மாஸ்டர்: நெக்ஸ்ட் ஜெனரேஷன் ‘வாத்தியார்’!
கொரோனாவுக்குப் பிறகும் ரசிகர்கள் மத்தியில் நடிகர்களின் நட்சத்திர அந்தஸ்து நீடிக்கிறதா, இல்லையா? இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியான தமிழ் திரைப்படங்களில் ஒன்று ‘மாஸ்டர்’.
கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியது, பொங்கல் விருந்தாகத் திரைக்கு வந்துள்ளது. விழாக்காலத்துக்கு ஏற்ற கொண்டாட்டத்தை, இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்குத் தந்திருக்கிறாரா இல்லையா என்பது கோடி ரூபாய்க்கான கேள்வி.
‘மாநகரம்’, ‘கைதி’ என்ற இரண்டு படங்களின் மூலமாக இண்டிபெண்டண்ட் பிலிம் மேக்கர் என்ற முத்திரையை உடைத்து ‘ஸ்டார் டைரக்டர்’ என்ற இடத்தை அடைந்திருக்கும் லோகேஷ், இப்படத்தில் விஜய்யை மாறுபட்ட கோணத்தில் காட்டியிருக்கிறார். அந்த வகையில், ‘கத்தி’க்குப் பிறகு மாஸ்டரில் பெர்பார்மன்ஸ் பின்னியெடுக்கிறார் விஜய்.
சிறைகளும் குற்றங்களும்!
குற்றம் செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்கும் இடம் சரிவர நிர்வகிக்கப் படாவிட்டால் என்ன நடக்கும்?
பவானி (விஜய் சேதுபதி) எனும் பதின்ம வயதுச் சிறுவன், அப்படியொரு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று கொடூரமான குற்றவாளியாக வெளியுலகம் திரும்புகிறார். அதன்பின், அந்த சீர்திருத்தப் பள்ளியையே தனக்கான களமாக்கிக் கொள்கிறார்.
அங்கு தண்டனை பெற வருபவர்களைத் தனது ஆட்கள் மூலமாகத் தனக்கான பகடைக் காய்கள் ஆக்குகிறார். வெளியுலகுக்குத் தெரியாமல் பவானி தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் நிலையில், அவரது பிடிக்குள் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு ஆசிரியராக வருகிறார் ஜேடி எனப்படும் ஜான் டேவிட் (விஜய்).
மிகப்பெரும் குடிகாரரான ஜேடி, ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார். தன் வாழ்வின் எந்தக் கணத்திலும் கவனத்தைச் செலுத்தாதவர், மாணவர்களுக்கு ‘கவனம்’ குறித்து வகுப்பெடுக்கிறார்.
மது போதையில் ஊறித் திளைக்கும் ஜேடி, ஒருபோதும் தான் குடிக்கத் தொடங்கியதற்கான காரணத்தைக் கூறுவதேயில்லை. அதேநேரத்தில், குடிப்பதை நிறுத்துவதுமில்லை.
சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு ஜேடி ஏன் செல்கிறார்? அவர் மது போதையை உதறும் அளவுக்கு, அங்கு என்ன நடந்தது? சாதாரண மனிதர்கள் கண்டறியாத பவானியை எப்போது நேரில் சந்திக்கிறார் என்பதைச் சொல்கின்றன மீதமுள்ள காட்சிகள்.
தனது படங்கள் மூலமாக ஏதேனும் ஒரு வகையில் சமூகத்துக்குத் தேவையான விஷயங்களைச் சொல்ல விஜய் ஆசைப்படுகிறார் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது ‘மாஸ்டர்’. ஆனால், அதனை மிக மேம்போக்காகச் சொல்லியிருப்பது பார்வையாளர்களிடம் அழுத்தத்தை உருவாக்கத் தவறியிருக்கிறது.
வித்தியாசமான விஜய்!
டென்ஷல் வாஷிங்டன், ரஸ்ஸல் க்ரோவ் நடித்த ‘அமெரிக்கன் கேங்க்ஸ்டர்’ பார்த்தவர்கள், இப்படத்தின் ஹீரோ, வில்லன் பாத்திர வார்ப்பை அதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். குறிப்பாக, போதைக்கு அடிமையான நாயகன் உண்மையின் பக்கம் நிற்பதும் எந்தவித தீயபழக்கங்களுக்கும் அடிமையாகாத வில்லன் தீமையையே தொழிலாக விரிப்பதும் அப்படத்தையே நினைவூட்டுகிறது.
அற்புதமான ஆக்ஷன் படத்துக்கான சிறப்புத் தகுதி, சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு நிகழும் ஹீரோ எண்ட்ரி. அதன்பின், திரை முழுக்க ஆக்கிரமிக்கும் அளவுக்கு கதை நிகழும் களத்தைச் சுருங்கச் சொல்லி விளக்குவது அவசியம்.
‘கேப்டன் பிரபாகரன்’ உள்ளிட்ட விஜய்காந்த் நடித்த திரைப்படங்கள் இதற்கான பாலபாடம்.
அந்த வகையில், விஜய் சேதுபதியின் பவானி பாத்திரம் எத்தனை வலுவானது என்பதை முதல் பத்து நிமிடங்களில் காட்டிவிடுகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதற்கடுத்து, விஜய்யை மிகசாதாரணமாகக் காண்பித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
காரணம், கோலியாத்தை வீழ்த்தும் டேவிட்கள் எந்தக் காலத்திலும் உண்டு என்பது இதன் பின்னிருக்கும் யதார்த்தம். மாறாக, ஆக்ஷன் காட்சி மூலமாகத் திரையில் நிகழ்கிறது விஜய்யின் அறிமுகம்.
ஆனாலும், ஜேடி எப்பேர்ப்பட்ட குடிகாரர் என்பதை சில ஷாட்களில் காட்டியிருப்பது சிறப்பு. கிட்டத்தட்ட இடைவேளை வரை, அந்த கதாபாத்திர அமைப்பை ரசித்துச் சுமந்து ‘வித்தியாச அனுபவம்’ தருகிறார் விஜய்.
தமிழ்நாட்டில் மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளும் அதிகமாகும் சூழலில், ரசிகர்களை நோக்கி ‘குடிக்காதீங்கப்பா’ என்று நாசூக்காக சொன்னதற்காகவே அவருக்கு ஒரு ‘சபாஷ்’ சொல்லலாம்!
‘பிகில்’ போலவே இதிலும் எம்.ஜி.ஆர். பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டிருப்பது தற்செயலானதா என்று தெரியவில்லை.
ராம்கோபால் வர்மாவின் ‘உதயம்’ போலவே, இதிலும் வில்லன் பெயர் பவானி. அப்பாத்திரத்தின் சிறுவயது காட்சிகளுக்கு விஜய் சேதுபதியின் குரலையே பயன்படுத்தியிருப்பது அற்புதமான உத்தி.
தன்னுடைய இடத்தைப் பிடிக்க நினைக்கும் அடியாளிடம், நெருப்புக்கோழி உதாரணத்தை விஜய் சேதுபதி சொல்வது சிறப்பு. இந்த அளவுக்கு ‘ஸ்கோப்’ கிடைத்தால் நாமும் வில்லனாக நடிக்கலாமே என்று சக நடிகர்கள் ஏங்கும் அளவுக்கு அமைந்திருக்கிறது அவரது பாத்திரப் படைப்பு.
‘மாளவிகா மோகனன் நடித்த காட்சிகள் எடிட்டிங்கில் மிஸ்ஸிங்’ என்று எண்ணும் அளவுக்கு இருக்கிறது திரைக்கதையில் அவரது இருப்பு.
ஆண்ட்ரியா, சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், நாகேந்திர பிரசாத், பிரேம்குமார் ஆகியோர் விஜய் கல்லூரிக் கால நண்பர்களாக ‘சும்மா’ வந்து போகின்றனர். நாசர், அழகம்பெருமாள், சாந்தனு, கவுரி, ரம்யா உள்ளிட்ட இரண்டு டஜன் கலைஞர்கள் கல்லூரிக் காட்சிகளில் ஆங்காங்கே தென்படுகின்றனர்.
அர்ஜுன் தாஸ் கும்பலுடன் வரும் தீனா உள்ளிட்டவர்கள் சீர்திருத்தப் பள்ளி காட்சிகளில் இருக்கின்றனர். இதுபோக விஜய் சேதுபதியின் அடியாட்கள், அவரது எதிரிகள் என்று ஒரு கும்பலே படத்தை நிரப்பியிருக்கிறது.
ஆனாலும், படம் பார்த்து முடிக்கையில் இவர்களில் எவரது முகமும் நினைவில் நிற்பதில்லை என்பது சோகம்.
திறமையான கலைஞர்களின் கூட்டணி!
அனிருத்தின் இசையில் பாடல்கள் வெளியாகி ஏறக்குறைய ஓராண்டாகி விட்டது. ஆனாலும், பாடல்கள் அனைத்தும் தியேட்டரில் ரசிகர்களைக் கொண்டாட்டமிட வைக்கின்றன.
அதேபோல, விஜய் மற்றும் விஜய் சேதுபதி வரும் காட்சிகளில் ரசிகர்களை உத்வேகப்படுத்துகிறது அனிருத்தின் பின்னணி இசை.
தனியார் கல்லூரி, சீர்திருத்தப் பள்ளி, காவல் நிலையம், வில்லனின் கூடாரம் என்று வெவ்வேறு களங்களுக்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு. கோபி பிரசன்னாவின் தயாரிப்பு வடிவமைப்பு அதற்கேற்ற வகையில் களம் அமைத்து தந்திருக்கிறது.
விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் உட்பட மிகச்சில இடங்களில் தனித்து தெரிகிறது ரத்னகுமார், பொன்.பார்த்திபன் மற்றும் லோகேஷின் உழைப்பு.
படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் கைகள் கட்டப்பட்டிருந்ததோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றன இடைவேளைக்குப் பிறகான காட்சிகள்.
மாளவிகா மோகனனை நாயகியாக அல்லாமல் ஒரு பாத்திரமாகக் கையாண்டிருந்தால், விஜய்யின் கல்லூரி அத்தியாயத்தை அறவே நறுக்கியிருந்தால், மது போதையில் மலங்கும் ஜேடியின் வாழ்க்கைக்கும் பவானி சாம்ராஜ்யத்துக்கும் சீர்திருத்தப் பள்ளி காட்சிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தந்திருந்தால், இப்படம் கொண்டாடப்பட்டிருக்கும்.
வழக்கமான சினிமாதனங்களை மீறி, கைதி கொண்டாடப்பட்டதற்கான காரணம் திரைக்கதைக்கு தேவையற்ற காட்சிகளை, வசனங்களைத் தவிர்த்ததே.
ஓரிரவில் அல்லது சில நாட்களில் நிகழ்வதாகக் கதையமைப்பதில் அபார வெற்றி பெற்ற லோகேஷ், மாஸ்டரில் அந்த நேர்த்தியான உள்ளடக்கத்தை தவறவிட்டிருக்கிறார்.
சுருங்கச் சொன்னால், விஜய்யின் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் விஜய் சேதுபதி ரசிகர்கள் திருப்தியடையாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும் ஒட்டப்பட்ட காட்சிகளைத் தவிர்த்தால் லோகேஷ் கனகராஜின் ‘ட்ரேட்மார்க்’ மீதமிருப்பதை உணர முடியும். அதனை நேரடியாக அனுபவிக்க முடியாமல் ஏமாற்றியிருக்கிறது ‘மாஸ்டர்’!
-உதய் பாடகலிங்கம்
14.01.2021