பூனைகளின் உலகைப் பேசும் நெடுங்கதை!
சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 5
பொறியியல் பட்டதாரியான தரணி ராசேந்திரன் திரை வெளியில் சாதிக்கும் கனவுகள் கொண்ட இளைஞர். ஓவியர் வீர சந்தானத்தை நாயகனாக வைத்து ‘ஞானச்செருக்கு’ திரைப்படத்தை இயக்கியவர். தற்போது அவர் ‘நானும் என் பூனைக்குட்டிகளும்’ என்ற புதினத்தை வெளியிட்டிருக்கிறார்.
“நானும் என் பூனைக்குட்டிகளுடனான என் பயணத்தில் நான் கடந்துவந்த, கடக்கும் உணர்வுகள், நிகழ்வுகள், மனிதர்கள்தான் கதை வடிவில் எழுத்தாக வடிவம் பெற்றுள்ளான்.
இதை முழு புனைவாக மாற்ற எனக்கு விருப்பமில்லை. அனுபவம் சார்ந்த நடையிலேயே நடந்த, நடக்கும் அனைத்து நிகழ்வையும் எழுதியிருப்பேன். இதைப் படிக்கும் வாசகன் வெறும் புனைவு என்று மட்டும் நினைத்துக் கடந்துவிடக் கூடாது” என்கிறார் புதின ஆசிரியர்.
அதாவது இந்தக் கதையில் ஆசிரியர், கதை மாந்தர்கள் மற்றும் ஒரு பூனைக் குட்டியும் கதை சொல்லியாகப் பயணிக்கும். இந்தக் கதையைப் பெரியவர்கள் பெருமளவில் சிறுவர்களிடமும் விடலைப் பருவத்தினரிடமும் எடுத்துச் செல்லவேண்டும் என நினைக்கிறேன் என்று கூறும் தரணி ராசேந்திரன், எப்படியோ ‘நானும் என் பூனைக் குட்டிகளும்’ என் நடையிலேயே உள்ளது. படிப்பவர்களுக்கு இது ஒரு பார்வையை, ஊக்கத்தை, உணர்வைக் கொடுக்கும் என நம்புகிறேன் என்கிறார்.
“என் கண்கள் திறக்க முடியல. என்னோட கை, கால், உடம்ப அசைக்க முடியல. யாரோ என் மொத்த எலும்பையும் நசுக்கி ஒரு சிறு வாயில் வழியா வெளிய தள்ள பாக்குறாங்க…” எளிய நடையில் பூனைகள் பேசுவதுபோல தொடங்குகிறது 120 பக்கங்கள் கொண்ட புதினம்.
எழுத்தாளர் சாரு நிவேதிதா, “நானும் என் பூனைக்குட்டிகளும் படிக்கும்போது பல இடங்களில் என் கண் கலங்கியது. என்னை மிகவும் பாதித்த கதை” என்று சான்று வழங்கியுள்ளார்.
தரணி ராசேந்திரனின் சொந்த அனுபவம் மற்றும் நகரத்தின் இருளடர்ந்த சாலைகளில் கண்கள் மின்னச் சுற்றித் திரியும் உயிர்களின் மீதான கவனம் மற்றும் அக்கறையின் பேரில் அன்பும் கோபமும் கொண்ட மனிதராகிறார்.
அன்பு, அரவணைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான தடைகளுக்கு எதிரான கோபம் உப்புக் காற்றின் ஈரப்பதத்துடனும் உலர்ந்து வறண்டு வீசும் வெப்பக் காற்றின் தகிப்புடனும் வெளிப்படும். நானும் என் பூனைக்குட்டிகளும் நூலை வாசிப்பவர்கள் இந்த அனுபவத்தைப் பெறுவார்கள் என்ற கருத்தை முன்வைக்கிறார் மு.சந்திரகுமார்.
உலகமெங்கும் இலக்கியங்கள் மனித மாண்புகளை, காதலை, துயரை, போராட்டத்தை, வீரத்தை, வரலாற்றைப் பற்றித் தொடர்ந்து பல லட்சம் பக்கங்கள் எழுதப்பட்டு வருகிறது. எப்போதேனும் அதிசயமாக விலங்குகளைப் பற்றி தமிழ்ச் சூழலில் மிக அரிது. அதிலும் நானும் என் பூனைக்குட்டிகளும் என்கிற இந்தப் புதினம் மிக அரிதான வியப்பான சிறப்பான ஒன்று என்ற எழுத்தாளர் கரன் கார்க்கியின் கருத்தை நாமும் வழிமொழிவோம்.
நானும் என் பூனைக்குட்டிகளும்: தரணி ராசேந்திரன்
வெளியீடு: எழுத்து பிரசுரம், ஸீரோ டிகிரி பதிப்பகம்,
55. (7) பி. பிளாக், 6 வது அவென்யூ,
அண்ணா நகர், சென்னை – 40
விலை: ரூ. 150