நயன்தாரா: இருபது ஆண்டுகளில் 75 படம்!

நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’.  ZEE ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக திரைத்துறையில் மின்னிவரும் நயன்தாராவின் 75வது படமாக உருவாகிறது.

தமிழ்த் திரையுலகில் தன் கடும் உழைப்பாலும் திறமைமிகு நடிப்பாலும் மிகச்சிறந்த நடிகையாக உருவாகியுள்ளார் நயன்தாரா.

அற்புதமான நடிப்பு மற்றும் வலிமையான கதாபாத்திரங்களின் மூலமாக உலகம் எங்கும் வாழும் சினிமா பார்வையாளர்களை மகிழ்வித்துள்ளார்.

தன் மைல்கல்லான 75வது படத்தில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா பேசும்போது, “நாயகியை மையமாக வைத்து நகரும் இந்தக் கதையில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இது அவரது 75வது படம் என்பதால், எங்கள் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதில் நான் மிகுந்த கவனமாக இருக்கிறேன்.

திரைப்பட உருவாக்கத்தை கற்றுத்தந்த எனது குரு, என் ஆன்மா இயக்குநர் ஷங்கருக்கு மனமார்ந்த நன்றிகள். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது” என்றார்.

ZEE ஸ்டுடியோஸ் தென்னக தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால், “இருபது ஆண்டுக்கு மேலாக திரைத்துறையில் பார்வையாளர்களை மகிழ்வித்து வரும் நயன்தாரா நடிப்பில்,

நிலேஷ் கிருஷ்ணாவால் இயக்கப்படும் இந்தத் திரைப்படத்தை வழங்குவது பெருமை.

மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் சிறந்த கதைகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்” என்று குறிப்பிட்டார்.

இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

– பா. மகிழ்மதி

You might also like