பால் பாயிண்ட் பேனாவை மறக்க முடியுமா?

சிறு வயதில் பென்சிலை கையில் பிடித்து எழுதும்போது ஒரு உற்சாகம் ஏற்படும். பென்சில் கடந்து பேனாவுக்கு மாறும்போதும் ஏதோ பெரிய ஆளாக வளர்ந்து விட்ட மகிழ்ச்சி மனசுக்குள் கூத்தாடும்.

அப்போதெல்லாம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் பேனாவில் எழுத முடியும். நான்காம் வகுப்பு வரையும் பென்சில் தான். அந்தக் காலத்தில் விலை மலிவாக கிடைக்கும் பேனா என்றால் அது பால் பாய்ண்ட் பேனா தான்.

கையெழுத்து எப்படி இருந்தால் என்ன, அருகில் இருப்பவர்கள் எழுதி முடிப்பதற்குள் நாம் முடித்துவிட வேண்டும் என்ற குறும்புத்தனம் இருக்கும். பென்சில் என்றால் அழித்து விட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பவும் எழுத முடியும். ஆனால் பேனா என்றால் அது முடியாது.

பேனா வந்த பிறகு நமக்குள் ஒரு நிதானம், பொறுமை, அதோடு, அடுக்கிவைத்து எழுத்து அழகாக வரவேண்டும் என்று மெதுவாக எழுதத் தொடங்குவோம்.

கையெழுத்து அழகாக இருந்தால் கூடுதல் மார்க் எடுக்கலாம், ஆசிரியர்களிடம் நன்மதிப்பை பெற முடியும் என்ற காரணத்தால் ரசித்து ரசித்து எழுதிய காலங்களும் உண்டு.

தாத்தா, அப்பா, அண்ணன் என்று எல்லோரின் சட்டைப்பையில் ஒட்டிக் கொண்டு இருக்கும் பேனா என்றால் அது பால் பாய்ண்ட் பேனா தான்.

இன்றும் வங்கி, அஞ்சல் அலுவலகங்களில் சார், மேடம் கொஞ்சம் உங்க பேனா கொடுக்க முடியுமா? என்று கடன் வாங்கி கஞ்சத்தனம் இல்லாமல் தவறாக எழுதிய படிவத்தை கிழித்து எரிந்து விட்டு மறுபடியும் எழுதிவிட்டு அவர் வேலை முடிந்த பின் கையில் தரும் வரை பேனா கொடுத்தவர் கடன்காரன் போல் காத்திருந்து வாங்கிவிட்டு வந்த சோகங்கள் மறக்க முடியுமா?

அப்படிப்பட்ட சுகமான நினைவுகளை சுமக்க வைக்கும் பால் பாயிண்ட் பேனா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

பால்பாயிண்ட் பேனா நீண்ட காலமாக வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நபர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதுதான் வரலாறு.

ஒரு மனிதனுக்கு தேவை ஏற்படும் போது தான் கண்டுபிடிப்புகளும் தொடங்குகிறது. தொடக்க காலத்தில் தோள்கள் மீது எழுதுவதற்கு 1888ல் ஒரு பேனாவை உருவாக்கினார் ஜான் ஜே.லவுட்.

ஆனால், அவர் நினைத்தது போல் சுலபமானதாக இல்லை என்றே கூறவேண்டும். காகிதத்தில் எழுதுவதற்கு கடினமாக இருந்தது.

அதன்பிறகு 1938 ஆம் ஆண்டில் லாஸ்லோவ் பைரோ என்ற ஹங்கேரிய பத்திரிகையாளர் முதல் பந்துமுனைப் பேனாவைக் கண்டுபிடித்ததார். செய்தித்தாளில் அச்சிடப்பட்ட மை விரைவாக உலர்த்தினார், காகிதத்தை மென்மையாக்கி கொண்டார்.

எனவே அதே வகை மை பயன்படுத்தி பேனாவை உருவாக்க முடிவு செய்தார். வேதியியலாளர் ஜியோர்க்கியுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டனர். அதில் வெற்றியும் கண்டார்கள்.

இந்தப் பேனாவில் ஆறுமாதங்களுக்கு மை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை என தெரிந்தும் எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தனர். பேனாவின் நிப்புக்கு பதிலாக பந்து முனையை உருவாக்கினார்கள்.

அவர்கள் கண்டுபிடித்த இந்த பேனா இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு விற்பனைக்கு வரத்தொடங்கியது.

இந்த பேனாவிற்கு அவர் அர்ஜென்டினாவில் காப்புரிமை பெற்றார். பிரிட்டனில் மைல்ஸ் -மார்ட்டின் பென் நிறுவனம் 1945-இல் கிறிஸ்துமஸ் தினத்தில் முதல் பால் பாயிண்ட் பேனாக்களை பொதுமக்களிடம் விற்பனைக்கு கொண்டு வந்தது.

அதன் பிறகு பிரான்சில் பேனாக்களின் காப்புரிமையை வாங்கியவர் மார்செல் பிச். அவர் பால் பாயிண்ட் பேனாவில் லாபம் பெறாமல் அதை குறைவான விலைக்கு விற்க முடிவெடுத்தார் அதில் வெற்றியும் கண்டார்.

அர்ஜென்டினா பயணத்தில் இந்தப் பேனாவைப் பார்த்த மில்டன் ரெனால்ட்ஸின் இதற்கு மறுவடிவம் கொடுத்து தன் ரெனால்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தயாரித்து விற்றார்.

காலப்போக்கில் எவர் ஷார்ப் மற்றும் ரெனால்ட்ஸ் இடையே தொழில் போட்டி அதிகரிக்கத் தொடங்கியது.

காப்புரிமை பிரச்சனையில் ரெனால்ட்ஸ் விலகினார். பார்கர் பென்ஸ் நிறுவனம் புதிய பால்பாயிண்ட் பேனாவை 1954ல் அறிமுகப்படுத்தியது. ஐந்து ரூபாய் முதல் கிடைக்கும் இந்த பேனாவை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 10 ஆம் தேதி பால் பாய்ண்ட் பேனா தினம் அனுசரிக்கப்படுகிறது.

அய்யோ… நமக்கு மலிவாக கிடைக்கும் இந்த பால் பாயின்ட் பேனாவுக்கு இத்தனை பெரிய வரலாறு இருக்கு பாருங்க.

-யாழினி சோமு

You might also like