தாய்மொழி எனும் ஆதி ஊற்று!

பிப்ரவரி 21 – சர்வதேச தாய் மொழி தினம்

இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்கு, அது சார்ந்த எல்லாமே வணங்குதலுக்கு உரியது.

அந்த வகையில், அகப்பையில் சுமந்து புறவுலகம் தரிசிக்க வைத்த தாயைப் போலவே அறிவைப் பெருக்கி உள்ளிருக்கும் மனப்பரப்பை விசாலப்படுத்துவதில் தாய்மொழியின் பங்கினை இன்னதென்று வரையறைக்குள் அடக்க முடியாது.

எத்தனை மொழி பேசினாலும், ஒருவரின் தாய் மொழிக்கு ஈடிணை ஏதுமில்லை. சிறு வயதில் இதனைப் புரிய வைத்தது ஒரு கதை.

ஒரு நாட்டிற்குப் பல மொழிகளில் தேர்ச்சி பெற்ற ஒரு புலவர் வந்தாராம். எந்த மொழி பேசினாலும் பதில் சொன்ன அந்த புலவரின் தாய் மொழி என்னவென்று அறியும் ஆவல் மன்னருக்கு உண்டானது. என்ன முயன்றாலும், எவராலும் அதனைக் கண்டறிய முடியவில்லை.

அதனால், அதைக் கண்டறிபவர்களுக்கு பரிசும் தருவதாக அறிவிக்கப்பட்டது. எவராலும் கண்டறிய முடியாத அந்த ரகசியத்தை ஒரு பாமரர் அறிய வைத்தார்.

தூக்கத்தில் இருந்த புலவரை ஓங்கி அடித்தார். அவ்வளவுதான். அலறியடித்து எழுந்த புலவர் ‘ஆ.. அம்மா’ என்று கத்தியபோது அவரது தாய்மொழி என்னவென்பது தெரிந்து விட்டது.

அந்த மொழி என்னவென்ற தகவல் நமக்குத் தேவையில்லை. அனிச்சையாக நம்மையும் அறியாமல் நம்மிடம் இருந்து வெளிப்படுவது தாய்மொழி மட்டுமே. இதுவே, இக்கதையில் இருந்து நான் பெற்றுக்கொண்ட சேதி.

தாய்மொழிக்கு முக்கியத்துவம்!

இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுக்க சுமார் 6,500 மொழிகள் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகளும், அதில் இடம்பெறாத சுமார் 100 மொழிகளும் புழக்கத்தில் இருக்கின்றன.

அவை மட்டுமல்லாமல், சிறு குழுக்கள், சில குடும்பங்கள், சில மனிதர்களுக்கு மட்டுமே தெரிந்த மொழிகளும் கூட உண்டு.

பெரும்பாலும் ஆதிவாசிகளின் வழக்கு மொழியாக அமைந்த இம்மொழிகள், நகர்ப்புற இடப்பெயர்வினாலும் இயற்கை வாழ்விடச் சிதைப்பினாலும் அழிந்து வருகின்றன.

வெகு அரிதான சில உயிரினங்களில் ஓரிரண்டு மட்டும் உயிருள்ள ‘மம்மி’க்களை போல பாதுகாக்கப்படுவதுண்டு. அது போலவே, இம்மொழிகளும் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் அபாயத்தை எதிர்கொண்டு வருகின்றன.

இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் பிழைப்புக்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்வது அத்தியாவசியமாகிவிட்டது.

பிழைப்பு தேடி வேறிடம் செல்லும்போது, வீட்டுக்குள் மட்டுமே தாய்மொழி ஒலிக்கும் என்ற கட்டாயம் பெருகிவிட்டது.

எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் முயன்றால் மட்டுமே, அவர்களது தாய்மொழி குழந்தைகள் வழி தொடரும் நிலை வந்துவிட்டது.

மொரீஷியஸ், சிஷெல்ஸ் உட்பட உலகின் பல பகுதிகளுக்கும் சில நூறாண்டுகளுக்கு முன் இடம்பெயர்ந்த தமிழர்களின் தற்போதைய தலைமுறையினருக்கு, தமிழ் என்பது பெட்டகத்தினுள் வைத்து போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.

அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்த, அவர்களது சிந்தனையிலேயே தமிழ் ஒரு அங்கம் ஆகுமாறு செய்ய வேண்டும். அதனாலேயே, உள்ளூர் மொழி, ஆங்கிலம் உள்ளிட்ட அயல் மொழிகள் தவிர்த்து தாய்மொழியிலேயே கற்க வேண்டுமென்ற துடிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழ் மட்டுமல்ல, வேறு எந்த தாய்மொழியைச் சேர்ந்தவருக்கும் இந்த துடிப்பு பொருந்தும். மிகச்சில ஆயிரம் நபர்களால் மட்டுமே பேசப்படுவதாயினும் கூட, அவற்றை சிதையாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

தொழில்நுட்பமும் மொழிகளும்!

பாகிஸ்தான் உருவானபோது அதன் ஒரு பகுதியாக இருந்த வங்கதேசத்தில் பெரும்பாலானவர்கள் பங்களா அல்லது பெங்காலி பேசுபவர்களாக இருந்தனர்.

ஆனால், அங்கு உருது மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது.

அதற்கு எதிரான கிளர்ச்சியில், 1948-ல் பலர் உயிர் துறந்தனர். அதனைக் கவுரவப்படுத்தும் விதமாக, 1999-ல் யுனெஸ்கோ அமைப்பு பிப்ரவரி 21-ம் தேதியை ‘சர்வதேச தாய்மொழிகள் தினம்’ ஆக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, உலகெங்கும் தாய்மொழியைப் போற்றிப் பாதுகாக்கும் எண்ணம் மேலும் வலுப்பெற்று வருகிறது.

அந்த வரிசையில், 2022-ம் ஆண்டுக்கான நோக்கமாக ‘பன்மொழிக் கற்றலில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு’ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு மொழியைக் கற்பது எப்படி என்ற புத்தகம் படித்தும், வானொலி உள்ளிட்ட ஊடகங்களைப் பயன்படுத்தியும், சம்பந்தப்பட்ட மொழி தெரிந்தவர்களோடு பழகியும் அதனைக் கற்றுக்கொண்ட காலமொன்று உண்டு.

இன்று, தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு மொழியின் வரி வடிவம் தொடங்கி இயல்பு வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் விதம் வரை அனைத்தையும் மெய்நிகர் முறையிலேயே தெரிந்துகொள்ள முடியும்.

அப்படியொரு சூழலில், நம் மூளையின் பரப்பை விரிவுபடுத்தும் வகையில் வேறு சில மொழிகளையும் கற்றுக்கொள்வது நம் தேடலுக்கு வடிவம் தரும்.

புரிந்துகொள்ளும் திறன் அதிகமாகும்போது, வாழ்வின் இறுக்கங்கள் தானாக தளர்ந்து போகும்.

எது முதல் மொழி?

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி என்றும், அதற்கு அப்பாலான வரலாற்றைக் கொண்டது எனவும் பலவாறாக மொழிச் சண்டைகளுக்கு களம் அமைக்கப்பட்டு வருகிறது. அப்படியொரு வரலாறு இருப்பதாக யூகம் தோன்றினால், அதனை திசைமாற்றுவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

அவற்றைத் தோண்டியெடுப்பதைவிட்டு, உலகம் முழுவதும் ஒரே மொழி என்ற எண்ணத்தை வளர்த்தெடுக்க வேண்டும். அதாவது, மனிதர்கள் எந்த மொழியில் பேசினாலும் புரிந்துகொள்ள முடியும் என்ற நிலையை எட்ட வேண்டும்.

இன்றும் கூட, கொரிய மொழியில் பேசப்படும் மா, பா என்ற வார்த்தைகள் அம்மா, அப்பாவினைக் குறிக்கிறது என்றறியும்போது ஏற்படும் ஆச்சர்யம் சிறிதானதல்ல.

இது போல, எல்லா மொழிகளும் ஏதோ ஒரு கண்ணியில் இணைந்திருக்க வாய்ப்புண்டு.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வெறுமனே ஒற்றையெழுத்து ஒலியினாலே கருத்து பரிமாற்றம் ஏற்பட்டு, அதன் வழியே மொழிகள் உருவானதாகவும் கூறப்படுகிறது.

அதனால், மொழியின் பழமையைப் பெருமை பேசுவதை விட, அதிலிருந்து எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்றறிவதே இதம் தரும்.

மிக முக்கியமாக, தாய் மொழியில் கற்பதும் அறிவதும் அதன் மூலமாக வேறொரு மொழி குறித்து அறிவதும் மிக முக்கியம் என்பதை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

அதுவே, தாய் தந்த மகத்துவமான ஆதிப்பால் போன்று ஆரோக்கிய மனமுடைய மனிதர்களை வளர்த்தெடுக்கும்..!

– உதய் பாடகலிங்கம்

21.02.2022  2 : 30 P.M

You might also like