சமகால கல்விச் சிந்தனைகள்: 4 / உமா
வகுப்பறைகளையே இன்னும் புரிந்துகொள்ளாத நமது கல்விமுறை தலைகீழ் வகுப்பறையை எப்போது புரிந்துகொள்ளப்போகிறது? இன்று நம்மிடம் உள்ள கல்வியின் மாற்றங்களும் வளர்ச்சியும் 18ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவானவையே.
முதன்முதலில் 1801இல் கரும்பலகைக் கண்டறிந்தபோது கற்றல், ஆசிரியரின் வாயிலிருந்து குழந்தைகளின் கண்களுக்கு மாறியதாகப் பேசப்பட்டது. அது ஒரு மிகப்பெரிய புரட்சியாகவும் பார்க்கப்பட்டது.
காலப்போக்கில் வகுப்பறைக் கற்றல், செயல்வழிக் கற்றலாக மாறியபோது கற்றல் கண்களிலிருந்து குழந்தைகளின் கைகளுக்குப் பயணப்பட்டது.
இப்படித்தான் கல்வி தன்னைப் புதுப்பித்து மாறிக்கொண்டே வருகிறது.
இன்றைய வகுப்பறைகளில் கூடுதல் மாற்றங்கள் அவசியமாக இருக்கிறது. கல்வி முறையிலும் மாற்றங்கள் இன்றியமையாததாக எதிர்பார்க்கப்படுகிறது.
வகுப்பறை, பாடப்புத்தகங்கள் ஆகியவற்றுள் மாற்றங்கள் அவசியமாகிறது.
ஆசிரியர்மய வகுப்பறைகள் குழந்தைகளுக்கான வகுப்பறைகளாக மாற்றம் பெற வேண்டும். ஆசிரியரது குரல்களைக் காட்டிலும் குழந்தைகளின் குரல்கள் அதிகமாக ஒலிக்க வேண்டும்.
அதுவே தலைகீழ் வகுப்பறையின் கருத்துரு பகிர்தலுக்கான களம் அது. உலக நாடுகள் பலவற்றில் இன்று தலைகீழ் வகுப்பறைகள் உருவாகியுள்ளன.
இங்குள்ள நிலையோ வேறாக இருக்கிறது. இன்றைய கல்வி முறை குழந்தைகளுக்கு வழங்கும் மன அழுத்தங்களும் சுமையான சிந்தனைகளும் ஆரோக்கியமற்ற சூழல் என்பதை நாம் எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியாது.
வீட்டைவிட்டு வெளியேறி தனது 5 வயதில் பள்ளிக்குள் அடியெடுக்கும் ஒரு குழந்தை தனது வாழ்நாளின் முதல் பகுதியில் ஏறக்குறைய 12 ஆண்டுக் காலங்களைக் கழிப்பது பெரும்பாலும் பள்ளியின் வகுப்பறைகளில்தான்.
ஆனால், அந்த வகுப்பறைகள் குழந்தையின் எதிர்பார்ப்புகளைச் சமரசமில்லாமல் நிறைவேற்றிவிடுகிறதா என்பதெல்லாம் கேள்வி உட்படுத்தப்பட வேண்டியவை.
என்றாவது நமது வகுப்பறைகள் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்ன என்ற உரையாடலுக்குள் குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளதா என்று சிந்திக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டல்லவா?
இறுகிப் போன மனநிலையில் மனம் திறக்க இயலாத சூழலையல்லவா திட்டமிட்டுக் கட்டமைத்துள்ளன நமது வகுப்பறைகள்.
சுதந்திரமான காற்றைச் சுவாசித்து தொட்டுணரும் மரம் செடிகொடிகளை எட்டி நின்றுகூடப் பார்க்காது, புத்தக வரிகளில் வாசித்து மனனம் செய்யும் கல்விமுறையல்லவா இங்கு வேர்விட்டு வளர்ந்து வந்துள்ளது.
புரியாத பாடங்கள், கட்டாய வகுப்புகள், போட்டித் தேர்வுகளுக்காகச் சிறு வகுப்புகளிலேயே பயிற்சி தருதல் என வகுப்பறை வன்முறைகளாகவே குழந்தைகளால் பார்க்கப்படுகின்றன.
வீடுகளிலும் புரிந்துகொள்ள மனிதர்கள் இல்லாத சூழல் வகுப்பறைகளும் இவர்களை வஞ்சிக்கும் களங்களாக மாறிட வகுப்பறைகள் மாணவர்களுக்கு வசப்படாமல் இறுக்கங்களை உருவாக்கும் கான்கிரீட் தளங்களாக மாறிவிடுகின்றன. இறுகிப்போன வகுப்பறைகளை இளகச் செய்ய வேண்டாமா?
குழந்தைகள் எப்படி கற்கிறார்கள் என்று அறிந்துகொள்ளும் உரையாடல்கள் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட வேண்டும்.
படைப்பாற்றல் திறன்களைக் கண்டறிவது ஆசிரியர்களது பொறுப்பும் கடமையும் என்பதாக மாறவேண்டும்.
குழந்தைகளில் போராடும் குழந்தைகள் என்பவர் ஒரு பிரிவினர்.
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடுபவர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், இடை நிற்றலில் பாதிக்கப்படுவோர்.
வேலைக்காகப் பள்ளிக் கல்வியைத் துறக்கும் குழந்தைகள் போன்ற பல கோணங்களில் போராடும் வகையினரைப் பார்க்க முடியும். அவர்களைக் கண்டறியும் கண்களும் நம்பிக்கை தரும் வார்த்தைகளும் வகுப்பறைக்குள் அவசியம். அது ஆசிரியர்களால்தான் சாத்தியம்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்பறைகளில் மற்ற மாணவருடன் இணைந்து கற்கும் முறையை நாம் பின்பற்றிவருகிறோம். உள்ளடங்கிய கல்வியைப் பெறும் அவர்களுடன் உரையாடுதல் கூடுதல் முக்கியத்துவம் பெறவேண்டியது.
கல்வித் திட்டங்களால் மட்டும் மாற்றங்கள் நிகழ்ந்து விடாது. ஆசிரியர்கள் கைகளில் தான் தலைகீழ் வகுப்பறைகளின் வெற்றி கையகப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மனது வைத்தால் மட்டும் கல்வித் திட்டங்களால் வகுப்பறையின் வழியாக மாற்றங்கள் நிகழும். அது மிகப் பெரிய சவாலான பணி தான். மிக மெதுவாகவே நிகழும். ஆனால் நிகழ்ந்துவிட்டால் அதன் விளைவுகள் ஒப்பிட இயலாத அளவில் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
ஆகவே, தலைகீழ் வகுப்பறைகள் இன்றைய கல்வி முறையின் அவசியத் தேவை.
– தொடரும்