“கை இருக்கிறவங்க கைதட்டுங்க.. அது நல்ல பயிற்சி’’

அ.தி.மு.க மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. திரளான கூட்டம். அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிக் கொண்டிருக்கிறார் – அவருடைய வழக்கமான பாணியில். முக்கால் மணி நேரத்திற்கு மேல் சரளமாகத் தங்கு தடையில்லாமல் போய்க் கொண்டிருந்தது அவருடைய பேச்சு.

என்ன நினைத்தாரோ, சட்டென்று பேச்சை நிறுத்தினார் நாவலர்.

முன் திரண்டிருந்த கூட்டத்தை ஒரு நிமிடம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். கூட்டமும் சுதாரித்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“நானும் அப்போ இருந்து பேசிக்கிட்டிருக்கேன்.. நீங்க அப்படியே இருக்கீங்க.. சரி.. உங்களுக்கெல்லாம் கைகள் இருக்கா.. சொல்லுங்க’’

கூட்டத்தில் சலசலப்பு.

“கைகள்  இருக்குல்லே.. அதைத் தட்டினா என்னா? கைகளைத் தட்டினா அது நல்ல பயிற்சி.. அதாவது நல்ல எக்சர்சைஸ்.. உடம்பும் சுறுசுறுப்பா இருக்கும்.. பேசுறவர்களுக்கும் சுறுசுறுப்பா  இருக்கும்.. எங்கே.. கை இருக்கிறவங்க அந்த எக்சர்சைஸைப் பண்ணிக் காட்டுங்க.. பார்க்கலாம்’’

அவ்வளவு திரளாகத் திரண்டிருந்த கூட்டமே அந்த ‘எக்சர்சைஸை’ப் பண்ணிக் காட்டி மாநாட்டு அரங்கம் கைதட்டலால் நிறைந்தது.

“பரவால்லே.. நிறையப் பேருக்குக் கையிருக்கு… ஒத்துக்கிறேன்’’ – கறுப்புச் சாயமிட்ட மீசை சற்றே நெளியச் சிரித்தபடிப் பேச்சைத் தொடர்ந்தார் நாவலர்.

அதற்குப் பிறகு பேச்சில் அங்கங்கே சில குரலைக் கீழிறக்கி, உயர்த்திச் சில சங்கதிகளை, சாகசங்களைக் காட்டி, நிறுத்தி மௌனம் காத்து, எப்படியோ பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தைப் பேச்சை நோக்கித் திருப்பியிருந்தார்.

இத்தனைக்கும் திராவிட இயக்க வரலாற்றை அவருக்கே உரிய பாணியில், இடையில் அவருக்கான சாமர்த்தியங்களுன் பேசிக் கொண்டிருந்தபோது, தி.மு.க மாதாட்டு மேடையில் பேராசிரியர் க.அன்பழகன் பேசுவதைப் போலிருந்தது.

அன்பழகனின் பேச்சு சீரியஸ் ரகம். திராவிட இயக்கக் கருத்தியல் சார்ந்த பேச்சு தான். புள்ளிவிபரங்களும், உணர்ச்சி வேகமுமாக அவருடைய பேச்சு உச்சியை நோக்கி நகர்ந்து தணிகிறபோது, ஒரு மணி நேரத்தைத் தாண்டியிருக்கும்.

அதே கருப்பொருள் தான். அதையே வெகு மக்களுக்குச் சொல்கிற விதம் மட்டும் நாவலரிடம் மாறுபட்டிருக்கும். பல்கலைக்கழக அரங்குகளில் தமிழ் இலக்கியம் பற்றிய பேச்சையும் அவரால் குறிப்புகளை வைத்துக் கொள்ளாமல் அவரால் பேச முடிந்திருக்கிறது.

சாலைகளில் வைத்திருக்கிற மைல் கற்களைப் பற்றி இவர் பேச்சிற்கிடையில் நகைச்சுவையாகப் பேசப் போய் அது சர்ச்சைக்குரியதானது. திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நெடுஞ்செழியன் தான் வேட்பாளர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, அங்குள்ள ஒரு சமூகத்தினரைப் பற்றிக் கேலி கலந்த நடையில் பேசப் போய் ஏகமாய் விமர்சனங்கள் எழுந்து அடங்கின.

அவருக்கே உரித்தான கேலி கலந்த பேச்சு கடைசி வரை அவருடன் நிழலைப் போலவே உடனிருந்தது. தனக்கென்று ஆட்களை உருவாக்கிப் பக்கபலத்தை உருவாக்கிக் கொள்கிற வித்தை எல்லாம் அவரிடம் இல்லை. வெளிப்படைத் தன்மையோடு இருந்ததே பல சந்தர்ப்பங்களில் அவருக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறது.

தி.மு.க, அ.தி.மு.க அமைச்சரவைகளில் நம்பர்-2 என்கிற இடத்தைப் பெற்றிருந்தவர் அறிஞர் அண்ணா இறந்தபோதும், எம்.ஜி.ஆர் மறைந்தபோதும் தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டவர்.

கல்வி அமைச்சர், நிதியமைச்சர், பொதுச்செயலாளர் என்று பல பொறுப்புகளை வகித்திருக்கிற நெடுஞ்செழியன் 12.01.2000–ல் மறைந்தபோது கலைஞர் எழுதிய அஞ்சலிக் குறிப்பு இப்படி முடிகிறது.

“நாவெல்லாம் தமிழ் மணக்க

 செவியெல்லாம் தமிழ் மணக்க

 சிந்தையெல்லாம் தமிழ் மணக்க

 அன்று மேடையேறிய நாவலர் என் நண்பர்

 தன்மான இயக்கத்தின் தூண்

 சாய்ந்து விட்டதே என

 தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார்.

 அவர் புகழ் வாழ்க!

 அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க!’’

– யூகி

18.02.2021   12 : 30 P.M

You might also like