சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி!
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் கடந்த 31-ம் தேதியோடு முடிவடைந்தது.
தொடர்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம் தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த சஞ்ஜீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்தது.
உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் இந்தப் பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை உயர்நீதிமன்ற தலைமைத் நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, 1961-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து 1990-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துக் கொண்டார்.
கொல்கத்தா, டெல்லி, ஜார்கண்ட், அலகாபாத், மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களில் பணியாற்றியுள்ள சஞ்ஜிப் பானர்ஜி நிறுவன சட்டங்கள், சமரச தீர்வு, அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றில் மிகப்பெரிய நிபுணராக இருந்துள்ளார்.
04.01.2021 11 : 50 A.M