சமீபத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தொந்தரவு தரும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தந்து அனுப்பிவிடுவோம் என்று கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முழுவதும் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பும் விமர்சனமும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கல்வியாளர் உமா, பேஸ்புக் பக்கத்தில் கல்வி அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இதில், “மரியாதைக்குரிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களே…
மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக தொந்தரவு தந்தால் மாற்றுத் சான்றிதழ் தந்து அவர்களை வெளியேற்றி விட்டால் போதுமா?
பிற்போக்குத்தனமாக உங்களை சிந்திக்க வைப்பது எது? ஆசிரியர்களின் கதறலா? இல்லை அரசியல் வாதிகளின் குரல்களா?
ஒரு பொறுப்புள்ள பதவி உங்களுக்கு வாய்த்துள்ளது. இந்தத் தவறுகள் ஏன் நடக்கின்றன என ஆய்வு செய்தீர்களா?
கல்வித் துறையில் எத்தனை அலுவலர்கள் கோலோச்சுகின்றனர். SCERT, DIET நிறுவன விரிவுரையாளர்கள், BRTE அலுவலர்கள், ADPC, BE0, DE0, CE0 போன்றோரின் Academic side பணி என்ன?
ஒவ்வொரு பள்ளியையும், ஆய்வு செய்வதும் பிரச்சனைகளை அணுகுவதும் துறையை சீர்படுத்துவதும் தானே அவர்கள் வேலை, கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்த அடுக்கு முறை அதிகாரிகளின் பணி சரியாக இருந்தால் ஒரு மாணவன் / மாணவி இப்படி நடந்து கொள்வார்களா?
இந்த ஆய்வுகளைக்கூட செய்யாத கல்வித் துறையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தினந்தோறும் அறிவிப்புகள் வெளியிடுவதும் மாணவர் நடத்தைச் சான்றிதழ் குறித்து பேசுவதும் உங்கள் பதவிக்கு பெருமையல்ல திரு. மரியாதைக்குரிய கல்வி அமைச்சர் அவர்களே.
நடவடிக்கை எடுத்து பள்ளியை விட்டு நீக்கி விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? மக்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை அல்லவா? கைகழுவும் வேலையை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
வாய்க்கு வாய் சமத்துவம், சமூக நீதி என நீங்கள் சட்டப் பேரவையிலும் ஊடகங்களிலும் பேசுவதன் அர்த்தம் இதுதானா?
இங்கு பள்ளிக் கல்வியில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. ஆசிரியர் நியமனம் இல்லை, காலியான வகுப்பறைகள், ஆசிரியரது அறமற்ற கற்பித்தல் பணிகளில் சுணக்கம், பெற்றோரின் கவனிப்பின்மை, சமூக சூழல், ஆசிரியர்களிடையே ஒற்றுமை இன்மை, துறையின் இயலாமை, சரியான கற்பித்தல் முறைகளை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தாதது..
மதிப்பீட்டு முறைகளில் தோல்வி, உரையாடல் இல்லாத வகுப்பறைகள், பயன்படுத்தப்படாத பள்ளி நூலகங்கள், போட்டித் தேர்வுகளை நோக்கி நகரும் பாடப் பொருள்கள், பதிவேடுகள் சார்ந்த ஆசிரியர் பணி, பள்ளிக்குள் அரசியல்வாதிகளின் அத்து மீறல் உள்ளிட்ட இன்னும் ஏராளமான பிரச்சனைகளை உள்ளடக்கியதுதான் மாணவர்களின் நடத்தை மாற்றங்களுக்குக் காரணங்கள்.
அப்படிப் பார்த்தால் மேற்சொன்ன ஆசிரியர்கள், அலுவலர்கள் , அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மாணவனுடன் சேர்த்து வெளியேற்றும் வேலையை அரசு செய்ய வேண்டி இருக்கும்.
ஆகவே முதலில் மாணவர்களை TC, CC வைத்து அச்சுறுத்தாமல் துறையை உண்மையாகவே சீரமைக்கும் பணியை உரையாடல் வழியே மலரச் செய்யுங்கள்.
ஏனெனில் நீங்கள் குறிப்பிடும் மாணவர்கள் IAS பதவியிலிருக்கும் பெற்றோரின் குழந்தைகள் அல்ல, அன்னாடம் காய்ச்சிகளின் குழந்தைகள், முதல் தலைமுறை கல்வி வாய்ப்புக்குள் வந்திருக்கும் மாணவர்கள், அவர்களை வெளியேற்ற ஆரம்பித்தால் தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகளால் விளையும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் கல்வி கற்காமலேயே வெளியேறும் வாய்ப்புகள் உருவாகும்.
இது 21-ம் நூற்றாண்டு, ஆகையால் கல்வித் துறை இன்னும் பழமைவாதப் போக்குகளால் தன்னை பொலிவுபடுத்திக்கொள்ள முயலாமல் புதுமைகளை (ஸ்மார்ட் வகுப்பறைகளால் அல்ல) அணுகுமுறைகளில் விதைக்கும் காலம் அவசியம் என்பதை உணர்ந்து அறிவிப்புகளை வெளியிடுங்கள் மரியாதைக்குரிய கல்வி அமைச்சர் அவர்களே.
பா. மகிழ்மதி