பெரியார், நாராயணகுரு, பகத்சிங் பாடங்கள் நீக்கம்!

– கர்நாடகத்தில் புது சர்ச்சை
*
வரலாற்றையே தங்கள் விருப்பத்திற்கேற்பத் திரிக்க முடியுமா? அப்படித் திரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது கர்நாடக மாநிலக் கல்வித்துறை.

மதவாதத்தின் கிளைகள் கல்வித்துறையிலும் படர ஆரம்பித்துவிட்டன.
முதலில் இஸ்லாமிய மாணவிகள் உடை விஷயத்தில் கெடுபிடிகளைக் காட்டி அது சர்ச்சை ஆனது.

தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, தங்கள் விருப்பப்படி பள்ளிப் பாடத்திட்டத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது மாநிலக் கல்வித்துறை.

அண்மையில் பள்ளிகளில் 7 முதல் 10 வகுப்பு வரை, வரும் கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தை மாற்றியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

அப்படி என்ன சர்ச்சை?

பாடத்திட்டத்தில் கேரளாவில் சமூகச் சீர்திருத்தத்தை உருவாக்கிய நாராயணகுரு, தமிழகத்தில் பல சீர்திருத்தங்களுக்குக் காரணமான பெரியார், போராடி உயிர் நீத்த பகத்சிங் – ஆகியோரைப் பற்றிய பாடங்களை நீக்கிவிட்டார்கள்.
இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

இவர்களைப் பற்றிய செய்திகளை நீக்கிவிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனத் தலைவரான கேசவ் பாலிராம் ஹெட்கேவரைப் பற்றிய கட்டுரையைப் பாடத்திட்டத்தில் விசேஷமாகச் சேர்த்திருக்கிறார்கள்.

இதற்கும் கண்டனம் எழுந்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்திருக்கின்றன. மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் எதைச் சேர்ப்பது, எதை நீக்குவது என்பதில் மதவாதம் தலையிட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்குக் கண்கண்ட உதாரணமாகி இருக்கிறது கர்நாடக அரசின் கல்வித்துறை.

யார் ஆட்சிக்கு வந்தாலும், பாடத்திட்டங்கள் வழியாக வரலாற்றைத் திரிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

வரலாறு என்ன, இவர்களின் அலுவலகத்துக் கரும் பலகையா?

இந்நிலை நீடித்தால் பாடத்திட்டங்கள் வழியாக எதுவும் நடக்கலாம்.
களைகளையே நெற்பயிராகக் கருத வைக்க முயற்சி நடக்கிறது. மற்ற மாநிலங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

– லியோ

You might also like