தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்!

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டம் கொழுவாரி ஊராட்சியில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு அங்கு கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முதல்வர் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாப்பட்டு பகுதியில் ரூ 42.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 10,722 பயனாளிகளுக்கு வழங்கினார்

விழாவின்போது பேசிய முதல்வர்,

“திமுக ஆட்சியில் நிம்மதியாக உள்ளதாக மக்கள் பாராட்டி வருகின்றனர். தந்தை பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை, தமிழகத்தின் முன்னேற்றமும் இல்லை.

பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றோரால் தமிழருக்கு எதிரான சூழ்ச்சிகள் எடுபடாமல் போனது.

பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து சமூகத்தினரும் வசிக்கக் கூடிய முதல் சமத்துவபுரம் தமிழகத்தில் 1997-ல் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு உதாரணமே சமத்துவ புரங்கள். கொழுவாரி சமத்துவபுர திட்டத்திற்கு 2010ஆம் ஆண்டிலேயே நிதி ஒதுக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தால் திட்டம் கைவிடப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கிய திட்டத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி.

உள்ளாட்சித்துறை மக்களுக்கு மிகவும் நெருக்கமாக, மக்களோடு மக்களாக இருக்கும் துறை. மக்களுக்கான திட்டங்களை உடனடியாக செய்து கொடுக்கும் துறையாக உள்ளாட்சித் துறை இருக்க வேண்டும்.

வலுவான கிராமங்களை உருவாக்கினால் மட்டுமே வலுவான இந்தியாவை கட்டமைக்க முடியும். அதற்கு தமிழ்நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

05.04.2022  12 : 30 P.M

You might also like