பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்!

– தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை

கொரோனா தொற்றுக்கு மத்தியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் 1-ஆம் தேதியிலிருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது.

அதில், “ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கேற்றவாறு முகக்கவசம் அணிவதற்கும், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களின் உடல் வெப்பப் பரிசோதனை செய்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய சமூக இடைவெளியை ஏற்படுத்த வேண்டும்.

* மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வகுப்பறைகளில் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் சுழற்சி முறையில் கற்றல் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு ஏற்றவாறு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

* அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

* ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழலுக்கு ஏற்ப வேலைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அனைத்து வகையிலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பு ஆவார்கள்.

* நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள இருப்பதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி, எளிதில் அணுகுவதற்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும்.

* வாய்மொழி பயிற்சி, எழுத்துப் பயிற்சி, கதைகள் கூறுதல், ஓவியம் வரைதல் போன்ற செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

– என்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இதனை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like