இசையமைப்பாளர் இளையராஜாவின் அவரது இசை அனுபவங்களைச் சொல்லும் “கதை கேளு.. கதை கேளு” என்ற தலைப்பில் ஜெயா தொலைக்காட்சியில் வெளிவரும் தொடரில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி.
“மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா?”
- இந்தக் கேள்விக்கு இளையராஜா சொன்ன பதில் :
“எம்.ஜி.ஆர் அப்போது ‘உன்னை விட மாட்டேன்’ என்ற படத்தை எடுப்பதாக இருந்தார். அந்தப் படத்திற்கு என்னை இசையமைக்க அழைத்திருந்தார்.
அப்போது அவர் அரசியலில் இறங்கியிருந்த நேரம்.
அவர் பாடுகிற விதமான ஒரு பாடலை பாடகர் டி.எம்.எஸ்.ஸை வைத்து ஒலிப்பதிவு செய்து அவருக்கு அனுப்பி வைத்தேன்.
அதில் அவருக்குத் திருப்தி இல்லாததால், அதே பாடலை மலேசியா வாசுதேவனை வைத்துப் பாட வைத்து ஒலிப்பதிவு பண்ணி மறுபடியும் அவருக்கு அனுப்பி வைத்தேன்.
அதிலும் அவருக்குத் திருப்தி இல்லாததால், என்னுடைய குரலில் அதே பாடலை ஒலிப்பதிவு பண்ணி அவருக்கு அனுப்பினேன்.
அவருக்கு அந்தப் பாடல் படித்துவிட்டது.
என்னுடைய குரல் எந்த அளவுக்கு அவருக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பற்றிச் சந்தேகமாக நான் அவரிடம் சொன்ன போது “படத்தில் நான் தானே பாடப் போகிறேன். பொருத்தமாகத் தான் இருக்கும்” என்று சொல்லிவிட்டார்.
அந்தப் படம் அதன் பிறகு வராமலேயே போய்விட்டது.