– இறுதியாக பரிசோதித்த மருத்துவரின் பேட்டி
பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீர் மாரடைப்பால் காலமானார். 46 வயதான புனித் ராஜ்குமாரின் விருப்பப்படி உடனடியாக கண்கள் தானம் செய்யப்பட்டன.
இதையடுத்து யஷ்வந்த்பூர் அருகிலுள்ள கண்டீரவா ஸ்டுடியோ வளாகத்தில் தந்தை ராஜ்குமாரின் நினைவிடம் அருகில் புனித் ராஜ்குமாருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆளுநர் தாவர்சந்த் கெலாட், அமைச்சர்கள் அசோக், சோமண்ணா, முனிரத்னா மற்றும் பிரபலங்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், புனித் ராஜ்குமாரை கடைசியாக பரிசோதித்த மருத்துவர் ரமண ராவ் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த விளக்கத்தில், “நான் ராஜ்குமாரின் குடும்ப மருத்துவர் என்பதால், அப்புவை (புனித்) சிறுவயதில் இருந்தே தெரியும்.
அவரது தந்தையை அவர் அழைப்பதை போலவே என்னையும் ‘அப்பாஜி’ என்றே அழைப்பார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அப்புவும் அவரது மனைவியும் மருத்துவமனைக்கு வந்தனர்.
உடற்பயிற்சி மேற்கொண்ட போது நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்தார். அவரை பரிசோதித்த போது ரத்த அழுத்தமும், இதயத் துடிப்பும் சீராக இருந்தது. நெஞ்சு வலியும் மூச்சு திணறலும் இல்லை.
ரத்த அழுத்தம் 150/92 ஆக இருந்தாலும் அதிகளவில் வியர்த்தது. அதற்கு அப்பு, உடற்பயிற்சி செய்ததால் வியர்வை வருகிறது, சோர்வாக இருக்கிறது என்று கூறினார்.
ஈசிஜி எடுத்து பார்த்தபோது, மாரடைப்பு ஏற்பட்டது தெரிந்தது. உடனடியாக அப்புவிடம் தெரிவிக்காமல், அவரது மனைவி அஷ்வினியிடம் தகவலைத் தெரிவித்தேன். உடனடியாக விக்ரம் மருத்துவமனையை தொடர்பு கொண்டு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தேன்.
11.20 மணி வரை அப்புவின் ரத்த அழுத்தமும், இதய துடிப்பும் சீராகவே இருந்தது. அவரே நடந்து சென்று தன் காரில் அமர்ந்தார்.
இதயத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் படுத்துக் கொள்ளுமாறு கூறினேன். 5 நிமிடங்களில் விக்ரம் மருத்துவமனையை அடைந்தார். அதற்குள் கடும் மாரடைப்பால் வழியிலே உயிரிழந்துள்ளார்.
விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவரது இதயம் செயல்படவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடும் மாரடைப்பு ஏற்படும் போது நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலே காப்பாற்றுவது சிரமம். எனினும் 3 மணி நேரம் மருத்துவர்கள் அப்புவின் உயிரை காப்பாற்ற போராடியுள்ளனர்.
அப்புவுக்கு நீரிழிவு நோயோ, இதய நோயோ, உயர் ரத்த அழுத்தமோ இல்லை. இந்த திடீர் மாரடைப்பு எதனால் ஏற்பட்டது என விளக்க முடியவில்லை.
இதயத் துடிப்பு திடீரென நின்றுவிடுவதால் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்தத்தை வழங்க முடியாமல் போவதால் உடனடியாக மரணம் நிகழ்ந்துவிடுகிறது” எனக் கூறுகிறார் மருத்துவர் ரமண ராவ்.