உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதைத் தடுக்க, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போர் 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.
ஏற்கனவே, தலைநகர் கீவ் பகுதியில் நுழைந்துள்ள ரஷ்ய ராணுவம், நாட்டின் 2-வது பெரிய நகரான கார்கீவ்வில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. 14 லட்சம் மக்கள் வாழும் இந்நகரம் ரஷ்ய எல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு ஊடுருவிய ரஷ்ய துருப்புகள், எரிவாயு பைப்லைன்கள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தியது.
இதே போல், தலைநகர் கீவ் நகரை ஒட்டியுள்ள ஜூலியானி விமான நிலையம் அருகே எரிபொருள் கிடங்கையும் ரஷ்யப் படைகள் தகர்த்ததால் பெரும் வெடிச்சத்தம் கேட்டது.
கார்கீவ் நகரை கைப்பற்ற அங்குள்ள தெருக்களில் ரஷ்ய படையும், உக்ரைன் ராணுவமும் தீவிர துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டன.
பல இடங்களில் ரஷ்யப் படைகளை எதிர்த்து, பயிற்சி பெற்ற உக்ரைன் பொதுமக்களும் போர்களத்தில் இறங்கி சண்டையிட்டு வருகின்றனர்.
தலைநகர் கீவ், கார்கீவ், கெர்சன் ஆகிய 3 முக்கிய நகரங்களை கைப்பற்றுவதே ரஷ்யாவின் திட்டமாக உள்ளது.
இதற்காக துறைமுக நகரமான கெர்சனிலும் தீவிர தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் கெர்சன் மற்றும் பெர்ட்யான்ஸ்க் ஆகிய 2 நகரங்களை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இதே போல், 2வது பெரிய நகரமான கார்கீவ்வும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக ரஷ்யா முதலில் அறிவித்தது.
ஆனால், தீவிர எதிர் தாக்குதல் மூலம் ரஷ்ய படைகள் விரட்டப்பட்டு உள்ளதாகவும், மீண்டும் கார்கீவ் நகரம் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு உறுதி செய்தது.
அதே சமயம், நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை ரஷ்ய ராணுவம் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து ஏவுகணை, பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக தனியாக போர் புரியும் உக்ரைனுக்கு ஆதரவுகள் பெருகி உள்ளன.
ஏற்கனவே பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கிய நிலையில், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல உலக நாடுகள் நேற்றும் ஆயுதங்களை அனுப்பின.
இதுமட்டுமின்றி, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
சர்வதேச போர் விதிகளை மீறி உக்ரைன் மீது போர் தொடுத்து அப்பாவி பொதுமக்கள் உயிரை பலி வாங்கும் ரஷ்யா பதிலளிக்க வேண்டுமென சர்வதேச நீதிமன்றத்திலும் உக்ரைன் வழக்கு தொடுத்துள்ளது.
உக்ரைன் குடியிருப்புப் பகுதிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது ரஷ்யா பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களைத் திரட்டி, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் சமர்பிப்பதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் ரஷ்ய அரசுக்கு எதிர்ப்புகள் வலுப்பதால் அதிபர் புடின் போரை கைவிட வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, இவ்விவகாரத்தில் திடீர் திருப்பமாக பெலாரசில் ரஷ்யாவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு நேற்றிரவு ஒப்புக் கொண்டது.
இதற்காக உக்ரைனின் தூதுக்குழு பெலாரசின் எல்லையோர நகரமான கோமலுக்கு வர இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் நேற்று தகவல் வெளியிட்டன.
இதை உக்ரைன் அதிபர் அலுவலகமும் உறுதிபடுத்தி உள்ளது. பெலாரசில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்திருந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேறு நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி இருந்தார்.
பெலாரஸ் மூலமாக தங்கள் நாட்டில் ரஷ்ய படைகள் ஊடுருவி வரும் நிலையில் அங்கு பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என அவர் முதலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோமலில் ரஷ்ய குழுவுடன் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும், பேச்சுவார்த்தை நடக்கும் வரை உக்ரைனில் ராணுவ நடவடிக்கை தொடரும் எனவும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
26.02.2022 12 : 30 P.M