தேஜாவு – அருள்நிதியின் மற்றுமொரு த்ரில்லர் படம்!

’த்ரில்லர் கதையா, அருள்நிதியை போய் பாருங்க’ என்று சொல்லும் அளவுக்கு புதுமுக இயக்குனர்களின் ‘த்ரில்லர்’ திரைக்கதைகளுக்கு உயிர் தந்து வருகிறார் அருள்நிதி. தற்போது வெளியாகியிருக்கும் ‘தேஜாவு’ திரைப்படமும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது.

அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் ‘தேஜாவு’வில் மதுபாலா, அச்யுத் குமார், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன், ஸ்மிருதி வெங்கட், ராமன் ராகவ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது நிகழ்பவற்றை ஏற்கனவே நடந்தது போல உணர்வதைப் பிரெஞ்சு மொழியில் ‘தேஜாவு’ என்று சொல்வார்கள்.

வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’, ’ஜாங்கோ’ ஆகியன இதனை அடியொற்றி உருவாக்கப்பட்டு ’பேண்டஸி’ திரைப்படங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.

இவ்வளவு ஏன், 2006இல் டோனி ஸ்காட் இயக்கத்தில் டென்ஸல் வாஷிங்டன் நடித்த ‘தேஜாவு’ எனும் ஆங்கிலப் படம் இக்கருத்தையே கருப்பொருளாகக் கொண்டது.

அருள்நிதி நடித்துள்ள ‘தேஜாவு’ படமும் அந்த வரிசையில் சேர்கிறதா?

எழுத்தும் நிகழ்வும்!

சுப்பிரமணியன் (அச்யுத் குமார்) என்பவர், ஒருநாள் இரவில் அளவுக்கு மீறிய மது போதையில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்கிறார்.

தான் ஒரு கதாசிரியர் என்றும், தன் எழுத்தில் உள்ள கதாபாத்திரங்கள் போன் செய்து தன்னை மிரட்டுவதாகவும் சொல்கிறார்.

ஆனால், அவர் குடித்துவிட்டு சலம்புவதாக நினைக்கிறது போலீஸ் தரப்பு.

அன்றிரவு காவல் உதவி எண்ணான 100க்கு ஒரு பெண் போன் செய்கிறார். தன் பெயர் பூஜா என்றும், தன்னை முகமூடி அணிந்த கும்பல் கடத்தியதாகவும் சொல்கிறார்.

இரண்டாம் முறை போன் செய்யும்போது சுப்பிரமணியன் பேரையும் அவர் இருக்குமிடத்தையும் சொல்கிறார்.

அடுத்தநாள் காலையில் சுப்பிரமணியன் வீட்டுக்குச் செல்லும் போலீசார், அவரைக் கைது செய்ய முயற்சிக்கின்றனர்.

அவர் வசிக்கும் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரின் செயலை செல்போனில் படம்பிடிக்கின்றனர். இது தொலைக்காட்சிகளில் வெளியாக, விஷயம் சூடு பிடிக்கிறது.

இந்த சூழலில், என்ன நடந்தது என்றறிய அந்த போலீஸ் குழுவை அழைத்து விசாரணை நடத்துகிறார் போலீஸ் டிஜிபி ஆஷா பிரமோத் (மது). அப்போது, 100க்கு போன் செய்த பெண் தன் மகள் பூஜா (ஸ்மிருதி வெங்கட்) என்று அறிந்ததும் அதிர்ந்து போகிறார்.

கடத்தப்பட்ட பூஜாவைக் கண்டறிய, ஒரு அண்டர்கவர் ஏஜெண்டை ஏற்பாடு செய்யச் சொல்கிறார். இதன் தொடர்ச்சியாக, போலீஸ் அதிகாரி விக்ரம் குமார் (அருள்நிதி) விசாரணையைத் தொடங்குகிறார்.

அப்போது, பூஜா கடத்தப்பட்டதற்கும் ஓராண்டுக்கு முன் நிகழ்ந்த ஒரு பெண்ணின் கொலைக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிகிறார்.

அதேநேரத்தில், ஒவ்வொரு நிகழ்வையும் அப்படியே கதையாக எழுதிச் செல்கிறார் சுப்பிரமணியன். எப்படி இது சாத்தியம் என்று குழம்பித் தவிக்கின்றனர் போலீசார்.

அதன் பிறகு என்ன நிகழ்கிறது என்பதைச் சொல்கிறது ‘தேஜாவு’.

ஒரு எழுத்தாளரின் கற்பனை உண்மையாகிறது எனும் புள்ளியில் திரைக்கதை தொடங்குகிறது.

ஆனால், அது கற்பனைதானா அல்லது அவருக்கு உண்மையான குற்றவாளிகளுடன் தொடர்பிருக்கிறதா எனும் நிலைக்கு உடனடியாகத் தாவுகிறது.

அதற்கேற்ப ஆஷா, விக்ரம் குமார் என்ற இரு பாத்திரங்களும் சுப்பிரமணியம் சொல்வதை ஏற்க மறுக்கின்றன. படத்தின் ப்ளஸ்ஸாகவும் மைனஸ் ஆகவும் இதுவாக இருக்கிறது.

’நோ’ லாஜிக்!

‘தேஜாவு’ திரைக்கதையில் லாஜிக் தேடத் தொடங்கினால், முதல் அரை மணி நேரத்திலேயே கதை முடிவுக்கு வந்துவிடும்.

தெரிந்தோ தெரியாமலோ, அதனை நியாயப்படுத்தும்விதமாக ‘கடைசி சிப்பை முதல்லயே குடிக்க முடியுமா’ என்ற வசனத்தில் ஈடுகட்டியிருக்கிறது இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன், கண்ணா ஸ்ரீவத்சன் இணை.

திரைக்கதையில் முதல் 20 நிமிடங்களை அச்யுத் குமார், காளி வெங்கட் ஆக்கிரமிக்கின்றனர். அவர்கள் பேசும் ‘ஒன்லைனர்’களுக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது.

ஏசியாக வரும் மைம் கோபி, டிஜிபியின் உதவியாளராக வரும் சேத்தன் ஆகியோர் வழக்கமான அலுவலக உடல்மொழியைப் பிரதிபலித்து கதாபாத்திரங்களாக மாறியிருக்கின்றனர்.

ஆனால், டிஜிபியாக வரும் மதுபாலா வரும் காட்சிகள் எல்லாம் செயற்கையாகத் தோன்றுகின்றன.

குறிப்பாக, ‘ப்ராம்ட்டிங்’ முறையில் அவர் வசனம் பேசியிருப்பது உச்சரிக்கும் வார்த்தைகளில் இருக்கும் இடைவெளிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. அவரது இருப்பு மட்டுமே இப்படத்திற்கு திருஷ்டி பரிகாரம்.

மதுபாலாவின் மகளாக வரும் ஸ்மிருதி வெங்கட்டுக்கோ, ப்ளாஷ்பேக்கில் காட்டப்படும் இளம்பெண்ணுக்கோ பெரிதாக ‘ஸ்கீரின் பிரசன்ஸ்’ வாய்ப்பு தரப்படவில்லை.

வில்லனாக வரும் ராமன் ராகவ் அளவோடு நடித்திருக்கிறார். அழகாகவும் வந்து போயிருக்கிறார். தமிழ் திரையுலகுக்கு இன்னொரு நாயகன் கிடைத்துவிட்டார் என்று தாராளமாகச் சொல்லலாம்.

படம் தொடங்கி 20 நிமிடங்களுக்குப் பிறகே அருள்நிதி திரையில் தோன்றுகிறார். அதற்கான ‘ஷாட்’ பில்டப்களுக்கு தியேட்டரில் கைத்தட்டல்கள் தெறிக்கின்றன.

படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வந்தாலும், ‘டெம்ப்ளேட்’ போலீஸ் அதிகாரி உணர்வு ஏற்படாமல் தவிர்த்திருப்பது அழகு.

ஒரு தயாரிப்பாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் இப்படத்தில் இணைந்திருக்கிறார் பி.ஜி.முத்தையா. இரவு நேரக் காட்சிகளை படமாக்கிய விதத்தில் மனதைக் கொள்ளை கொள்கிறார்.

’த்ரில்’ உணர்வை ஊட்டுவதில் கொஞ்சம் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் கிப்ரான்.

அருள் சித்தார்த்தின் படத்தொகுப்பு சீரான திரைக்கதைக்கு ஏற்றவாறு அமைந்தாலும், இடைவேளையில் காட்டப்படும் ஒரு பெண் பிணத்தின் பின்னணியை ‘அம்போ’வென விட்டிருப்பதை நிச்சயம் ஏற்க முடியாது.

அந்த தவறுக்கு காரணம் இயக்குனரா, படத்தொகுப்பாளரா என்ற கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே பதிலளிக்க முடியும்.

ஒரு பெண் கடத்தப்படுவது ஒரு நாவலாசிரியரின் எழுத்துடன் பொருந்திப் போவதில் இருந்து திரைக்கதையைத் தொடங்கியிருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். ஆனால், அது உண்மைதான் என்று காளி வெங்கட் பாத்திரம் மட்டுமே நம்புகிறது.

அதனைப் பார்வையாளர்கள் நம்புவதற்குள், கடத்தப்பட்ட பெண் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்குத் தாவுகிறது திரைக்கதை.

இதனாலேயே, ‘அப்போ அந்த எழுத்தாளர் பொய் சொல்றார் போலிருக்கு’ என்ற முடிவுக்கு பார்வையாளர்கள் உடனடியாக வந்துவிடுகின்றனர்.

இந்த இடத்தைச் செப்பனிட்டிருந்தால், இன்னும் ‘த்ரில்’ கூட்டியிருக்கலாம். போலவே, கிளைமேக்ஸில் வரும் திருப்பம் ’அட’ சொல்ல வைத்தாலும் அது புதிதல்ல என்பதையும் இயக்குனருக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

திரைக்கதையில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள், மதுபாலாவின் இருப்பு போன்றவற்றைப் புறந்தள்ளினால், இப்படம் இரண்டு மணி நேரம் நம் கவனத்தை ஈர்க்கிறது என்பதை மறுக்க முடியாது.

அந்த வகையில், அருள்நிதி நடிப்பில் வெளியாகும் மற்றுமொரு வெற்றிகரமான ‘த்ரில்லர்’ எனும் சிறப்பைப் பெறுகிறது ‘தேஜாவு’.

  • உதய் பாடகலிங்கம்
You might also like