வாக்குகளைக் குறி வைத்து சலுகையா?

அரசாங்கம் எந்த அறிவிப்பை வெளியிட்டாலும், அதனை சட்டப்பேரவைத் தேர்தலுடன் முடிச்சு போடுவது எதிர்க்கட்சிகளின் வழக்கமாகி விட்டது.

சில நாட்களுக்கு முன்னர், “தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் 2,500 ரூபாய் வழங்கப்படும்’’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

“சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டே இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்’’ என எதிர்க்கட்சிகள் கூக்குரல் எழுப்பின.

இப்போது சினிமா தியேட்டர் விவகாரம்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன.

கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து சில சின்னப்படங்கள் மட்டுமே திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. எந்தப் படமும் தியேட்டர்காரர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுக்கவில்லை.

விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் மட்டுமே திரையரங்கு உரிமையாளர்களின் கடைசி நம்பிக்கையாக உள்ளது.

ஓ.டி.டி. அதிபர்கள் “120 கோடி ரூபாய் தருகிறேன்’’ என மாஸ்டர் தயாரிப்பாளர் பிரிட்டோவுக்கு ஆசை காட்டியும், அந்த வலையில் அவர் சிக்கவில்லை.

தியேட்டர்களில் தான் மாஸ்டர் ரிலீஸ் என்பதில் உறுதியாக இருந்த அவர், வரும் 13-ம் தேதி தியேட்டர்களில் தனது படத்தை வெளியிட உள்ளார்.

பாதி இருக்கைகளுடன் மாஸ்டர் திரையிடப்பட்டால் தியேட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரிதாக காசு கிடைக்காத சூழல் உருவாகும்.

இதனால் மாஸ்டர் ஹீரோ விஜய், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து “தியேட்டர்கள் 100 சதவிகித இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்தார்.

திரையரங்கு உரிமையாளர்களும் இதே கோரிக்கையை முன் வைத்தனர்.

இதையடுத்து, திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளில் பார்வையாளர்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கம் போல், இதனையும் தேர்தலோடு தொடர்புப்படுத்தி எதிர்க்கட்சிகள் புலம்ப ஆரம்பித்துள்ளன.

“100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது அபாயகரமான நடவடிக்கை’’ என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பீட்டர் அல்போன்ஸ், “சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜயும், அவரது ரசிகர்களும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற சுயநல எண்ணத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் ஆதாயம் அடைவதற்காக தமிழர்களின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்’’ என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சும்மா இருப்பார்களா என்ன?காட்டமாகவே அவருக்கு பதில் அளித்துள்ளார்கள்.

பிரபல விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை இது:

“அரசியல் கட்சிகள் பெரும் கூட்டத்தைத் திரட்டி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. முதலமைச்சரும் பிரச்சாரம் செய்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திரளான மக்களைத் திரட்டி கிராம சபைக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். ஜவுளிக் கடைகள், நகைக்கடைகளில் திரளும் மக்கள் முகம் பார்த்து அளவளாவுகின்றனர்.

ஆனால் விதிகளை முழுமையாகப் பின்பற்றும் தியேட்டர்களில் 100 சதவிகித ஆட்களை அனுமதிப்பதை ஏன் எதிர்க்க வேண்டும்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தின் நிலை இப்படி இருக்க கேரள மாநிலத்தின் நிலவரம் என்ன தெரியுமா?

அங்கு 50 % இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க முதல்வர் பிணராயி விஜயன் அனுமதி அளித்துள்ளார்.

ஆனால் அங்குள்ள திரையரங்கு உரிமையாளர்களோ, “மின்சாரக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், கேளிக்கை வரியை நீக்க வேண்டும். இல்லை என்றால் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம்’’ என கூறிவிட்டனர்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கொச்சியில் நாளை தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சினிமா தயாரிப்பாளர்கள் ஒன்றாகக் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதனிடையே, அரசாங்கத்துடன் மோதல் போக்கைக் கடைபிடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ள மோகன்லால், தனது ‘திரிஷ்யம்-2’ திரைப்படத்தை ஓ.டி.டி தளத்துக்கு கொடுத்துவிட்டார்.

மற்றொரு பெரும் பட்ஜெட் படமான மோகன்லாலின் ‘மரக்கார் – அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

– எம்.மாடக்கண்ணு

06.01.2021 02 : 27 P.M

You might also like