ஆண்டுதோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த பிராந்திய திரைப்படங்கள் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், 2019-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
அதன்படி 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் இன்று நடந்தது. இந்த விழாவில் இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய விருதான ‛தாதா சாகேப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டது.
திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை தமிழ்த் திரைப்படத்துறையில் கடைசியாக சிவாஜிகணேசன் பெற்றிருந்தார்.
இந்த முறை, நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. விருதை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
ரஜினி விருது பெறும் நிகழ்வினை அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சவுந்தர்யா, மருமகன் தனுஷ் மற்றும் ரஜினியின் பேரக்குழந்தைகளும் கண்டுகளித்தனர்.
விழாவில், 2019ம் ஆண்டிற்கான சிறந்த படமாக மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான மரைக்கர் திரைப்படம் வென்றது.
இந்த முறை தமித் திரையுலகிற்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த தமிழ்ப் படத்திற்கான விருதை ‘அசுரன்’ படத்தை இயக்கிய வெற்றிமாறன், தயாரிப்பாளர் எஸ்.தாணு பெற்றனர்.
சிறந்த நடிகர் விருதினை ‘அசுரன்’ படத்திற்காக தனுஷ் பெற்றார்.
சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்த விஜய் சேதுபதியும், சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதை கே.டி என்கிற கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலும், சிறந்த இசையமைப்பாளர் விருதை அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு இசையமைத்த டி.இமான் பெற்றார்.
சிறப்பு ஜூரி விருதை ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபன் பெற்றார்.
விருது பெற்றதும் ரஜினிகாந்த் பேசுகையில், “விருது வழங்கிய மத்திய அரசுக்கும், என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி. தாதா சாகேப் பால்கே விருதை எனது குருவான இயக்குனர் கே.பாலசந்தருக்கு சமர்பிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.