முல்லைப் பெரியாறு அணை: ஏனிந்த அரசியல்?

‘மொழி’ போன்ற தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிற கேரள நடிகரான பிருத்விராஜ் அங்கு பெருமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் வெளியிட்டிருக்கிற முகநூல் பதிவு பலத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அப்படி என்ன அவர் பதிவிட்டிருக்கிறார்?

“உண்மைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் எதுவாக இருந்தாலும், 125 ஆண்டுகள் பழமையான அணை இன்னும் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சரியானதைச் செய்ய வேண்டிய நேரம் இது.” என்று பதிவிட்டிருப்பதோடு, நிறைவாக  “முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும்” என்றும் பதிவிட்டிருக்கிறார்.

அது தான் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். நடிகர் பிருத்விராஜின் உருவப் பொம்மையை எரித்திருக்கிறார்கள். அவர் வீண் வதந்தியைப் பரப்புவதாகக் கண்டித்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் அண்மையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் “அணை மிகவும் வலுவாக உள்ளது” என்று ஒன்றிய அரசு ‘அபிடவிட்’டைத் தாக்கல் செய்திருப்பதை கேரளாவில் உள்ளவர்கள் கவனிக்கவில்லையா?

சரி, கேரள முதல்வர்  என்ன சொல்கிறார்?

முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் “முல்லைப் பெரியாறு அணைக்கு இப்போதைக்கு எந்த ஆபத்தும் கிடையாது. அணை குறித்து சமூக ஊடகங்கள் மூலம் பீதியை உருவாக்கும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றிருக்கிறார்.

உச்சநீதிமன்றமும், கேரள முதல்வரும் இவ்வளவு தெளிவாக விளக்கிவிட்ட நிலையிலும், பெரியாறு அணையின் திடத்தன்மை பற்றிய சந்தேகங்களைப் பொதுவெளியில் எழுப்புகிறவர்களைப் பற்றி என்ன சொல்வது?

பீதியைக் கிளப்புகிறவர்கள் பற்றி யார் முடிவெடுப்பது?

  • யூகி
You might also like