தேர்வுகளுக்கு மாற்றம் எப்போது?

தேர்வு முறைக்கு மாற்றுவேண்டும் எனக் கேட்டால், 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே பறக்கும் படையுடன் (Flying Squad), அதோடு இணைந்து சமீபகாலங்களில் ஒரே மையத்தில் பார்வையிடும் நிலைப்படையும் (Standing squad) எனக் கூடுதலாக இறுக்கியுள்ளனர்.

இந்த ஏற்பாடுகள் செய்தும் முந்தைய ஆண்டுகளில் நாம் அறிந்திருந்த (திராத) செய்திகள் பல தனியார் பள்ளிகளில் நூதன முறைகளில் பார்த்து எழுத ஏற்பாடுகள் நடந்தன என்பதே.

அரசுப் பள்ளிகளில்தான் கூடுதல் கெடுபிடிகளை ஏவி கோலோச்சுவர் இந்தப் படையினர் என்பதெல்லாம் எதார்த்தம்.

அப்போதிருந்த இரண்டரை மணி நேரம் தேர்வை 3 மணி நேரமாக்கியதோடு, தேர்வுக் கண்காணிப்பை இறுக்குதல், பணியில் ஈடுபடுவோரைப் பயமுறுத்துதல் எனப் பட்டியல் நீள்கிறது.

முதன்மைத் தேர்வு நடத்தும் அலுவலர், துறை அலுவலர் என இருவர் நியமித்த காலம் போய் இப்போது 4 பேர் தேர்வு நடத்தும் மையம் ஒவ்வொன்றுக்கும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனில் குழந்தைகள் மீதான அதிகாரப் பரப்பு விரிவடைந்துள்ளது என்றே புரிந்து கொள்ளமுடிகிறது.

நான் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும்போது சமூக அறிவியல் தேர்வில் பார்த்து எழுத (Bit Paper) முயற்சி செய்த மாணவியை, பறக்கும் படையினர் கண்டுபிடித்ததால் தேர்வு எழுத விடாமல் 3 ஆண்டுகள் விலக்கி வைத்ததை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.

கல்வியிலிருந்து குழந்தைகளை வெளியேற்றும் முறையாகவே அதைப் பார்க்க முடிந்தது. அதே நிலைதான் இன்றைய 2022 இல் காப்பி அடிக்கும் மாணவர்களைத் தேர்வு எழுத மறுக்கும் முறை பின்பற்றப் போவதாகக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதற்காக அவர்கள் பார்த்து எழுதுவதை நாம் பாராட்டவோ ஊக்கப்படுத்தவோ இல்லை.

ஆனால் 30 ஆண்டுகள் கடந்தும் என்ன மாற்றத்தை நாம் உருவாக்கியுள்ளோம் என்ற கேள்வியும் வருத்தமும் வேதனையும் தான் மிஞ்சியிருக்கிறது.

உமாமகேஸ்வரி

வகுப்பறை கற்பித்தல் முறைகளில், மாணவர்களை அணுகுவதில் அவர்களிடம் வாழ்க்கையைப் புரியவைப்பதில், வாசிப்பைக் கொண்டுசேர்ப்பதில், மேலும் பள்ளி மற்றும் சமூகப் பிரச்சனைகளை உற்று நோக்கும் பண்பை இக்கல்வி முறை விதைத்திருந்தால் மேற்சொன்ன தேர்வுமுறைகளில் செயல்பாடுகளில் மாற்றம் வந்திருக்கும்.

அதை விடுத்து இன்னும் நாம் திருடன் – போலீஸ் விளையாட்டையே கடைப்பிடிப்பது நம்பிக்கை இழக்க வைக்கிறது.

இவை குறித்தெல்லாம் தமிழகத்திற்கென்று தனி கல்விக்கொள்கையை உருவாக்க நியமித்திருக்கும் கல்விக்குழு உறுப்பினர்கள் கலந்துரையாட வேண்டும் எனக் குழந்தைகள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

சு. உமாமகேஸ்வரி, கல்வியாளர்.

You might also like