தேர்தல் நடத்தை விதிகள் மக்களுக்கா? அரசியல் கட்சிகளுக்கா?
“நான் சொல்வதெல்லாம் உண்மை” – இப்படி நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுப்பதைப்போல ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்கும் முன்பு “நான் வாக்களிக்கப் பணம் வாங்கவில்லை” என்று வாக்குமூலம் அளிக்கச் சொல்லி ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது.
நல்லவேளையாக, நீதிமன்றம் அப்படி ஒரு உத்தரவை வாக்காளர்களுக்குப் பிறப்பிக்க முடியாது என்று சொல்லி அந்த மனுவைத் தள்ளுபடி பண்ணியிருக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் – அப்படி வாக்குமூலம் அளிக்க வேண்டியது அரசியல் சட்டத்தின் சார்பிலும், சுயேச்சையாகவோ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பொறுப்பே தவிர, வாக்காளர்களின் பொறுப்பல்ல.
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததும், தேர்தல் ஆணையம் காட்டுகிற பரபரப்பு ஒரு விநோதம். பறக்கும் படைகள் அமைக்கப்படும். கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்படும். ராணுவப் பாதுகாப்பும் கோரப்படும்.
இருந்தும் ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வளவு கண்காணிப்பு, பாதுகாப்புகளை மீறிப் பணப்பட்டுவாடா நடந்தபடியே இருக்கிறது. வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் விநியோகமாகின்றன. மது விநியோகமாகிறது. வேட்டி, சேலைகள், ஏன் டிசர்ட்கள் கூட வாக்காளர்களுக்குப் போய்ச் சேருகின்றன. சில போகும்வழியில் யதேச்சையாக மாட்டிக்கொள்கின்றன.
இப்படி ஒவ்வொரு தேர்தலின் போதும் பிடிபடும் பணம் அல்லது பொருட்களின் மதிப்பு மட்டும் பல கோடிகள்.
அவை பிடிபட்டதாகச் செய்திகள் வெளிவருவது எல்லாம் சரி! அதற்காக எந்த வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? யாரையாவது தேர்தலில் நிற்கத் தடை விதித்திருக்கிறதா தேர்தல் ஆணையம்? எந்தக் கட்சி மீதாவது இதுவரை நடவடிக்கை பாய்ந்திருக்கிறதா?
அப்படி இதுவரை தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட பொருட்களும், பணமும் என்ன ஆயின? தேர்தல் ஆணையம் இதற்கெல்லாம் வாக்காளர்களிடம் பதில் அளிக்க முடியுமா?
இதை எல்லாம் விட்டு வியாபாரம் அல்லது சொந்தத் தேவைகளுக்காகப் பணமும், பொருளோ எடுத்துச் செல்கிற வியாபாரிகளையும், சாதாரணப் பொதுமக்களையும் படாதபாடுபடுத்தி அவற்றைப் பரபரப்புப் செய்திகளாக்குவதால் என்ன பலன்?
பெரிய திமிங்கிலங்களை விட்டு பூச்சிகளை விரட்டுவதா சாகசம்?
இதுவரை விதிமுறை மீறல்களால் சில தொகுதிகளில் தேர்தலைத் தள்ளி வைக்கிற அதிசயம் எல்லாம் இங்கு தான் நடந்தேறியிருக்கிறது.
அதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் எடுத்த ஜனநாயக ரீதியான கடுமையான நடவடிக்கை தான் என்ன?
இதை விட்டு விட்டு, வாக்காளர்களை “நான் பணம் வாங்கவில்லை” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கச் சொல்வது வேடிக்கையாக இல்லை?
-யூகி
03.03.2021 10 : 50 A.M