுத்த முயற்சிக்கிறார்.
ரோகிணி, மைம் கோபி, ரமா, முபாஷிர் என்று அனைவரும் சிறப்பாகத் தங்களது பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.
இன்ஸ்பெக்டராக வரும் ஜவஹரைப் பார்த்தவுடன், ‘அட நடிகர் நாசருடைய சகோதரர் அல்லவா இவர்’ என்பது நினைவுக்கு வருகிறது.
நிற்பது, யோசிப்பது, பார்ப்பது என்று பலவற்றில் நாசரின் சாயல் தென்பட்டாலும், உருவத்தில் அவரைவிட இளையவர் என்பது சட்டென்று வேறுபாட்டை உணர்த்துகிறது.
முதல் பாகத்தில் கதை வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தபோது திரைக்கதை தந்த பிரமிப்பு, ஜீவி 2வில் அறவே இல்லை.
அதேநேரத்தில், முன் பாகத்தைப் பிரதியெடுத்தது போன்ற காட்சிகள் இதில் இடம்பெற்றிருப்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
பழைய ஜமீன் பரம்பரை, திருட்டு நகை, தப்பிய குற்றவாளிகள், தண்டிக்கப்பட்ட அப்பாவி என்றே முதல் பாக கதையமைப்பு இருக்கும். இரண்டாம் பாகம் அந்த சித்தரிப்பைச் சற்றே நீட்டித்திருக்கிறது.
அப்பாவியான முஸ்லிம் இளைஞர் ஒருவர் தண்டனைக்கு உள்ளானது முதல் பாகத்தில் காட்டப்பட, இரண்டாம் பாகத்தில் இன்ஸ்பெக்டராக ஒரு முஸ்லிம் மனிதர் பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
போலவே, நாயகனின் பணியிடப் பின்னணியிலும் சில முஸ்லிம் பாத்திரங்கள் காட்டப்படுகின்றன. முக்கோணவியல் விதிப்படி பிரதானக் கதையில் இவர்களுக்கான தொடர்பு அடுத்த பாகத்தில் இடம்பெறுமா என்று தெரியவில்லை.
யதார்த்தமாக சிலரது செயல்பாட்டை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை உண்டாக்குகிறது பிரவீன்குமாரின் ஒளிப்பதிவு.
பிரவீன் கே.எல்லின் படத்தொகுப்பு திரைக்கதைக்கு ஏற்ப நேர்த்தியாக காட்சிகளை அடுக்கியிருக்கிறது.
கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையமைப்பில் பாடல்கள் ஓகே ரகம் என்றாலும், அதனை ஈடுகட்டுகிறது பின்னணி இசை. உமேஷின் கலை வடிவமைப்பு முதல் பாகத்தில் உருவாக்கிய ஈர்ப்பைத் தக்கவைக்கவில்லை.
முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் சுமார் என்ற எண்ணம் தோன்ற, முக்கோணவியல் விதியைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட திரைக்கதையே காரணம்.
திருப்பங்களுடன் கூடிய கதைக்கேற்ப காட்சிகளை வடித்தபிறகு அதில் முக்கோணவியல் விதியைப் பொருத்திப் பார்த்திருந்தால் இந்த பிரச்சனை நிகழ்ந்திருக்காது.
த்ருஷ்யம் முதல் பாகம் தந்த ‘த்ரில்’ உணர்வை இரண்டாம் பாகம் தரவில்லை என்றாலும், முழுப்படமும் பார்த்து முடித்தபிறகு நமக்குள் சின்னதாய் யோசனை எழும்.
முதல் பாகத்தை மீண்டும் பார்க்கும் ஆவல் எழும். அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கத் தவறியிருக்கிறது ‘ஜீவி2’.
எழுத்தாக்கத்தில் கூட்டுழைப்பைச் செலுத்தி இன்னும் கொஞ்சம் மெருகூட்டியிருந்தால் அந்த மாயாஜாலத்தை இப்படமும் நிகழ்த்தியிருக்கும்!
-உதய் பாடகலிங்கம்