சிவாஜிகணேசன் தயாரித்த முதல் தமிழ்ப்படம்!

தமிழ் சினிமாவில் சில படங்கள் அந்தக் காலகட்டத்திலேயே ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்கில் மிரட்டி இருக்கின்றன.

அப்படியான படங்களில் ஒன்று ’புதிய பறவை’. ரொமான்டிக் த்ரில்லர் கதையை கொண்ட இதை, மைக்கேல் ஆண்டர்சன் இயக்கிய பிரிட்டிஷ் படமான ’சேஸ் அ க்ரூக்டு ஷெடோவ்’ பாதிப்பில் உருவாக்கினார்கள்.

பாதிப்பில் என்ன, அப்படியே உல்டாவாக்கி வங்கமொழியில் ‘சேஷ் அங்கா’ என்ற பெயரில் உருவாக்க, அதை அப்படியே வாங்கியது சிவாஜி கணேசனின் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம்.

இந்த நிறுவனம் இரண்டு இந்திப் படங்களை ஏற்கனவே தயாரித்திருந்தாலும் தமிழில் முதலில் தயாரித்தப் படம் இதுதான். 1963 ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்தப் படத்துக்கு ’புதிய பறவை’ என்று பெயரில் உருவாக்கினார்கள். ஆரூர் தாஸ் வசனம் எழுதினார்.

பிரிட்டீஷ்/வங்கத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும் தமிழுக்காக இந்தப் படத்தில் சில மாற்றங்களை செய்திருந்தார்கள்.

சிவாஜி கணேசனுடன், சவுகார் ஜானகி, சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

படத்தை தாதா மிராசி இயக்கியிருந்தார். படத்தில் சிவாஜியின் தந்தையாகவும் அவர் நடித்திருக்கிறார்.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் அனைத்துப் பாடல்களும் அற்புதம். இப்போது கேட்டாலும் நின்று ரசிக்க முடியும்.

சுசீலாவின் குரலில், “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து”, “உன்னை ஒன்று கேட்பேன்”, பார்த்த “ஞாபகம் இல்லையோ”, டி.எம்.எஸ் குரலில், “ஆஹா மெல்ல மெல்ல நட மேனி என்னாகும்”, “எங்கே நிம்மதி..” என அனைத்து பாடல்களும் ரிபீட் ரகம்.

இதில், எங்கே நிம்மதி பாடலுக்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை இசை அமைப்பாளர்கள் பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.

வழக்கமாக குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்த சவுகார் ஜானகியை மாடர்ன் வேடத்தில் இதில் நடிக்க வைத்திருந்தார்கள்.

அதற்கு காரணம் சிவாஜிகணேசன். இந்தப் படத்துக்காக சிவாஜி கணேசனுக்கான உடைகள் சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து வடிவமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன என்பது உட்பட இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட ஸ்பெஷல்கள் இருக்கிறது.

மனைவியை கொன்றுவிட்ட தொழிலதிபரிடம் இன்னொரு பெண் பழகுகிறாள். இந்த நேரத்தில் இறந்துபோனதாகக் கூறப்படும் மனைவி எதிரில் வந்தால் என்னவாகும்? வருகிறார் மனைவி. குழம்புகிறார் கணவர்.

இவர் என் மனைவி இல்லை என்றும் அவரை கொன்றுவிட்டதாகவும் அவர் அடித்துக் கூற, பிறகு என்ன நடக்கிறது என்கிற திருப்பம்தான் படம்.

’புதிய பறவை’ வெளியாகி ரிபீட் ஆடியன்ஸ்களால் தியேட்டர்கள் நிரம்பி வந்தது என்றால் அது மிகையல்ல.

சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த முதல் தமிழ்ப்படம் படம் இது என்றாலும் பிறகு சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் என்று பெயரை மாற்றி பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தார் சிவாஜி.

-அலாவுதீன்

You might also like