19 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளிகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், 2020 மார்ச் 10-ல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு, முதல் அலை முடிந்ததும், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலால், 2020-21ம் கல்வியாண்டில், அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து, செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்ந்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கின.

அதே நேரத்தில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளில், ‘ஜூம் செயலி, கூகுள் மீட்’ வழியே, ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டன.

அரசு பள்ளி மாணவர்களுக்கு சில இடங்களில், ‘வாட்ஸ் ஆப்’பில் ஆசிரியர்கள் பாட குறிப்புகளை வழங்கினர். அரசின் கல்வி, ‘டிவி’யில் பாடங்களின் ‘வீடியோ’க்கள் ஒளிபரப்பாகின.

இதனால், அரசு பள்ளி மாணவ – மாணவியருக்கு கற்பித்தல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கடந்த 19 மாதங்களாக வீடுகளில் அடைந்து கிடந்து, கற்பித்தல் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட, ஏராளமான மாணவ – மாணவியர் இன்று பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்தனர்.

இந்த மாணவர்கள் சுழற்சி முறையில், தினமும் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் ஆர்வமூட்டி, மகிழ்ச்சியுடன் அவர்களை நடத்த, பல்வேறு முயற்சிகளை பள்ளிகள் மேற்கொண்டுள்ளன.

இதனிடையே அரசு தரப்பில், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், பள்ளி வாசலில் நின்று மாணவர்களை மனமகிழ்வுடன் வரவேற்றனர்.

You might also like