அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பெயர் மாற்றப்பட்டதாக முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். அதன்படி அதிமுக தலைமை அலுவலகம் இனி ‘எம்ஜிஆர் மாளிகை’ என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கட்சியின் பொன்விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு ‘எம்ஜிஆர் மாளிகை’ என பெயர் சூட்டப்பட உள்ளது.
பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படும் என்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயாலிதா ஆகியோரின் படங்களுடன் சிறப்பு லோகோ வெளியிடப்படும்.
அதிமுகவின் வளர்ச்சிக்காக பணியாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத்துறையினருக்கு இந்த ஆண்டுமுதல் சிறப்பு விருதுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்குவதோடு, அதிமுகவில் பணியாற்றிய மூத்த முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.