நீங்கள் எந்தப் பக்கம்?

நூல் வாசிப்பு:

இன்றைய காலகட்டத்தில் உள்ளூர் அரசியலிலிருந்து உலக அரசியல் வரை வெறும் 80 பக்கங்களில் யாரால் பேச முடியும் என்று கேட்டால், அது பேராசிரியர் சுப.வீ அவர்களால் மட்டுமே என்று தயங்காமல் சொல்ல முடியும்.

அவரது அறிவுக் கருவூலங்களின் அடுத்த வரிசையில் சேர்ந்துள்ளது “நீங்கள் எந்தப் பக்கம்?” என்கிற இந்த நூல்.

மையம் என்பது

எந்தத் தீர்வை நோக்கியும்

இழுத்துச் செல்லாது.

ஒருவன் அடிக்கிறான்.

இன்னொருவன் அடிபடுகிறான் என்றால்,

நாம் அடிப்பவன் பக்கமா,

அடிபடுகிறவன் பக்கமா

என்பதைச் சொல்வதுதான்

நேர்மை. நான் மையமாக

இருக்கிறேன் என்றால்,

மறைமுகமாக

அடிக்கிறவனை

ஆதரிக்கிறேன் என்றுதான்

பொருள்!

-என்ற வரிகளுடன் ஆரம்பிக்கிறது இந்த நூல்.

அதற்குப் பொருத்தமாகவே, மாக்சிம் கார்க்கியின் “நீங்கள் எந்தப் பக்கம்?” என்கிற வரிகள் நூலின் தலைப்பாகச் சூட்டப்பட்டிருக்கிறது.

சமூக அரசியலைப் பற்றி மட்டுமின்றி, பொருளாதார அரசியலைப் பற்றியும் யாருக்கும் எளிமையாகப் புரியும்படியான கட்டுரைகள் நூலின் தொடக்கத்திலேயே இடம்பெற்றுள்ளன.

ஆர்.எஸ்.எஸ்.-இன் கோட்பாடுகள், சாணக்கியர், கோல்வால்கர் ஆகியோரின் மொழிகளிலேயே நுட்பமாக விளக்கப்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் மருத்துவர் என்ற அடைமொழி கொண்ட இருவரால் சாதி அரசியல் எவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளது, வளர்க்கப்பட்டு வருகிறது என்பதைச் சுட்டும் கட்டுரையில் இன்றைய இளைய தலைமுறை அறிய வேண்டிய செய்திகள் நிறையவே உள்ளன.

சீமான் பேசும் போலித் தமிழ்த்தேசியம் இன்று மதவழித் தேசியமாக உருப்பெற்று வருவதன் ஆபத்தையும் சுட்டிக்காட்டி, நான் திராவிடத்தின் பக்கம், நீங்கள்? என்ற தெளிவான கேள்வியை உங்கள் முன்னால் வைக்கிறது இந்த நூல்.

அண்மையில் கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்நூலைப் பெற 9940407468 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

– வெற்றிச்செல்வன்

நன்றி: முகநூல் பதிவு

You might also like