இந்தியாவின் நலனும் ஈழத்தமிழர் சிக்கல்களும்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக இலங்கைச் சென்றார். இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அவரிடம் பல விடயங்களை விவாதித்தார். இலங்கை அதிபர் கோத்தபயையும் சந்தித்துப் பேசினார்.

தமிழர்கள் பிரச்சனையில் 13-வது திருத்தம், மாகாண சபை முறையின் மாற்றம், தமிழர்களின் அரசியல் தீர்வு, ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் தமிழினம் அழிப்பு தொடர்பான நீதிகேட்ட தீர்ப்பாணைகள், இந்தியாவின் கொரானா தடுப்பூசி இலங்கைக்கு வழங்குது குறித்தும் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களிடம் பேசியபோது அந்த நிகழ்வில்,

“ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழ் சமுதாயத்தின் நீதி, சமத்துவம், அமைதி மற்றும் கெளரவத்திற்கு இந்திய அரசு துணை நிற்கும்”- என்று இலங்கைப் பயணத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

இப்படித்தான் இந்திராகாந்தி மறைவுக்குபின் மத்திய அரசில் இருப்பவர்கள் தொடர்ந்து 35 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டே வருகிறார்கள். ஆனால் ஈழத்தமிழர்களுக்கோ எந்தத் தீர்வும் இன்றுவரை எட்டப்படாமல் இருக்கிறது.

இலங்கை இந்தியாவிற்கு எவ்வளவு தான் விரோதமாக நடந்துகொண்டாலும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு இந்தியா ஆதரவளிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அது மேலும் இந்தியாவிற்கு சிக்கல்களை உருவாக்கும் என்பதை புரிந்துகொள்ள டெல்லி பாதுஷாக்களுக்கு மனம் வரவில்லை.

ஜெய்சங்கர் உறுதியளித்தவாறு இலங்கைக்கு தடுப்பூசி  தருவதில் ஒரு மனிதாபமான செயல் தான். இருப்பினும் இந்தியாவின் பங்களிப்புகளையும் உதவிகளையும் பெற்று இலங்கையில் பலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

அவை,

1. யாழ்பாணம் பலாலி விமான நிலையம் (தற்போது மூடப்படும் நிலை எனத் தகவல்)

2. காங்கேசன் துறையில் தாது மண் மற்றும் சிமெண்ட் ஆலைத் திட்டம்

3. கொழும்பு யாழ்பாணம் இரயில் பாதையை சீர் அமைத்துத் தந்தது

4. வவுனியாவில் புது பெரும் மருத்துவமனை

5. சம்பூர் மின் உற்பத்தி திட்டம்

6. இந்திய இலங்கை சுற்றுலாத் திட்டத்தை விரிவுபடுத்துவது

7. சூரிய வெப்பத்தைக்கொண்டு இந்தியா உதவியால் மின் சக்தி ஒப்பந்தம் செய்வது

8. இலங்கையில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் தொழில் பயிற்சியும் இந்தியா அளிப்பது

9. கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையம் இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை

10. எல்.என்.ஜி திரவ, இயற்கை எரிவாயுத் திட்டம்

11. ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல்

12. நகர்புறத்தில் வீதிகளைச் சீர்படுத்தித் தருதல்

13. விவசாய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி, இலங்கைத் தமிழர்களுக்கு விவசாயத்திற்கு டிராக்டர் வழங்குதல்

14. ஈழத் தமிழ் பிள்ளைகளுக்கு பாடசாலை செல்ல சைக்கிள் வழங்கல்

15. திரிகோணமலை துறைமுகத்தளம் மற்றும் எண்ணெய் உற்பத்தித் தொழில் ரீதியான ஒப்பந்தம்

16. இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது உள்ள சிக்கல்கள். இந்தப்பயிற்சி யாருக்காக, இங்கிலாந்தில் சுமார் இரண்டு லட்சம் இராணுவ வீரர்கள் தான் இருக்கிறார்கள், இலங்கையில் சுமார் 3 லட்சம் இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள், இது எதற்கு, இந்தியர்களை அழிப்பதற்காகவா..? என்று இந்தியா உணரவேண்டும்.

17. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் 400 கோடி மதிப்பிலானா கட்டுமானப் பணிகள் ஒப்பந்தம்.

18. பெட்ரோல் எண்ணெய் கிணறுகள் குறித்தான ஒப்பந்தங்கள்.

19. இந்திய இரயில் மற்றும் பேருந்துகள் விற்பனை ஒப்பந்தங்கள்.

– என சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி இலங்கைக்கு பலவகைகளில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இவற்றில் பலவற்றை நிறைவேற்ற முடியாமல் இலங்கை அரசு சண்டித்தனமும் செய்கிறது.

இலங்கை இந்தியாவிடம் தொடர்ந்து உதவிகள் பெற்றுக்கொண்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் இலங்கைத் தமிழர் புணர் வாழ்வுக்கு இந்தியா நிதி வழங்கியும் அது சரியாக அங்குள்ள தமிழர்களுக்கு சேரவில்லை.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் கிடைத்த தகவலின்படி ராஜபக்சே தொகுதியின் பக்கத்தில் இலங்கையின் தென்முனையின் சிங்கள பகுதியில் காலேவில் ரயில்வே சந்திப்பு, இரயில் நிலையம் போன்றவை இந்தியா கொடுத்த பணத்தில் கட்டினார்கள்.

அதையும் வெளியுறவுத்துறை அமைச்சர் மன்மோகன் சிங் காலத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா துவங்கி வைத்தார்.

இப்படியெல்லாம் பல குளறுபடிகள் இந்தியா கொடுத்த நிதியில் நடந்தன. மன்மோகன் சிங் அரசும் அதை கண்டுகொள்ளவில்லை.

சமீபத்தில் ஓராண்டுக்குள்ளே இந்தியாவிடமிருந்து இலங்கை இருமுறை நிதி உதவி பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் உதவிகளை பெறுகிறது. இந்தியாவிடம் ஒப்புக்கு உறவு வைத்துக்கொண்டு இலங்கை தன்னுடைய முழுமையான ஆதரவை சீனாவிற்கு கொடுப்பதை நாம் எப்போது சிந்திப்பது?

இந்த நிலையில் அங்குள்ள தமிழர்களை இந்தியா அரவணைத்தால்தான் இலங்கை இந்தியாவைக் கண்டு அச்சப்படலாம். இலங்கை இந்தியா மீது பயமில்லாமல் போனதற்கு காரணம் ஈழத்தமிழர்களுக்கு எவ்வளவு தான் பிரச்சினை செய்தாலும், இந்தியா நம்மை கண்டிக்காது, ஒப்புக்கு அதிகாரம் வழங்கு என்று சொல்லும். அவ்வளவுதான் என எடுத்துக்கொள்ளும் மனபாங்கில் இலங்கை அரசு இருக்கின்றது.

இதை இந்திய மத்திய அரசு உணர வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு இந்திரா காந்தி அணுகுமுறையின் படி நடவடிக்கை எடுத்தால் இலங்கை ஓரளவு தமிழர்கள் பிரச்சினைகளுக்கு நியாயத்தை வழங்கும். இப்படித்தான் இந்திரா காந்தி அணுகுமுறையைப் பார்த்து அச்சம் கொண்டார் ஜெயவர்த்தனா.

பெரும்பாலானோர் 1987ல் தான் இந்திய ராணுவம் அமைதிபடையாக இலங்கை வந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் 1971-லும் இந்திய ராணுவம் இலங்கை சென்றது என்பதை இவர்கள் அறியவில்லை. 1971ல் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் 2000 இந்திய ராணுவத்தினர் இலங்கை வந்தனர். ஜே.வி.பி கிளர்ச்சியை அடக்குவதாகக் கூறி அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் சுட்டதில் 6000 சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள்.

அடுத்து 1987ல் அமைதிப்படை என்று ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அமைதிப்படை வந்தபோது தென்னிலங்கைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தென்னிலங்கையில்தான் பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கியால் தாக்கப்பட்டார். வந்தது அமைதிப்படை என்றால் தென்னிலங்கையில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவத்தில் ஒரு வீரர் கூட தென்னிலங்கையில் நிறுத்தப்படவில்லை.

அதேவேளை எதிர்ப்பே தெரிவிக்காத வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில்தான் 10 தமிழருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டனர். அதுமட்டுமல்ல, இந்திய ராணுவம் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்களே நடைபெற்றது. 1971ல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 1987ல் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது. அதுவும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ருபாய் வீதம் 5400 கோடி ரூபாய் செலவு செய்து நடத்தியது.

இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் வரலாறு காணாத வறட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை இலங்கையில் இந்திய அமைதிப்படை 5400 கோடி ரூபாய் செலவு செய்து போர் நடத்தியது.

இந்திய அமைதிப்படையினரால் 10000 த்திற்கும் மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 800 க்கும் அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன.

இப்போது அங்குள்ள ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்தியா உணரவேண்டும். அதிகாரப் பூர்வமான பயணங்கள், பேச்சுவார்த்தை ஒருபக்கம் இருந்தாலும் கீழ்கண்டப் பிரச்சினையில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

1. வடக்கு கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் போர் (2009) முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், சிங்கள ராணுவம் தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து முகாம்கள் அமைத்து அங்குத் தமிழர்களை மிரட்டக் கூடிய வகையில் இருப்பதை ராணுவத்தினர் உடனே திரும்ப வேண்டும்.

2. மேலே குறிப்பிட்ட ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்ட விவசாய நிலங்களையும், வீடுகளையும் திரும்பவும் தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்தான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

3. முள்ளிவாய்க்கால் போரின்போது கைது செய்யப்பட்டத் தமிழர்களை உடனே விடுதலை செய்யவெண்டும்.

4. கடந்த 2009 போரின் போது காணாமல் போனவர்களை அறிந்து அதுகுறித்தான வெள்ளை அறிக்கையும் வெளியிட்டு, அவர்களை கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.

5. ஈழத்தில் தமிழ் விதவைகள் மறுவாழ்வுக்கும் சரியான நடவடிக்கைகள் இல்லை.

6. இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் குறித்தும் தெளிவான பார்வை சிங்கள அரசுக்கு இல்லை. இந்தியாவிலுள்ள அகதிகளை ஈழத்திற்கு திரும்பி அனுப்பி, அந்நாட்டு மக்களாக வாழ வழிவகை செய்யும் திட்டங்களையும் இந்தியா இலங்கையிடம் பேச வேண்டும். சிரிமா சாஸ்திரி ஒப்பந்தம் போல ஈழத்தமிழ் அகதிகள் பிரச்சனைகள் ஆகிவிடக் கூடாது.

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு இங்கு தங்கிய கட்டணத்தை (Staying Charge) ரத்து செய்து, எந்தவித பயணக் கட்டணமும் இன்றி அவர்களை கப்பலில் அனுப்பி வைக்க வேண்டும். இலங்கை சென்றபின் அகதிகளின் வாழ்வாதாரத்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்.

7. மாகாண கவுன்சிலை ஒழிப்பதற்கு சிங்கள அரசு இறங்கியுள்ளது, அது மேலும் சிக்கலை உருவாக்கும். மாகாண அரசுக்கு உரிய அதிகாரம் இந்தியாவிலுள்ள மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கியது போல வழங்கப்பட்டால்தான் அங்குள்ளத் தமிழர்கள் அமைதியாகவும் சம அந்தஸ்துடன் வாழ முடியும். ஆனால், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண முதலமைச்சர்களுக்கோ, மாகாண சபைக்கோ உறுதியளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்பதே உண்மை.

8. ஜெனிவா, ஐநா மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ள ஈழத்தமிழர்கள் இன அழிப்பு குறித்தான நியாயம் தமிழர்களுக்கு தீர்ப்பாணை மூலம் கிடைக்க வேண்டும்.

9. தமிழர்களுக்கு அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு (Referendum) அயலக பொறிமுறை கண்கானிப்பில் நடத்தவேண்டும்.

10. இன அழிப்புக்கான நியாயங்கள் கிடைக்க சர்வதேச சுதந்திரமான நம்பிக்கையான புலனாய்வும், நீதி விசாரணையும் நடத்த வேண்டும்.

11. வடக்கு கிழக்கு மாநிலம் சைவ மதத்தின் கேந்திரப் பகுதிகளாகும். அங்குள்ளத் தமிழர்கள் வணங்கும் இந்து மத கோவில்கள் படிப்படியாக அழிக்கப்படுகிறது. தமிழர் கலாச்சாரத்தைப் பாதுகாத்து முறைப்படுத்த வேண்டும்.

கிடைத்த தகவலின் படி (ஈழத்தமிழ் பேச்சு வழக்கில்) அழிக்கப்பட்ட சில கோவில்கள்.
· யாழின் கந்தரோடை கதுரகொட என்று மாற்றப்பட்டுள்ளது.

· யாழ் நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை பழைய பெளத்த சின்னமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.

· யாழின் சம்பில்துறை ஜம்புகோள பட்டின என்று பெயர் மாற்றம்.

· காங்கேசன் துறையின் சீமெந்து தொழிற்சாலை மற்றும் கப்பலின் சரக்குகளை இறக்கும் இடம் விடுவிக்கப்படாத நிலை.

· கீரிமலையிலுள்ள சமாதிப்பகுதி தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது.

· யாழின் பொன்னாலையிலுள்ள திருவடி நிலைய கடற்கரை கடற்படையின் ஆக்கிரமிப்பு.

· அல்லைப்பிட்டியின் பெரும்பகுதி இராணுவ காவல் அரண்கள் ஆக்கிரமிப்பு.

· யாழின் வேலணை மற்றும் மண்டைதீவு கடற்கரை பகுதி ஆக்கிரமிப்பு.

·பலாலிக்கு அண்மையிலுள்ள வயாவிளானில் உள்ள நில ஆக்கிரமிப்பு.

· வடகிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் ஆக்கிரமிப்பு.

· கிளிநொச்சியின் பூனகரி பகுதியிலுள்ள பள்ளிக்குடாவின் கரையோர ஆக்கிரமிப்பு.

· முல்லைத்தீவின் நந்திக்கடல் பகுதி ஆக்கிரமிப்பு.

· மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குள குடியிருப்பு ஆக்கிரமிப்பு.

· மன்னாரின் உப்புக்குளம் பகுதியின் கடற்கரை வாடி பகுதிகள் முஸ்லீம் குடியிருப்பு.

· மன்னாரின் திருக்கேதீச்சரத்திற்கு அண்மையிலுள்ள பொதுமக்களின் நிலங்களில் புத்த விகாரை அமைப்பும் ஆக்கிரமிப்பும்.

· வவுனியாவின் சமணங்குளம் என்கின்ற கிராமம் சப்புமல்புர என்று பெயர்மாற்றப்பட்டு சிங்கள குடியேற்றமாக மாற்றப்படுதல் – நாமல் இராஜபக்சயின் தலைமையில் பொலநறுவையில் உள்ள வானவன்மாதேவி ஈச்சரம் அழிவுறும் நிலையில் இருக்கிறது. இராசேந்திர சோழன் கட்டியது.

· வவுனியாவின் ஒலுமடுவிலுள்ள ஆதி இலிங்கேச்சரர் கோயிலிற்கு செல்வதற்கு தடையும் விகாரை அமைக்கும் முயற்சியும். இப்படியான நீண்ட பட்டியல் உண்டு.

12. இந்திய நாட்டுக்கும், உலகின் பல நாடுகளுக்கும், இடையில் நடைபெறும் கொள்கலன் – கப்பல் மூலமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் வருமானத்தால்தான், கொழும்பு துறைமுகம் இலாப வருமானம் பெறுகிறது.

பல பத்தாண்டுகளாக, பெரிதும் வெளிவராத, உண்மை கதை இதுவாகும். கொழும்பு துறைமுகத்தில் சுமார் 70%க்கு குறையாத கொள்கலன் பரிமாற்றம் இந்திய நாட்டுக்கு போவதும், வருவதும்தான்.

பெரும் கொள்கலன்களை சுமந்து வரும் பெரிய கப்பல்கள் பொதுவாக தமது பயணத்தில் ஒருசில துறைமுகங்களுக்குதான் போகும். எல்லா துறைமுகங்களிலும் நின்று போவது, வர்த்தக ரீதியாக பெரிய கப்பல்களுக்கு சரிபட்டு வராது.

இந்நிலையில் தென் இந்தியாவில் ஆழமான துறைமுகங்கள் இல்லாததால், இந்தியாவுக்கு வரும் பெருந்தொகை கொள்கலன்களை, கொழும்பில் இறக்கி விட்டு, பெரிய கப்பல்கள் தொடர்ந்து பயணிக்கின்றன. அவற்றை பின்னர் சிறிய இந்திய கப்பல்கள் வந்து, ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு செல்கின்றன.

இதுதான் பல ஆண்டுளாக நடக்கின்றது. இதனால்தான் கொழும்பு துறைமுகமே இயங்கிறது. கொழும்பு துறைமுக வருமானத்தால்தான் நாட்டின் ஏனைய துறைமுகங்களும் (காங்கேசன், ஹம்பந்தோட்டை, திருகோணமலை) செயல் படுகின்றன. பல் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவும் தென்னிந்தியாவில் தங்களுக்கு என்று ஒரு ஆழமான பெரிய கப்பல்கள் வந்து போகக்கூடிய துறைமுகங்களை அமைக்காமல் இலங்கைக்கு இந்தியா நேரு காலத்திலிருந்து விட்டுக்கொடுத்து கொண்டு இருக்கிறது.

இலங்கை அரசு, எப்போதாவது ஒருநாள் தமக்கு முழுமையான ஆதரவு நாடாக மாறும் என்ற எதிர்பார்பில் உள்ள இந்தியாவின் 50 ஆண்டுக்கால “இலவு காத்த கிளி இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை” ஆகி விட்டது.

புதிய இலங்கையையே தம் உழைப்பால் உருவாக்கிய மலையக தமிழரை, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்து, நாடு கடத்த இந்தியா, இலங்கையை சந்தோஷப்படுத்தும் ஒரே காரணத்துக்காக, இணங்கியது.

இது இலங்கை வாழ் மலையக தமிழருக்கு இந்திய மத்திய அரசு செய்த பெரும் வரலாற்று துரோகமாகும். இதனால், இலங்கையில் தமிழரின், மலையக தமிழரின் ஆக இரு தமிழ் பிரிவினிரின் அரசியல் பலம் குன்றியது. அதை தொடர்ந்து, கச்சத்தீவை, தமிழகத்தின் எதிர்ப்பை கவனத்தில் எடுக்காமலேயே இலங்கைக்கு கொடுத்தது.

விடயம் என்னவென்றால், இவ்வளவு செய்தும், இலங்கை, இந்தியாவுடன் உண்மை நட்பு கொள்ளவில்லை.

இப்போதும், இந்தியாவின் “இலங்கை கொள்கை” காரணமாக, ஒரு பிராந்திய துறைமுகமாக, இந்திய பொருட்களை ஏற்றி இறக்கியே, கொழும்பு துறைமுகம், இந்திய துறைமுகங்களை விட சிறப்பாக செயற்படுகிறது.

இந்நிலையில் இப்படி பொருளாதரத்தில் பலமடங்கு பெரிய நாடான இந்தியாவுடன் சேர்ந்து வளர வேண்டிய வாய்ப்பை இன்னமும் வளர்க்க வழி தேடாமல், மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகள், “பிராந்திய களஞ்சிய துறைமுகம்” என்பதை விட, கொழும்பை “உலக களஞ்சிய துறைமுகமாக” மாற்றும் யோசனையை சீனாவுடன் சேர்ந்து முன்னெடுக்க திட்டம் போடுகிறார்கள். இதை இந்தியா அரசுக்கு இப்பனும் புரிதல் இல்லை.

இலங்கையை தாண்டி தெற்கு இந்து சமுத்திரத்தில் உலகெங்கும் போகும் வணிக கப்பல்களை, “தங்கள் பொருட்களை இங்கே இறக்கி விட்டு போங்கள், நாங்கள் இங்கே இருந்து அவ்வந்த நாடுகளுக்கு அனுப்புகிறோம்” என்று சொல்லும், இலங்கை-சீனா கூட்டு கனவு திட்டம் இதுவாகும்.

அதாவது, இன்றுவரை வருமானம் தேடி தரும் இந்தியாவை புறக்கணித்து விட்டு, இந்தக் கனவு திட்டத்திற்காக சீனா ஆதரவுடன் கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கம் செய்யலாம் என்பது இவர்களின் நோக்கம். (இதில் சீனாவின் நோக்கம் என்னவென்பது சீனாவுக்கு மட்டுமே தெரியும்.)

இதற்காக, கொழும்பு துறைமுகத்தின் இன்றைய மிகபெரிய முனையமான South Asian Gateway Terminal (SAGT) என்பதை முழுமையாக சீனாவுக்கு கொடுத்து விட்டு, பக்கத்தில் துறைமுக நகரையும் (Port City) சீனாவின் ஆளுமைக்கு கீழ் கட்டுகிறார்கள். எதிர்காலத்தில் SAGT முனையத்தில் இருந்து துறைமுக நகருக்கு கொள்கலன்களை நேரடியாக இறக்கும் வாய்ப்பு கூட எதிர்காலத்தில் அவசியமானால் ஏற்படலாம்.

SAGT முனையம் முழுமையாக சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போது, அமைதியாக இருந்த அரசு சார்பு அரசியல் தொழிற்சங்கங்கள், இப்போது, இலங்கை அரசுக்கு 51%, ஜப்பான் நிறுவனத்துக்கு 29%, இந்திய நிறுவனத்துக்கு 20% என்ற கிழக்கு முனைய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்கிறார்கள்.

முதல் SAGT முனையம் முழுமையாக சீனாவுக்கு கொடுக்கபட்ட போது அமைதியாக இருந்தவர்கள், இப்போது “இந்தியாவுக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படுகிறது” என கூச்சல் எழுப்புகிறார்கள்.

ஆகவே இங்கே அப்பட்டமாக இந்திய எதிர்ப்புதான் தெரியுது. இந்நிலையில், இன்று இந்தியா பொறுமையின் விளிம்பில் இருக்கிறது.

இததனை பத்தாண்டுகளாக கொழும்பு துறைமுகத்துக்கு இலாபம் பெற்றுக் கொடுத்ததையும் மறந்து, சீனாவுடன் இலங்கை உறவாடுவதையும், இந்திய தென் கோடி எல்லைக்கு அண்மையில், கொழும்பு துறைமுகத்தில் சீனாவுக்கு கேந்திர இடம் கொடுக்கப்படுவது இந்தியாவிற்க்கு நல்லது அல்ல.

தமிழகத்தின் தென்கோடியில் குளச்சலில் புது துறைமுகம் ஒன்றை கட்டும் திட்டத்தில் இந்தியா இன்று இருக்கிறது. மேலும் கேரளத்திலும், அந்தமானிலும் புது துறைமுகங்கள் கட்டவும் முனைகிறது.

இவை உருவாகிவிட்டால் இந்திய கப்பல் – கொள்கலன்கள் கொழும்பு வர தேவையில்லை. இது இலங்கைக்கு பெரும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும்.

அதுமட்டுமல்ல, இலங்கை கனவு காணும் இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் ஏனைய பெரிய கப்பல்களையும் இந்த இந்திய துறைமுகம் இறக்கி வைத்து, அந்தந்த நாடுகளுக்கு அனுப்பும். குறிப்பாக சீன எதிர்ப்பு நாடுகளான ஜப்பானின், தென் கிழக்கு ஆசிய நாடுகளின், கொரியாவின் பெரிய கப்பல்களும் கொழும்பை விட, தென்னிந்திய துறைமுகத்தையேயே விரும்பும்.

சீனாவை நம்பி, பக்கத்து இந்தியாவை பகைக்கும் மெத்தப் படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு சிங்கள அரசியல் வாதிகளினால் இலங்கை, முட்டாள்தனமாக நடந்து கொள்கிறது. இதைப் பற்றியான புரிதல் இந்திய அரசுக்கு ஏற்படவேண்டும்.

13. இந்து மகா சமுத்திரம் அமைதி மண்டலமாகவும் இந்தியாவின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் அங்கே இன்றைக்கு உள்ள சூழல் என்னவென்றால் சீனா இலங்கையை தன் கையில் வைத்துக்கொண்டு இந்திய பெருங்கடலில் தன் வியாபாரத்தை பெருகிகொள்ள, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, நாடுகளுக்கு வணிகம் செய்ய இந்து மகா சமுத்திரத்தை ஆக்கிரமித்துள்ளது.

அதுமட்டுமல்ல ஹம்பன்தொட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு 85% பங்குகளை எடுத்துள்ளன.

சீனாவின் போர்க் கப்பல்களுக்கு இந்து மகா கடலில் என்ன வேலை, கடல் மார்க்கமாக எரிவாயு பாதைகளை அமைக்கவும், எண்ணெய் ஆராய்ச்சி செய்யவும் திரிகோணமலை, கச்சத்தீவுகள் வரை சீனாவின் ஆதிக்கம் எட்டிவிட்டது, அதுமட்டுமல்லாமல் திரும்பவும் டிகோகர்சியா அமெரிக்க ஏவுதளத்தை அமைத்துவிட்டது.

ஜப்பான் இலங்கையின் ஆதரவோடு இந்திய பெருங்கடல் எண்ணெய் வள ஆய்வை நடத்துகிறது. பிரான்ஸும் இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த முனைந்துள்ளது.

இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில் அமைதி மண்டலமாக இருந்த இந்தியப் பெருங்கடலை மாற்றியதற்கு காரணமாக இருந்தது இலங்கை தான். இது எதிர்காலத்தில் பாதுகாப்பிற்கான சிக்கல்களை உருவாக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

தற்போதைய நிலையில் இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது. நமக்கு நம்முடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாள், மியான்மார், வங்காள தேசம், இலங்கை என யாருடனும் சுமூகமான நட்புறவு இல்லை.

மாலத்தீவுடன் மட்டும் சுமூகமான உறவுள்ளது.  அதற்கு இந்தியப் பிரதமர் மோடி மாலத்தீவு வளர்ச்சிக்கு வழங்கிய கடனும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலை இந்தியா கவனிக்காமல் புறக்கணித்தால் என்ன செய்ய?

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை பயணத்தின் போதும் அதன் பின்னும் நடந்த சம்பவங்கள் இந்திய அரசு கவனிக்க வேண்டும்.

1. யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி உடைக்கப்பட்டது.

2. மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்  சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் 10 ஆண்டுகள் கழித்து 2015ல் குற்றவாளியாக கைதுச் செய்யப்பட்ட பிள்ளையார் இன்றைக்கு எந்த நீதிமன்ற விசாரணையுமின்றி அதிபருடைய அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்யப்பட்டார் என்பதெல்லாம் வேதனையான விடயங்கள்.

அதுமட்டுமல்ல சீனாவுடன் பேசிக்கொண்டு ஜெய்சங்கரோடு பேசியதெல்லாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வல்லரசாக வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆகவேண்டும் என்று நினைக்கும் நாம் நம் நாட்டின் தெற்கெல்லையில் உள்ள நமது கடல் ஆதிக்கத்தை இழக்கலாமா?

இதை எல்லாம் இந்திய அரசு கவனத்தில் கொண்டு இலங்கையில் பேசவும் மட்டுமல்லாமல் ஈழத்தமிழர்களின் உரிமை, இந்தியாவின் பாதுகாப்பை, இந்து மகா கடலில் இந்தியாவின் உரிமையை நிலை நாட்டவேண்டும். வெறும் பயணங்கள், பேச்சுவார்த்தை சம்பிரதாயங்கள் என கடந்த நாற்பது ஆண்டுகளாக நடப்பதில் எந்தப் பயனும் இல்லை.

14-01-2021

You might also like